குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

விக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)

vikrama-1

Translated by London swaminathan

Date: 13 September 2016

Time uploaded in London: 20-20

Post No.3151

Pictures are taken from various sources; thanks.

இந்தியாவில் பல வகையான ஆண்டுகள்/ காலண்டர்கள் பின்பற்றப்படுகின்றன. கலியுகம் (துவக்க ஆண்டு கி.மு.3101) பற்றி எல்லோருக்கும் தெரியும். இதே ஆண்டை மாயா நாகரீகம் , எகிப்திய நாகரீகம் எல்லாம் பெயர் சொல்லாமல் பின்பற்றி வருவது பற்றி முன்னரே எழுதினேன். கலியு கத்தை நாள் கணக்கில் குறிப்பிடம் கோ கருநந்தடக்கனின் பழங்கால தமிழ் கல்வெட்டு பற்றியும் எழுதிவிட்டேன். இந்தியாவின் தேசிய “சக” வருடம் தினமும் வானொலியில் அறிவிக்கப்படுவதால் அனைவரும் அறிந்ததே. பஞ் சாங்கத்தின் முதல் பக்கத்தில் கலியுகம் முதல்  நாமாக உண்டாக்கிய திருவள்ளுவர் ஆண்டு வரை இருப்பதையும் பெரும்பாலோர் அறிவர்.

 

சில  நாட்களுக்கு முன்னர் டாக்டர் எஸ்.என்.சர்மா எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அதில் விக்ரம ஆண்டு பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளன. வரலாறு படிப்போருக்குப் பயனுள்ள தகவல்கள்.

விக்ரம ஆண்டு என்பது விக்ரமாதித்யன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இது கி.மு.57-ல் துவங்கியது. சக இன வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களை நாட்டைவிட்டு விரட்டியதைக் கொண்டாட இந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

vikrama-2

இது குறித்த விசித்திர விஷயங்கள் என்ன?

1.முதலில் இதை கிருத வர்ஷம் என்றும் பின்னர், மாளவ வருஷம் என்றும் பின்னர் விக்ரம வருஷம் என்றும் அழைத்தனர். ஏன் இப்படிப் பல பெயர்கள்? அவற்றின் உண்மைப் பொருள் என்ன? பெரிய புதிர்!

 

  1. இதை விக்ரம ஆண்டு என்று அழைத்தது அது தோன்றி சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னரே!

 

  1. இவர்கள் குறிப்பிடும் கி.மு.57-ல் விக்ரமாதித்யன் என்ற ஒரு மன்னன் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை! யார் இந்த விக்ரமாதித்யன்?

 

4.இந்தியாவில் பல மன்னர்கள் விக்ரமாதித்தன் என்ற பெயருடன் ஆண்டனர். வேதாளக் கதைகளில் புகழ்மிகு  விக்ரமாதித்தன் வருகிறான். கதா சரித் சாகரத்தில் அவன் பற்றிக் குறிப்பு வருகிறது.

மஹேந்திர ஆதித்தன் என்ற மன்னனுக்கு சிவபெருமான் அருளால் விக்ரமாதித்தன் என்ற மகன் தோன்றியதாகவும் அவன் சகரர்களை விரட்டியடித்து பல மன்னர்களை வென்றதாகவும் கதா சரித் சாகரம் என்னும் (கதைக்கடல்) நூல் கூறுகிறது. ஆனால் அது கூறும் மன்னர்களில் ஒருவர் கூட வரலாற்றுப்  புத்தகத்தில் இல்லை.

 

கௌட (வங்க) தேச சக்திகுமாரன்

லாட தேச விஜயவர்மன்

சிந்து தேச கோபாலன்

கர்நாடக தேச ஜயத்வஜன்

காச்மீர் தேச சுநந்தனன்

பாரசீக தேச நிர்முகன்

 

ஆகியோரை விக்ரமாதித்தன் வென்றதாக அந்த நூல் செப்புகிறது.

 

5.வரலாற்றில் எல்லோரும் அறிந்த விக்ரமாதித்தன் இரண்டாவது சந்திரகுப்தன். இது அவனது பட்டங்களில் ஒன்று.

 

5.உலகப் புகழ்பெற்ற காளிதாசனை– விக்ரமாதித்தன் அவைப் புலவர்களில் ஒருவர் என்று கூறும் சம்பிரதாயமும் உளது. அவன் உஜ்ஜைனி நகரத்திலிருந்து ஆண்டவன்.

 

6.சமண மத நூல்கள் மேலும் பல புதிய கதைகளை மொழிகின்றன. ஆனால் இவை அனைத்தும் 12-ஆம் நூற்றாண்டில்  எழுத்துரு பெற்றவை. மஹாவீரருக்குப் பின்னர் காலகன் என்பான் 60 ஆண்டுகள் ஆண்டதாக அவை கூறும். கர்தபில்லா என்பவனை சகர்கள் தோற்கடித்ததாகவும் அவநது மகன் விக்ரமாதித்தன் –சகர்களை விரட்டி பழி வாங்கினான் என்றும் தபாகச்ச பட்டாவளி (சமண நூல்) சொல்லும்.

 

7.நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட புராணங்கள் விக்ரமாதித்தன் பெயரைச் சொல்லவில்லை!!

 

நாளந்தா கல்வெட்டில் (கி.பி.226) மாளவ வருடம் குறிப்பிடப்படுகிறது.

மாண்டசூர் கல்வெட்டும் (கி.பி.493) மாளவ கண  பற்றி பேசுகிறது. மாளவ கண என்ற சொல்லை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் இலக்கணப் புத்தகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.

 

 

தோல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சௌஹான் கல்வெட்டில்தான் முதல் முதலில் விக்ரம சம்வட் (ஆண்டு) வருகிறது. அது கி.பி..842 ஆம் ஆண்டுக் கல்வெட்டு!

 

நேபாள த்தில் விக்ரம சம்வட் (வருஷம்) பயன்படுத்தப்படுகிறது. சமணர் புத்தககங்களில் பல கதைகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

 

vikrama-3

என் கருத்து:–

 

1.வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நாமாக மகாநாடு கூட்டி ஆராய வேண்டும். வெளிநாட்டினர். அங்கிருந்து ஒன்று,  இங்கிருந்து ஒன்று என்று பிச்சுப் பிடுங்கி ஒரேயடியாகக் குழப்பிவிட்டுள்ளனர். எங்கெங்கெல்லாம் முரண்பட்ட தகவல்கள் உள்ளனவோ அவைகளில் தனக்கு ஆதரவாக உள்ள விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கிவிட்டனர். சமணர் நூல்கள், கதா சரித் சாகரம் முதலியன பொய் சொல்லத் தேவையே இல்லை.

 

2.விக்ரமாதித்தன் என்பது ஒரு பட்டமே தவிர மன்னன் பெயர் இல்லை. ஆகையால் மன்னன் பெயர் என்பதை மற ந்துவிட்டு அக்கால மன்னர்களில் இது யாருக்குப் பொருந்தும் என்று பார்க்க வேண்டும். காளிதாசன் போன்றோர் இப்படி ஒரு மன்னன் பெயரைச் சொல்லவில்லை.

 

 

3.கடைசியாக இரண்டாவது சந்திரகுப்தன் விக்ரமாதித்தன் என்ற பட்டத்தைக் கொண்டதால் அவனை கி.மு57-ல் ஆண்ட மன்ன என்று கொண்டால் இந்திய வரலாறு தலை கீழாக மாறும் அதாவது எல் லா மன்னர்களின் காலமும் 400 ஆண்டுகளுக்கு முன்போடப்படும். இந்தியாவின் பழமை இன்னும் வலிவு பெறும். இந்தக் கோண த்திலும் ஆராய வேண்டும். இந்தப் புதிர் இன்றுவரை தீர்க்கப்படா மல் இருப்பதால் இது பற்றி விவாதிக்க ஆராய்ச்சி மகாநாடு கூட்ட வேண்டும். இது தமிழ் வரலாற்றை மாற்றி எழுதவும் — காலத்தை முன் போடவும் — உதவும்.

kalidasa

–Subaham–

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்-(2)

 

By ச.நாகராஜன்

 

நவரத்தினங்களில் ஒருவர்

வராஹமிஹிரர் விக்கிரமாதித்தனின் அரசவையில் முக்கிய இடம் பெற்றிருந்ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. விக்கிரமாதித்தனின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கான முக்கியமான காரணம் அவன் அரசவையை அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களான மகாகவி காளிதாஸர்,தன்வந்தரி,க்ஷபனாக்,அமரசிம்மர்,சங்கு,வேதாளபட்டர்,

கட் கர்பர்,வராஹமிஹிரர்,வரருசி ஆகிய நவரத்தினங்கள் அலங்கரித்தது தான்!

 

வராஹமிஹிரர் நூல்கள்

வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன. ப்ருஹத் ஜாதகம் மற்றும் ப்ருஹத் சம்ஹிதாவில் பூகோளம், நட்சத்திரத் தொகுதிகள், தாவரவியல், மிருகவியல், வானவியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானம் பற்றிய வியக்கத்தகும் உண்மைகளை விளக்குகிறார். வ்ருக்ஷ ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறை மூலம் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அதைத் தீர்க்கும் விதம் பற்றியும் கூட அவர் விரிவாக விளக்குகிறார்.

 

.தனது தீவிர ஆராய்ச்சி மற்றும் தீர்க்கதிருஷ்டியின் மூலம் இவர் கண்டுபிடித்த உண்மைகள் பல! பஞ்ச சித்தாந்திகா என்ற அபூர்வமான நூல் சூர்ய,ரோமக,பௌலீஸ, வசிஷ்ட. பைதாமஹ சித்தாந்தங்களை எடுத்துரைக்கிறது. ஐந்து சித்தாந்தங்களின் சுருக்கத் தொகுப்பாக இருப்பதால் பஞ்ச சித்தாந்திகா என்ற பெயரை இந்த நூல் பெற்றது.ஹிந்துக்களின் வானவியல் அறிவை விளக்கும் இது பிரமிக்க வைக்கும் ஒன்று என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்!சந்திரனும் இதர கிரகங்களும் சுய ஒளியால் பிரகாசிக்கவில்லை; சூரியனின் ஒளியாலேயே பிரகாசிக்கின்றன என்ற உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே!

 

சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.திரிகோணமிதியின் இன்றைய கண்டுபிடிப்புகளை (sin2 x + cos2 x = 1 உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள்) அன்றே இவர் ரத்தினச்சுருக்கமாக சூத்திர வடிவில் கூறி விட்டார்..மாஜிக் ஸ்குயர் எனப்படும் மந்திர சதுரங்களை (pandiagonal magic square of order four -டு தி ஆர்டர் ஆ•ப் •போர் – அதாவது வர்க்கத்தின் நான்கு மடங்கு என்ற அளவில்) இவர் விரிவாக விளக்கி இருப்பது நவீன கணித மேதைகளை வியப்புற வைக்கிறது.

 

நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு  சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்!

ஆர்யபட்டரின் சீடர்

இவருக்கு முன்னால் தோன்றிய ஆர்யபட்டர் வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்தார்.கி.பி,476ல் பிறந்த இவர் 550 முடிய  வாழ்ந்ததாகவும் இவரின் சீடரே வராஹமிஹிரர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.ஆர்யபட்டரிடம் வானவியல்,கணிதம் ஆகியவற்றை நன்கு பயின்ற வராஹமிஹிரர், அவரது புலமையை வெகுவாக வியந்து பாராட்டியதோடு அவரது சூத்திரங்களை தனது கணிதத் திறமையால் இன்னும் துல்லியமாக ஆக்கினார்!

வானவியலை ககோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ககோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ககோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர்.

 

ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகள்

பூமியின் சுற்றளவை 39968.0582 கிலோமீட்டர் என்ற அளவுக்கு இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிலோமீட்டர்கள் என இப்போது கணித்துள்ளனர்! ’பை’ எனப்படும் கணிதக் குறியீட்டின் அளவையும் .கிரஹணங்களைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் துல்லியமாக அவர் குறிப்பிடுகிறார். ‘காலக்ரியா’ என்ற அவரது அற்புதமான நூல் அனைத்து விவரங்களையும் விளக்குகிறது. இந்த நூலை அவர் தனது 23ம் வயதிலேயே எழுதி உலகத்தையே பிரமிக்க வைத்தார்!

 

மேலை நாடுகளுக்கு ஆர்யபட்டரே வழிகாட்டி

ஆர்யபட்டரின் அனைத்து நூல்களும் 13ம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்படவே மேலை நாடுகளில் ஹிந்து முறையிலான வேத ஜோதிடமும் அதன் அடிப்படையான வானவியல் கணிதமும் பரவலாயிற்று, அதுவரை முக்கோணங்களின் பரப்பளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திகைத்திருந்த அவர்கள் ஆர்யபட்டரின் சூத்திரங்களால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பிரமித்தனர்!

 

வராஹமிஹிரரின் புதல்வர்

ஆர்யபட்டரும் வராஹமிஹிரரும் வானவியலையும் ஜோதிடத்தையும் ஒரு புதிய பரிமாணத்திற்கு ஏற்றி வைத்த போது வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார்.

வராஹமிஹிரரின் புதல்வரான ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்!

-வராஹமிஹிரர் வரலாறு முற்றும்

 

 

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1)

அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1) by ச.நாகராஜன்

 

Picture: Sun Dial at Ujjain Observatory

This is part of S Nagarajan’s Series on Ancient Astrologers of India. Please read his earlier posts on Astronomers, Astrologers,Stars and Astrology.

 

காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்

 

புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர்  சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின்  லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!

ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று

 

‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி!  இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!

Picture: Ancient Ujjain Observatory

வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்

     வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.

விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு  அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

 

அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.

 

மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.

 

அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது  மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை  கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு  அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது  ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.

 

எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை

வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.

 

வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும்  அவரது நூல்கள் மூலம் காண முடியும்.

 

-வராஹமிஹிரர் வரலாறு தொடரும்