WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,350
Date uploaded in London – – 18 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகவாசிஷ்டம்
விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்!
ச.நாகராஜன்
விதியா, மதியா எது வெல்லும்?
எப்போதும் எது வெல்லும்? விதி தான்! இதற்கு ஒரு கேள்வி வேறா!
இல்லை, இல்லை, ஊழையும் உப்பக்கம் காண்பர் – உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்கிறாரே வள்ளுவர்?
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் (குறள் 620))
ஔவையார் வேறு ஊடே வந்து சொல்கிறார் மதியே விதி ஆகி விடும் என்று?
அப்படி அவர் என்ன சொல்கிறார்?
சிவாய நம என்று சிந்திரு ருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
புரிகிறது, இறைவனைத் தொழுதால் அந்த பிரார்த்தனை புரியும் மதி விதியாகி நற்பயன் அளிக்கும்.
இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க யோக வாசிஷ்டத்தை அணுகலாம்.
அதில் இல்லாதது வேறு எதிலுமில்லையே!
யோக வாசிஷ்டம் கூறுவது :-
நமது முந்தைய முயற்சிகளே (செயல்களே) விதி எனப்படுகிறது!
நமது முந்தைய செயல்களின் விளைவு தவிர வேறு விதி என்று ஒன்றும் கிடையாது.
நமது முயற்சியை வைத்தே நமது சாதனைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே நமது முயற்சியே விதி ஆகும்.
நமது முந்தைய முயற்சிகளும் இப்போதைய முயற்சிகளும் ஒருவேளை ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தால் – வேறாக இருந்தால் – இரு காளைகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவது போல இருப்பின் அந்த இரண்டில் எது மிக்க சக்தி வாய்ந்ததாக இருக்கிறதோ அதுவே வெல்லும்.
கடந்த காலமோ நிகழ்காலமோ செய்யப்படும் முயற்சிகளில் எது வலியதோ அதுவெ வெல்லும்.
மனிதன் தனது விதியைத் தனது எண்ணங்களால் தானே நிர்ணயிக்கிறான்.
விதியின் படி நடக்க முடியாமல் இருப்பதைக் கூட அவன் நடக்கச் செய்வான்.
ஆகவே ஒருவன் தனது பழைய கால முயற்சியால் ஏற்படவிருக்கும் கெட்ட விதியைக் கூட இப்போதைய அதிக வலிமை பொருந்திய் முயற்சியால் மாற்ற முடியும். அதன் பல்லை உடைக்க முடியும்.
நல்ல விதமான முயற்சிகளால் இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.
வரிக்கு வரி வள்ளுவரின் குற்ளை அப்படியே இப்படி யோக வாசிஷ்ட்ம் ஆமோதிக்கிறது; வழி மொழிகிறது.
யோகவாசிஷ்டம் மனித முயற்சியை பௌருஷம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.
பௌருஷேண சர்வமாசாத்யதே |
மனித முயற்சியால் அனைத்தும் அடையப்படுகிறது.
அத்ரைகம் பௌருஷம் யத்னம் வர்ஜயித்வேதரா கதி: |
சர்வ துக்க க்ஷயப்ராப்தௌ ந காசிதுபபத்யதே ||
இங்கு மனித முயற்சி என்ற ஒன்றை விட்டு விட்டு வேறு எந்த வித பொருத்தமான ஒரு வழியாலும் எல்லாத் துன்பத்திற்கும் ஒரு முடிவைக் கட்ட முடியாது.
சர்வ துக்க க்ஷயத்திற்கு – துக்க நாசத்திற்கு வ்ழி பௌருஷம் மட்டுமே தான்!
இஹ ஹீந்தோரிவோதேதி ஷீதலாஹ்யதனம் ஹ்ருதி |
பரிஸ்யந்த பலப்ராப்தௌ பௌருஷாதேவ நாந்யத: ||
இங்கு மனித முயற்சியால் செய்யப்படும் நிறைய செயல்களின் விளைவாக வரும் பரிசினால் இதயத்தில் சந்திரனைப் போன்ற குளுமை கிட்டும்; வேறு எதனாலும் கிடைக்காது.
ந அன்யத – நான்யத – வேறு எதனாலும் அல்ல என்று வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.
இன்னும் பல ஸ்லோகங்களில் விதி மற்றும் மதி பற்றிய விளக்கம் தரப்படுகிறது.
The glory of human effort and Destiny என்பது பற்றி யோக வாசிஷ்டத்தைப் படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.
***
tags– யோகவாசிஷ்டம், விதியா மதியா