விமானங்களை எப்படி அமைப்பது? வைமானிக சாஸ்திரம் விளக்குகிறது (Post.8935)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8935

Date uploaded in London – – 16 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

15-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் கேள்வி-பதில் பகுதியில் ஒளிபரப்பப்பட்ட உரை

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நமக்கு முன் இருக்கும் கேள்வி பாரதத்தின் புராதனக் கலைகள், சாஸ்திரங்கள் யாவை என்பதாகும்.

ஏராளமான வியக்க வைக்கும் கலைகளை சாஸ்திரங்களைக் கொண்ட புண்ய பூமி பாரதம். அனைத்தையும் விளக்க முடியாது என்றாலும் கூட இவற்றின் ஒரு துளியைக் காண்பித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பராய சாஸ்திரி அவர்கள்.

சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.

புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.

விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.

இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.

வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.

ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.

நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.

அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.

வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ  முனிவரால் இயற்றப்பட்டது.

இவை அனைத்தையும் நன்கு  கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.

அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.

மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.

இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.

இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.

சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.

சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.

அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.

அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.

இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:

அக்ஷரலக்ஷண சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி, மற்றும் இதர  கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.

லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.

கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.

ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.

நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.

வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.

வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.

பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.

ப்ரபாகர சாஸ்திரம்:  மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.

நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும்  கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.

வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.

சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.

தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.

மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.

ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:

1) தத்வ தர்மப்ரகரணம்

2) தர்மாபேத அப்ஹேதௌ

3) சேஷாசேஷீபாவ

4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ

5) கர்மா

6) அதிகாரிநிரூபணம்

7) சமன்யாதிதேச

8) விசேஹதிதேச

9) ஊஹா

10) பாதா

11) தந்த்ரம்

12) ப்ரசங்கம்

இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.

ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.

சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.

கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.

இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.

புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.

சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.

சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.

மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள்  போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.

ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் :  வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.

இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் ஒரிஜினல் அதாவது மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.

நம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.

விளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.

tags — வைமானிக,  விமான, சாஸ்திரம், சுப்பராய சாஸ்திரிகள், விஞ்ஞான, 

***