வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

படத்தில் ஸபரியும் ராம லெட்சுமணரும்

வால்மீகி முனிவர் பெரிய ஜோதிட மேதை! ராமாயணம் முழுவதும் ஆங்காங்கே அவர் நட்சத்திர ரகசியங்களைச் சுட்டிக் காட்டுவதை அதை அறியும் நோக்குடன் படிப்பவருக்குப் புரியும்! வானத்தில் ராமாயணக் காட்சிகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்!

வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

By ச.நாகராஜன்

 

ராமாயணத்தில் ஜோதிடக் குறிப்புகள்

 

வால்மீகி முனிவர் பெரும் ஜோதிட மேதை. வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான ஜோதிடக் குறிப்புகளைக் காணலாம்.பாலகாண்டம் பதினெட்டாம் ஸர்க்கத்தில் ராமரின் ஜெனன ஜாதகம் பற்றி விரிவாகக் காணலாம்.இது போலவே பரத லக்ஷ்மண சத்ருக்னரின் ஜாதகங்களையும் காணலாம்.அதே போல ராமர் ஹனுமானிடம் போருக்கு இன்றே கிளம்பலாம் என வெற்றி தரும் உத்தர நட்சத்திரத்தைக் கணித்து சாதக தாராபலம் என்பதை உணர்ந்து கூறுகிறார். மறு நாள் ஹஸ்த நட்சத்திரம் தன் ஜென்ம நட்சத்திற்கு வதத் தாரை என்பதால் வெற்றி கிடைக்காது என்பதால் உடனே கிளம்புவதன் அவசியத்தை தாராபலம் சந்திர பலம் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்!

 

இதே போல தசரதன் ஆட்சியில் சனி ரோஹிணி நட்சத்திற்குள் புக இருக்கும் தருணத்தில் பெரும் தீங்கு ஏற்படும் என்பதை அறிந்த தசரதன் சனியை நோக்கி ஸ்தோத்ரம் செய்ய சனி தசரதனுக்கு அருள் பாலிப்பதை தசரதனின் சனி ஸ்தோத்திர வரலாறு அறிவிக்கிறது. இது போன்ற ஜோதிடக் குறிப்புகளை ராமாயணம் வாயிலாக அறிவது ஒரு புறம் இருக்க, வால்மீகியின் சுலோகங்கள் வாயிலாகவும் நட்சத்திரக் கலை மூலமாகவும் ராமாயணக் காட்சிகளையே வானில் நாம் பார்க்கவும் உணர்ந்து அறியவும் முடியும். சில காட்சிகளை இங்கு பார்க்கலாம்.

 

மூல ராவணனும் ராவணகங்கையும்

 

ஆகாய கங்கையின் ஒரு பகுதியே சீதா என அழைக்கப்படுகிறது.கோடி சூர்ய பிரகாசம் உடைய இந்த ஒளி மண்டலம் இருளின் அரசனான மூல ராவணனை வெல்வதையே ஆகாயக் காட்சி காண்பிக்கிறது,மூல நட்சத்திரத்திற்கு உரியவனான ராவணனைப் பற்றி வால்மீகி ராமாயணம் சொல்லாத ஒரு சம்பவத்தைப் பத்ம புராணம் சொல்கிறது. வானத்தின் அசுர பாகத்தில் அதாவது வானத்தின் தென் பிராந்தியத்தில் வானகங்கையின் ஒரு பகுதி மூல நட்சத்திரத்தின் வழியே செல்கிறது. இங்குள்ள சீதா ராவணனின் சித்திரத்தில் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுவதை பத்ம புராணம் சுட்டிக் காட்டுகிறது. வான கங்கையின் மூல நட்சத்திரப் பகுதியை ராவண கங்கை என அனைவரும் இன்று வரை சொல்லி வருவது குறிப்பிடத் தகுந்தது!

 

 

27 நட்சத்திரங்களுள் 19 நட்சத்திரமாக அமையும் மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி. அழிவின் அதிபதி!தனது தீய செய்கையால் அரக்கர் குலத்திற்கே அழிவைத் தேடினான் ராவணன்.(என்றாலும் கூட மூல நட்சத்திரக்காரகளை பொதுவாக பயமுறுத்தாமல் அதற்குரிய பரிகாரங்கள், விதிவிலக்குகள் ஆகியவற்றையும் சேர்த்தே ஜோதிடம் அறிந்தோர் சொல்ல வேண்டும்). 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே; ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு குணாதிசயம் என்ற அடிப்படையை ஜோதிட ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுவது இங்கு கடமை ஆகிறது)

 

பாவிகள் செல்ல ஒரு வழி அமைக்கவில்லையே!

 

படத்தில் சூர்ப்பநகை மீது லெட்சுமணன் கோபம்

மேலை நாட்டு பைபிளில் மனிதர்கள் அனைவரும் சேர்ந்து விசித்திரமான ஒரு நகரை அமைத்து அதில் ஒரு உயரமான கோபுரம் அமைப்பதையும் அது சுவர்க்கத்தை எட்டும் படி அமைக்கப்பட்டதையும் அதன் பெயர் பேபல் என வைக்கப்பட்டதையும் படித்து விட்டு வங்காளத்தில் கீர்த்திவாஸர் தரும் ஒரு சித்திரத்தையும் பார்த்து மகிழலாம். வால்மீகியில் சித்தரிக்கப்படாத இந்தக் காட்சியில் ராவணன் இறக்கும் தருவாயில் புலம்புகிறான்.அடடா, பாவிகள் செல்லும்படியாக சுவர்க்கத்திற்கு ஒரு மாடிப்படிகள் உள்ள கோபுரத்தை நான் உயிருடன் இருக்கும் போதே கட்டத் தவறி விட்டேனே என அவன் புலம்புகிறான்.

சபரியின் பக்தி

 

வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் 74வது ஸர்க்கமாக 35 சுலோகங்களில் அமையும் சபரியின் சரித்திரம் புல்லரிக்க வைக்கும் சொற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் 35 சுலோகங்கள் முடிய படிப்பவர்க்குப் பல ரகசியங்கள் புலப்படும். “எனது குரு (சித்ர சிகண்டி மண்டலத்தில் உள்ள சப்தரிஷிகள்) தங்களது சுவர்க்க மாளிகைகளுக்கு ஒளிமயமான ரதங்களில் சென்ற போது தாங்கள் இங்கு வரும் வரை என்னைக் காத்திருக்கப் பணித்தனர்.” (ஆறாம் சுலோகம்)

 

பின்னர் சபரி கடித்து அவை சுவையான பழங்கள் தாம் என்பதை அறிந்து கொடுத்ததை ஏற்றுக் கொண்ட ராமர். “ நான் முறையாக கௌரவிக்கப்பட்டேன். நீ இனி உனக்கு சுகம் இடத்திற்குச் செல்லலாம்” என்கிறார் (சுலோகம் 31)

இதனைக் கேட்டு ஆனந்தித்த சபரி தன் உடலை ஜுவாலைக்கு இரையாக்கி வானை நோக்கி உயர்ந்து சென்றாள்! மின்னல் போல ஒளிரும் அவள் சப்தரிஷிகள் அருகே தனக்கு ஒரு இடத்தைப் பெற்றாள்.

 

இந்த ஸர்க்கத்தை விளக்க வந்த கோவிந்தராஜீயம் உள்ளிட்ட வியாக்கியானங்கள் பல பிரமிக்க வைக்கும் ரகசியங்களை நமக்குப் புலப்படுத்துகிறது. பம்பா போன்ற நதிகள் கடலைச் சேர்வது இயல்பு. இதற்கு மாறாக அனைத்து கடல்களும் பம்பாவை அடையும் அதிசயம் அங்கு நிகழ்கிறது. அந்த அளவிற்கு புனிதமான இடம் பம்பா. அங்கு சப்த ரிஷிகள் செய்த யாகங்களை சபரி விளக்கும் போதே வேத காலத்தில் தீண்டாமை என்பதே இல்லை என்ற அரிய உண்மையும் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட புண்யவதியான சபரிக்கு விஷ்ணுவிற்கு வெகு அருகிலேயே சப்தரிஷி மண்டலத்திற்கு அருகிலேயே ஒரு இடம் கிடைக்கிறது என்பதும் நமக்கு புலனாகிறது. வால்மீகி முனிவரின் அற்புத சொற்களை மனம் முழுவதும் நிறைத்துக் கொண்டு வானில் சப்தரிஷிகளையும் அவர்கள் அருகில் இடம் பெற்றுள்ள சபரியையும் வணங்கும் போது ஒரு புதிய உணர்வு தவறாது எழும்!

 

ராம பாணம்!

 

வைகுண்ட வாயில் அல்லது சுவர்க்க வாயிலை வால்மீகி சுட்டிக் காட்டும் விதமே தனி! மஹாபாரதம், பரசுராமர் ராமரை நோக்கி,”:இதோ இந்த வில்லை எடுத்துக் கொள்” என்று கூறுவதையும் அதற்கு ராமர் அதை எடுத்துக் கொண்டதாகவும் உடனே பரசுராமர் இதோ ஒரு வான அம்பைத் தந்து இதை நாண் பூட்டிக் காது வரை இழு” என்று சொன்னதையும் விரிவாகக் கூறுகிறது.(III -99-5o,51,54) வால்மீகியோ பாலகாண்டம் 76ம் ஸர்க்கத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக விளக்குகிறார். தனது வீர்யத்தால் பரசுராமரை வென்று அம்பை எய்து பரசுராமரின் சுவர்க்க வழியை ராமர் தடுத்தார்.பரசுராமரோ. “எனக்கு அதை இழந்ததில் வருத்தமில்லை. ஏனெனில் எனக்கு தீர்க்க வேண்டிய ஆசைகள் எதுவுமில்லை” என்று ராமரிடம் கூறுகிறார்!பின்னர் வில்லை வருணனிடம் ராமர் தருகிறார்.

அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ணர் காண்பித்தது போல ராமர் தன் விஸ்வரூப தரிசனத்தை பரசுராமருக்கு இங்கே தான் காண்பிக்கிறார்!பிரம்ம மண்டலம் என்னும் பகுதியில் உள்ள பிரம்மஹ்ருதயம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற நட்சத்திரம் பரசு என்னும் கோடாலி போல உள்ளதையும்அதற்கு எதிரில் ‘தி கிட்ஸ்’ (The Kids) என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ராம பாணம் போல உள்ள இரு நட்சத்திரங்களையும் வானில் கண்டு மகிழலாம்!

 

வானத்தில் 12 வீதிகளை அமைத்து அதில் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தேவதையையும் நமக்குச் சுட்டிக் காட்டிய நம் முன்னோரின் வானவியல், ஜோதிட ஆன்மீக அறிவை எண்ணி பிரமிக்க வேறு எங்கும் போக வேண்டாம். சற்று தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தாலே போதும்; அனைத்தும் புரிந்து விடும்!

வால்மீகி மாமுனிவர்

அடுத்து ராமாயணத்தின் முக்கிய பாத்திரமான அனுமனை பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? அவனை அடுத்து தரிசிப்போம்!

 

******************************