தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்? (Post No.5295)

Written by S NAGARAJAN

Date: 7 August 2018

 

Time uploaded in London – 7-35 AM  (British Summer Time)

 

Post No. 5295

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

 

ச.நாகராஜன்

 

தலையிலே குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடுவது ஏன்?

இதற்கான சுவையான வரலாறு ஒன்று உண்டு.

 

அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை ஒரு சிறுவனாக உரு மாறியது. அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்த அகத்தியர் விநாயகரே அப்படி காக்கை உருக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்தார். சிறுவனைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த அகத்தியர் விநாயகரை நோக்கி, “ அறியாமல் உங்களைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த என்னை மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினார். அத்தோடு, “அந்தக் குட்டு எனக்கே ஆகுக” என்று கூறி இரு கைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக் கொண்டார். ‘இது போலக் குட்டிக் கொண்டு வணங்குவோரின் வணக்கத்திற்குப் பெரிதும் மகிழ்ந்து அருள் புரிதல் வேண்டும்’ என்றும் அகத்தியர் விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். “அவ்வாறே அருள் புரிகின்றோம்” என்று விநாயகர் வரத்தைத் தந்தார். அது முதல் குட்டிக் கொண்டு விநாயகரை வழங்கும் பழக்கம் தோன்றியது. இந்தச் சம்பவம் நடந்த இடம் கொங்கு நாடு. ஆக இப்படிக் குட்டிக் கொண்டு வழிபடும் முறை கொங்கு நாட்டிலேயே முதலில் தோன்றியது.

அந்தப் பெருமை உடைத்து கொங்கு மண்டலம் என்று கொங்கு மண்டல சதகம் ஒன்பதாம் பாடல் பெருமை படக் கூறுகிறது.

பாடலைப் பார்ப்போம்:

 

ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து    செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற் றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு       மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே

 

பொருள் : விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக் கொள்ளும் பழக்கமானது, முதலில் உண்டான இடம் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

(ஸ்)காந்தம் காவிரி நீங்கு படலத்தில் வரும் ஒரு பாடல் இதைக் கூறுகிறது :

என்னே தமியே னெனவே யினிநின்

முன்னே நுதலின் முறையா லிருகை

கொன்னே கொடுதாக் குனர்தங் குறைதீர்த்

தன்னே யெனவந் தருள்செய் யெனவே

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடும் பழக்கத்திற்கான காரணம் இது தான்!

***

புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை! – பகுதி 1 (Post No. 3117)

 

gaja puja ganesh

புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை! – பகுதி 1 (Post No. 3117)

 

Written by London swaminathan

 

Date: 3 September 2016

 

Time uploaded in London: 9-53 AM

 

Post No.3117

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்து மதத்தில் கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிக சேஷ்டைகள், விஷமங்கள் செய்ததது பிள்ளையார்தான்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிள்ளையார் கதை உண்டு. இவை எல்லாவற்றையும் தொகுத்தால் புதிய விநாயகர் புராணம் வந்துவிடும். ஆனால் பிள்ளையாரின் குறும்புத்தனங்கள் எல்லாம் நன்மையிலேயே முடியும். பெயரிலேயே பிள்ளை (யார்) என்று இருக்கும்போது குறும்புத்தனங்கள் இருப்பது நியாயம்தானே!

 

புதிய பிள்ளையார் புராணம் மிக நீண்டது. முதலில் பட்டியலைக் கொடுத்துவிடுகிறேன். பிறகு ஒவ்வொரு பிள்ளையாரின் பெருமையையும் சுருக்கி வரைகிறேன்.

பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப் பிள்ளையார் வரை! வாதாபி கணபதி முதல் வரசித்தி கணபதி வரை !! எல்லோரையும் காண்போம்.

madurai pillayar

மதுரை மேலமாசிவீதி – வடக்கு மாசிவீதி சந்திப்பிலுள்ள பிள்ளையார் மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார். நாஸ்தீகரான நேருவே , மதுரை வந்தபோது காரை நிறுத்தி கும்பிடு போட்ட (காங்கிரஸ் பக்தர்களால் கும்பிடு போடும்படி செய்யப்பட்ட) பிள்ளையார் என்பதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 

(ஆலமரத்துக்கடியில் குடிகொண்ட இப்பிள்ளையாரை நான் லண்டனில் குடியேறும்வரை வழிபட்டு வந்தேன். இப்போதும் இந்தியாவுக்குப் போகும் போதெல்லாம் மதுரைக்குச் சென்று மீனாட்சியையும் இந்தப் பிள்ளையாரையும் தரிசிக்காமல் திரும்புவதில்லை).

 

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள கவர்ச்சிகரமான , பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர். அ து மட்டுமல்ல இந்தப் இள்ளையார் சிலை, மதுரைக் கோவிலைக்கட்ட மண்  தோண்டியபோது, மாரியம்மன் தெப்பக்குளப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாம். முஸ்லீம் ஆட்சியில் அழிந்த பல கோவிலகளில் ஒன்று அப்பகுதியில் இருந்திருக்கலாம். (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க: – “21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?”, posted on 30 May 2013)

 

மதுரைக் கோவிலுக்குள் உள்ள மற்றொரு புகழ்மிகு பிள்ளையார், (அம்மன் சந்நிதிப்) பொற்றமரைக் குளத்தின் தெற்குப் பிரகாரத்திலுள்ள விபூதிப் பிள்ளையார் ஆவார். பக்தர்கள் அனைவரும் அவரை வலம் வந்து ஒரு பிடி விபூதியை அவர் தலையில் அபிஷேகம் செய்து பாதத்திலுள்ள விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ளுவர். விபூதியும் அவர் வைக்கப்பட்டுள்ள மரத்தொட்டியில் விழுவதால், நாம் தனியாக விபூதி கொண்டுபோக வேண்டிய அவசியமில்லை.

கோவிலில் இன்னும் பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் உண்டு. ஆனால் அவைகளின் சிறப்புகளைச் சொல்லும் கதைகள் ஏதும் இல்லை.

 

colour ganesh from madur kulasekar

கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதை

ஒரு கரும்பு வியாபாரி வண்டி நிறைய கரும்பு கொண்டுவந்தான். பிள்ளையார், ஒரு சிறு பையன் வேடத்தில், அவனிடம் சென்று கரும்பு கேட்டார். அவன் அந்தப் பையனை விரட்டி விட்டான். மறுநாள் அவனுடைய கரும்புகள் அனைத்தும் யாரோ சாப்பிட்டுவிட்டுத் துப்பிய சக்கையாக கிடந்தன. உடனே அவன் தன து தவற்றை உணர்ந்தான். பிள்ளையாரே தமக்கு அருள்புரிய இப்படி வந்தாரென்றும், அவன் சிறுவனுக்குக் கரும்பு கொடுக்காமல் திட்டி விரட்டியது தவ று என்றும் உணர்ந்து ஆயிரம் கரும்புகளை கணபதிக்குப் படைத்தான். அன்று முதல் அவன் செழிப்பு அதிகரித்தது. இந்தப் பெருமை ஊரெங்கும் பரவவே அந்தப் பிள்ளையாரின் பெயர் கரும்பு ஆயிரம் பிள்ளையார் ஆயிற்று

 

 

50 பிள்ளையார்களின் நீண்ட பட்டியல்:–

 

இதோ தமிழ் நாட்டின் பிள்ளையார் கோவில்களின் (சந்நிதிகளின்) நீண்ட பட்டியல்:–

 

முக்குறுணி விநாயகர்  — மதுரை மீனாட்சி கோவில்

விபூதிப் பிள்ளையார் – மதுரை மீனாட்சி கோவில்

நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை

குடைவரைப் பிள்ளையார் — திருப்பறங்குன்றம் கோவில்

கரும்பாயிரம் பிள்ளையார்  – கும்பகோணம்

 

அழகிய விநாயகர் – திருவாவடுதுறை

ஆண்ட பிள்ளையார் – நறையூர் சித்தீச்சுரம்

ஆதி விநாயகன் – திருவையாறு

ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்

உச்சிப்  பிள்ளையார் – திருச்சிராப்பள்ளி

ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு

கங்கைக் கணபதி – குடந்தை கீழ்க்கோட்டம்

கடுக்காய்ப் பிள்ளையார் – திருக்காறாயில்

கருக்கடி விநாயகர் – திருக்கச்சூர்

கள்ள வாரணப்  பிள்ளையார் – திருக்கடவூர்

கற்பகப் பிள்ளையார் – கடிக்குளம், திருக்காவூர்

கற்பக விநாயகர்– பிள்ளையார்பட்டி

கூப்பிடு பிள்ளையார் – திருமுருகன் பூண்டி

கைகாட்டு பிள்ளையார் – திரு நாட்டியத்தான்குடி

கோடி விநாயகர் – கொட்டையுர்

சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு

சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி

சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்

செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை

சொர்ண விநாயகர் – திருநள்ளாறு

 

ganesh gold

தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்

துணையிருந்த பிள்ளையார் – திருப்பனையூர்

நாகாபரண விநாயகர் – நாகைக் காரோணம்

நீர்த்தன விநாயகர் – இன்னம்பர்

படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை

மணக்குள விநாயகர் – பாண்டிச்சேரி

மாணிக்க விநாயகர் திருச்சி

நவசக்தி  விநாயகர் – மைலாப்பூர், சென்னை

அஸ்வத்த விருட்ச  விநாயகர் – தி.நகர், சென்னை

படித்துறை விநாயகர் – திருவிடை மருதூர்

பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்

பொய்யா விநாயகர் – திருமாகறல்

பொல்லாப்  பிள்ளையார் – திருநாரையூர்

மாவடிப் பிள்ளையார் – நாகைக் காரோணம்

மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்

முக்குறுணிப் பிள்ளையார் – சிதம்பரம், மதுரை

வரசித்தி விநாயகர் – திருவல்லம்

வலம்புரி விநாயகர் – திருக்களர்

வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)

வீர உறத்தி  விநாயகர் – திருமறைக்காடு

வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி இடும்பாவனம்

வேதப்  பிள்ளையார் – திருவேதிகுடி

தொடரும்……………..

 

விநாயகரின் ரசாயன யுத்தம்

 

ரசாயனப் போர் முறை (Chemical warfare) மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட போர் முறை. ஆனால் எதிரிகள் முதலில் அதைப் ப்ரயோகித்தால் தற்காப்புக்காக அதைச் செய்வதில் தவறில்லை. இதைத் தான நாம் கும்பிடும் பிள்ளையாரும் செய்தார்.

 

விநாயகரின் 16 முக்கிய நாமாக்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: 1.வால் நட்சத்திரம், 2.விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் (தூமகேது) ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை ( Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைக் கேள்வி கேட்கவே அவன் பிள்ளையார் மீதும் புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். அவரோவெனில் அத்தனை புகையையும் உள்ளுக்கு இழுத்தார். தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே அவருக்கு தூம கேது என்று பெயர்.