விகடன் பள்ளியிற் படித்த விநோதம் (Post No. 2441)

IMG_9805 (2)

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2441

 

Time uploaded in London :– காலை 8-58

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன், சென்னை).

 

பழைய தமிழ்நடை; பழைய நகைச்சுவை!!

 

“ஐயா! நான் பள்ளியிற் வாசித்த வைபவத்தைக் கூறுகிறேன் கேளும். நான் பிறந்தது வெயிலடிச்சான்பட்டி. என் தகப்பனாருக்கு நான் ஒருவனே ஏகபுத்திரன். எங்கள் ஜாதியோ துடைதட்டி வெள்ளாளர். என் தகப்பனார் சுத்த கர்நாடகம். ஒருநாள் என் தகப்பன் வழக்கம்போல் அதிகாலையிலெழுந்து ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையில் வந்து வேஷ்டி கட்டிக்கொள்ள மடிசஞ்சியைப் பார்க்க, எவனோ அப்பிக்கொண்டு போய்விட்டான். அங்கு தோட்டக்காரனின் வெள்ளை நாயொன்று படுத்திருந்தது.

மையிருட்டாயிருந்தமையாலும்,கண்பார்வை மத்தியமாதலாலும் மடிசஞ்சியென்றெண்ணி நாயைப் பலமாய்த் தூக்கினார். அப்போது வயிரவர் தீர விசாரித்துவிட்டார். சிலநாளைக்கெல்லாம் அவர் வெறிநாய் கடித்த கிறுக்கால் வலி பொறுக்கமாட்டாமல் நாய் போல் ஊளையிட்டே இறந்தார்.

 

அதன்பின் என் தாய் என்னைப் பள்ளியில் வைக்கத் தொடங்கினாள். நான், “ஆனகுலத்திற் பிறந்து ஆடுமாடு மேய்க்காமல் ஓலைவாரிக் கழுதையாய்ப் போகிறதா?” என்றெண்ணிப் படிப்பும் வேண்டாம், பிடிப்பும் வேண்டாம்” என்றேன். அது என் தாயாருக்கு மனம் பொறாமல் நான்கு ஐந்து புளியமரங்களும், பத்துப் பதினைந்து வீடுகளுமுள்ள பெரியபட்டணமாகிய ஆடுசாபட்டியில் ஓர் உபாத்தியரிடம் கொண்டுபோய் என்னை ஒப்புவித்தார். நான் அங்கேயே உபாத்தியாயர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன்.

 

என் வாத்தியார் சம்சாரமோ வெகு வக்கணைக்காரி. அவள் அழகோ சொல்லவேண்டியதில்லை; வர்ணிக்கத்தான் வேண்டும்

 

(சிந்து)

“இளிச்ச பல்லுக்காரி

இடிபோல் சொல்லுக்காரி

வெளிச்ச மூஞ்சிக்காரி

வெட்கங்கெட்ட நாரி

டொக்கு கன்னக்காரி

டக்குக் கண்ணுக்காரி

ஈன நடைக்காரி

ஆனைக் கழற்காரி

IMG_9805 (3)

இப்பேற்பட்ட அற்புதம் வாய்ந்து சுப்ரதீபமாய் விளங்கும் வல்லாளகண்டி என்பவள் அனுதினமும் உபாத்தியாயர் தலையில் ஒரு சட்டி அல்லது ஒரு பானை உருட்டமலிருக்கமாள். அப்படி சட்டிப்பனைகளை அவர் தலையில் உருட்டும்போது நான் பசுமூத்திரம் குடித்த காளைபோல் பல்லை யிளித்துக்கொண்டிருப்பேன். அப்போதவர், “அடே பையா! இவளைக் காட்டிலும் பட்டிமுண்டையாய் உனக்கு வாய்க்கவேணும். அப்போது இளிக்கமாட்டாய் என்பார். இப்படியிருக்க ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துவிடவேண்டுமென்று எனது வாத்தியார் மனைவி என்னை ஏவினார். அப்போது,

 

நெடுமால் திருமுருகா

நித்த நித்தமிந்தெழவா

வாத்தியாரும் சாகாரோ

வயிற்றெரிச்சல் தீராதா”

என்று ஓயாமல் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருக்கும்போது, ‘போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்பதுபோல வாத்திச்சியும் மோட்டுத் தவளைபோற் கட்டளையிடவே நான் கிணற்றண்டை சென்று ஒரு கூர்மையான கல்லொன்றெடுத்து அந்தத் தோண்டியை ஆயிரம் பொத்தலாக்கி ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்தேன். அதற்கவள், ‘அடிமாண்டு போக’, கரியாய்ப் போக என்று தனது வசவு அரிச்சுவடியை வரிசையாயொப்பிவித்தாள்.

மற்றொரு நாள் அவள் நெல்லுக் குத்திக்கொண்டிருக்கையில் என்னையும் ஒரு உலக்கை எடுத்து வந்து குந்தாணியில் குத்தும்படி சொன்னாள். நான் இதுதான் சமயமென்று  என் பலமெல்லாம் சேர்த்து அவள் கைவிரல் நசுங்கும்படி ஒரு போடு போட்டேன். அம்மாடி, அப்பாடி, நான் சாகலாச்சு, போகாச்சு என்று அவள் தாய் தந்தை பாட்டன் பூட்டன் இறந்த துக்கத்தையெல்லாம் எண்ணி ஒப்பாரி வைத்தாள். பின்னர் வாத்தியார் வந்து சமாதானம் பண்ணப்பட்ட பாடு ‘மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது’ போலாயிற்று.

 

வேறொரு நாள் குரு என்னைப் பார்த்து, வெந்நீர் போடும்படி சொன்னார். ஆகட்டும் குருபராக்கென்று வெகு வணக்கத்துடனும், விரைவுடனும், வாத்தியார் பாட்டன் பூட்டென்களெல்லாம் அருமையாய்க் கைபாடுபட்ட மூளை பிறள, எழுத்தாணி முனைதேய வறட்டு வறட்டென்று எழுதிய  ஏட்டுச் சுவடிகளாகிய பாகவத, பாரத இதிஹாச புராணங்களையெல்லாம் தூக்கிவந்து அடுப்பில் உருவியும், உருவாமலும் போட்டு வெந்நீர் காய வைத்துக் குருவை வணக்கத்துடன் ஸ்நானம் செய்ய அழைத்தேன்.

 

குருவும் முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி தன் மனைவியைக் கூப்பிட்டு, பார்த்தாயடி! சீஷப் பிள்ளை விரைவில் வெந்நீர் போட்டுவிட்டான். நீ வெந்நீர் போட ஊரடங்கிவிடும் என்று சொல்லி வெந்நீர் ஸ்நானஞ் செய்து, மடி வஸ்திரம் தரித்துப் பலகைமீதமர்ந்து பாராயணஞ் செய்ய ராமாயணம் கொண்டுவா” என்று தன் மனைவியையேவ அவள் பரணெல்லாம் தேடியும் ஒரு ஏட்டுத் துணுக்குங்கூட கிடைக்கவில்லை. அப்போது பரண்மீது அந்த அம்மாள் கையில் ஒரு கொள்ளித்தேளிருந்து கொட்டிவிடவே அலறியடித்துக்கொண்டு, “ஏட்டுக் கட்டையும் காணோம், சுடுகாட்டையும் காணோம். உமது ராமாயணம் பாழாய்ப்ப் போக, நீர் அடிமாண்டு போக” என்று வைய ஆரம்பித்தாள். உடனே வாத்தியார் எழுந்து, துஷ்டை, பிரிஷ்டை என்று வைதுகொண்டு தேடிப் பார்த்தார். அது அங்கே ஏனிருக்கும்?

 

பின்பு என்னைப் பார்த்து, சிஷ்யா! ஏடுகளெல்லாமெங்கே? என்றார். உடனே பரமானந்த சீஷனான நான், “ஒரு அண்டா வெந்நீர்  ஐந்து நிமிஷத்திலெப்படிக் காய்ந்ததென்றெண்ணுகிறீர் என்றேன். அதற்கவர், சபாஷ்! பிள்ளையாண்டான், கெட்டிக்கரனென்று மெச்சி என்னை ஊருக்கனுப்பிவிட்டார். பின்பு சிறிது நாளைக்கெல்லாம் எனக்கு விவாகம் நடந்தேறி, துபாஷ் வேலியிலிருந்தேன். அப்போது மனைவியால் பட்ட பாட்டைக் கேளும்.

 

சூத்ரதாரர்:- நண்பா! உன் அன்பார்ந்த கதைகளைக் கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. விளம்புவாய்

–சுபம்—

நகைச் சுவைக் கதைகள் தொடரும்………………………………………….