WRITTEN BY S NAGARAJAN
Date: 20 August 2018
Time uploaded in London – 5-50 AM (British Summer Time)
Post No. 5341
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஹிந்து உன்னதம்
வாஸ்து சாஸ்திரத்தை உன்னத நிலைக்கு ஏற்றிய ஸ்ரீ கணபதி ஸ்தபதி!
ச.நாகராஜன்
வாஸ்து சாஸ்திரம் ஹிந்து வாழ்க்கை முறையின் உன்னத சாஸ்திரங்களுள் ஒன்று.
பூவுலகில் பிறந்தோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையைத் திறம்பட சிறப்பாக அமைத்துக் கொள்ள வைக்கும் இந்த சாஸ்திரம் காலம் காலமாக விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த குலத்தில் பிறந்து இந்தக் கலையின் உண்மையை உலகெங்கும் பறை சாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி ஆவார்.
1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி பிள்ளையார் பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கணபதி ஸ்தபதி தன் முன்னோர்களின் பாதையில் சென்று வாஸ்து கலையைச் செவ்வனே பயின்றார்.
இவரது முன்னோர்களில் ஒருவரான ராஜ ராஜ பெருந்தச்சன் பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க பெரிய கோயிலை – பிரஹதீஸ்வரர் ஆலயத்தை – சிற்ப சாஸ்திரத்திற்கேற்ப அமைத்தவர்.
வாஸ்து சாஸ்திரத்தைத் தன் தந்தையாரிடமிருந்தும் தனது மாமா செல்லக்கண்ணு ஸ்தபதியிடமிருந்தும் இவர் பயின்றார்.
மாமல்லபுரத்தில் உள்ள கட்டிடம் மற்றும் சிற்பக் கலைக்கான அரசுக் கல்லூரியில் 27 வருடங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட அதை நடத்தி வந்தார்.
சிற்பக் கலை நலிவடைந்திருந்த நிலையில் அதைக் காத்து அதன் சிறப்புக்களை உலகிற்கு உணர்த்த வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்த அவர் இதை சவாலாக ஏற்று வாஸ்து சாஸ்திரத்தின் மாண்பை காலத்திற்கேற்ப புதிய உச்சத்தில் ஏற்றினார்.
1988இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் வாஸ்து சாஸ்திரத்தின் மூலநூல்களையும் முறைகளையும் ஆராய்ந்து அதற்காக வாஸ்து வேத ஆய்வு மையத்தையும் அமைத்தார்.
ஏராளமான கோவில்களை புராதன சாஸ்திரம் சற்றும் வழுவாது அமைத்தார்; பெரும் புகழைப் பெற்றார்.
இவரது அரிய சாதனையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கிக் கௌரவித்தது. இன்னும் பல விருதுகள் இவரைத் தேடி வந்தன.
இவரது நுட்பமான திறமையை உலகில் உள்ள அனைவரும் மதித்தனர். அமெரிக்காவில் சிகாகோ, வாஷிங்டன் டி.சி. (சிவா – விஷ்ணு கோவில்), கெண்டுகி, போஸ்டன்,பால்டிமோர், சான்பிரான்ஸிஸ்கோ, ஹவாய் (சமரச சன்மார்க்க இறைவன் கோவில்) ஆகிய இடங்களில் கோவில்களை அமைக்க இவரை அங்குள்ளோர் அழைத்தனர். அவரும் இதை ஏற்று கோவில்களை சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைத்தார்.
பிரிட்டன், சிங்கப்பூர், மலாசியா, மரிஷியஸ், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோவில்களையும் வடிவமைத்தவர் இவரே.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை,சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை,முதல் சிற்பியான மயனுக்கு மாமல்லபுரத்தில் சிலை உள்ளிட்டவை இவரது மதிநுட்பத்தாலும் கைவண்ணத்தாலும் ஏற்பட்டவையே.
ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை எழுதியுள்ள இவர் குறிப்பிடும் பழைய புராதன ஹிந்து சிற்ப சாஸ்திர நூல்கள் பல.
மானசாரம் குறிப்பிடும் 32 நூல்களின் பட்டியலை இவர் தந்துள்ளார்:
விஸ்வகர்மீயம், விஸ்வம், விஸ்வசாரம், ப்ரபோதம், விருத்தம்
மயமதம், த்வஷ்டா தந்த்ரம், மனுசாரம்,நலம், மானவிதி,
மானகல்பம், மானஸாரம், பேஹுஸ்ருதம், ஸ்ருஷ்டம், மான போதம்,
விஸ்வ போதம், ஆதிசாரம், விசாலாக்ஷம்,
விஸ்வகாஸ்யபம், வாஸ்து போதம்,
மஹா தந்த்ரம், வாஸ்து வித்யாபதி, பராசரீயகம்,
காலயூபம்,
சைத்யம், சித்ரம், ஆவர்யம், சாதக சார சம்ஹிதா,
பானுமதம், இந்த்ர மதம், லோகாகுவம், சௌரம்
ஆகியவை குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.
மனுசாரம் குறிப்பிடும் 18 நூல்கள் சிறப்பானவை:
ஈஸானம், சித்ர காயபம், ப்ரயோக மஞ்சரி, பெருஹிதம்,
புத்த மதம், கௌதமம், குலாலம், வாசிஷ்டம்,
மனோகல்பம், பார்கவம், மார்கண்டம், கோபாலம்,
நாரதீயம், நாராயணீயம், கஸ்யபம்,
சித்ரயாமளம்,
சித்ரஹாஹுல்யம், தேசிகம்
இது தவிர கீழ்க்கண்ட முக்கியமான நூல்களும் உள்ளன:
வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்த்ரிகா,
சாரஸ்வதீய சித்ர கர்மா சாஸ்த்ரம்,
ப்ராஹ்மீய சித்ரகர்ம சாஸ்திரம்
சகலாதிகாரம்,சில்ப ரத்னம்,
சனத் குமார வாஸ்து சாஸ்த்ரம்,
சில்ப ரத்னாகரம், சர்வார்த்த சில்ப சிந்தாமணி
வட இந்திய சிற்பிகளால் பயன்படுத்தப்படும் நூல்கள்:
வாஸ்து ராஜவல்லபம், சமராங்கன சூத்ரதாரம்,
ரூப மண்டனம்,
கோதண்டமண்டனம், சில்ப ப்ரகாசா, அபராஜிதா,
ப்ருச்சா, ப்ரதிமா, மான லக்ஷ்ணம், க்ஷீர நவம்,
தீபார்னவம்.
இவ்வளவு நூல்களையும் படித்தால் வாஸ்து விஞ்ஞானத்தின் பெருமையும் உண்மையும் புலப்படும்
தனது ஆராய்ச்சி வன்மையால் கணபதி ஸ்தபதி அடைந்த அதிசயமான அனுபவங்கள் ஏராளம். அதை அவரே எழுதியுள்ளார்.
காஞ்சி பரமாசார்யருடனான அவரது அனுபவங்கள் சிலிர்க்க வைப்பவை.
வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞான பூர்வமான ஒன்று என்பதை அவர் Vastu Shastra – A Scientific Treatise என்ற தனது நூலில் விளக்கியுள்ளார்.
நிறைவாழ்வு வாழ்ந்து 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார்.
அவரது அதிசய அனுபவங்களையும், அவர் விளக்கும் நுட்பமான கருத்துக்களையும் இன்னொரு கட்டுரையில் காண்போம்.
***
You must be logged in to post a comment.