
Post No. 9533
Date uploaded in London – – –26 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திருச்சிற்றம்பலம். அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.இன்று சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நன்னாள். சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் அவர்களின் குருபூஜை தினம் இன்று! அவரைப் போற்றி வணங்குவோம்.

ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று அது யாரையும் பாவி என்று குறிப்பிடுவதில்லை. மாறாக அனைவரையும் அம்ருதஸ்ய புத்ரா: என்றே அழைக்கிறது. அது மட்டுமல்ல; மனிதர்களுக்கு மட்டுமல்ல மோக்ஷம். எந்த உயிரும் முக்தியைப் பெறலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது அது. இதை மெய்ப்பித்துக் காட்டியவர் உமாபதி சிவாசாரியார்.
உமாபதி சிவம் தில்லை மூவாயிரவர் எனப்படும் மூவாயிரம் தீக்ஷிதர் குடும்பங்களுள் ஒன்றில் பிறந்தார். ஒருநாள் சோழ மஹாராஜன் அளித்த முத்துப் பல்லக்கில் அவர் சிதம்பரம் வீதியில் சென்று கொண்டிருந்த போது
அவரது பல்லக்கை கண்ட பெரும் மகானான மறைஞான சம்பந்தர் தான் அமர்ந்திருந்த திண்ணையிலிருந்தவாறே, “ பார், பார், பகல் நேரத்தில் குருடன் ஒருவன் பலகைகளில் ஏறிச் செல்கின்றான்” என்றார்.
பல்லக்கின் திரைகளை விலக்கிப் பார்த்த உமாபதி சிவாசாரியார் கண்களுக்கு மறைஞானசம்பந்தர் தோன்றவில்லை.சிதம்பரம் நடராஜரே தோன்றினார். உடனே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கிய உமாபதி சிவம் மறைஞானசம்பந்தரின் காலடிகளில் வீழ்ந்தார்,
மறைஞானசம்பந்தர் அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓட, உமாபதி சிவம் அவரைப் பின் தொடர்ந்து ஓடலானார். ஓடி ஓடி இருவரும் களைத்துப் போன நிலையில் நெசவாளர்ர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மறை ஞானசம்பந்தருக்கு கூழ் வார்த்தார். அதை அவர் சிவ பிரசாதம் சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அருந்த அவர் முழங்கை வழியே சிறிது கூழ் சொட்டு சொட்டாகக் கீழே சிந்த, அந்தத் துளிகளை குரு பிரசாதம், குரு பிரசாதம் என்று சொல்லிக் கொண்டே உமாபதி அருந்தலானார். இந்தச் சம்பவத்தால்
அவரை தீக்ஷிதர் சமூகத்திலிருந்து விலக்கி விட்டனர்.
சிதம்பரத்திற்கு கிழக்கே உள்ள கொற்றவன் குடி என்ற இடத்திற்குச் சென்று ஒரு மடத்தை அமைத்து அவர் சிவ பூஜையை மானசீகமாகச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள், ஆலயத்தில், உற்சவ நாளன்று கொடி ஏற்ற முயன்ற போது அதுகம்பத்தில் மேலே ஏறவே இல்லை. ‘உமாபதி சிவத்தை கொடி ஏற்றச் செய்க’ என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் அவரை அழைத்து கொடியை ஏற்றுமாறு வேண்டினர். உமாபதி சிவம் கொடிக்கம்பத்தின் முன் வந்து
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட மொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளடரா துள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும்படி கொடி கட்டினனே என்று பாடினார்.
உடனே கொடி மேலே ஏறியது அனைவரும் வியந்து அவரைப் போற்றிப் வணங்கினர். தொடர்ந்து அவர் இன்னும் மூன்று பாடல்களைப் பாடினார்.
இந்த நான்கு பாடல்களும் கொடிப்பாட்டு என்ற பெயரால் சிறப்புற இன்றளவும் அழைக்கப்படுகின்றன.
இன்னொரு முக்கியமான அற்புத சம்பவம் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தது.
அந்த நாளில், தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிறந்த சிறந்த சிவ பக்தன்.
அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.
நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.
தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.
உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்
பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை”
அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய ஓலை இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”
ஓலையை பெற்ற சாம்பான் உமாபதி சிவாசாரியரின் காலில் வீழ்ந்து சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான். ஒலையைப் படித்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார். அவ்வளவு தான், முதிர்ந்த பக்குவ நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.
செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது. இதை அறிந்த அரசன் பெரிதும் வியப்புற்றான். தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.
உமாபதி தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.
அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது. அரசன் இதைப் பார்த்து பிரமித்தான். இது பற்றி நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம் என்றான் அரசன்.
அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர். அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர். அரசன் உட்பட அனைவரும் சிவாசாரியரின் அடி பணிந்து வணங்கினர்.
இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை. கருடன் பூஜித்த தலம் பட்டீசுரம்; யானை திருவானைக்கா, குதிரை -திருக்குற்றாலம், புலி- பெரும்பற்றப் புலியூர் நரி- சிறுகுடி, ஆடு- திருவாடானை, நாய்- வீழிமிழலை, குரங்கு – தென்குரங்காடுதுறை அன்னம் – அம்பர், மயில் – மாயூரம் கிளி- கீரனூர் வண்டு- திரு வண்டுறை இப்படி மிருகங்களும் பறவைகளும் பூஜித்த தலங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. அவை முக்தி பெற்ற வரலாறுகளும் நிறைய உண்டு. ஆனால் மிகச் சிறப்பாக முள்ளுக்கும் முக்தி கொடுத்து அருளிய உமாபதி சிவாசாரியாரின் சிறப்பே சிறப்பு. அவரது குருபூஜை தினமான இன்று அவரைப் போற்றி வணங்குவோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
திருச்சிற்றம்பலம்!

tags- உமாபதி சிவம் , வாழ்க்கை, அற்புத சம்பவம்,