
Written by S Nagarajan
Post No.7537
Date uploaded in London – – 5 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கொங்குமண்டல சதகம் பாடல் 69
வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!
ச.நாகராஜன்
கொங்குமண்டலத்தில் உள்ள கஞ்சமலையில் ஏராளமான வியத்தகும் மூலிகைகள் உள்ளன. இவற்றில் நரை திரை போக்கி வயோதிகரை வாலிபராக்கும் மூலிகையும் ஒன்று.
தான் குமரனாக விரும்பிய வயோதிகரான மூலன் என்ற ஒரு அந்தணர் இதை அடைய விரும்பினார்.
கஞ்சமலையின் உள்ள கருங்காட்டினுள் சென்று மூலிகையை தேடலாம் என்று நினைத்த அவர் தன் மாணாக்கனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர் வெளியே சென்ற சமயம் அவரது மாணாக்கன் உலையில் இருந்த சோறை ஒரு கருநெல்லிக் கோலால் கிளறினான். குச்சி கறுப்பாக இருந்ததால் உலையில் இருந்த சோறு அனைத்தும் கறுப்பாயிற்று. சமைத்த சாதம் இப்படிக் கறுப்பாகி விட்டதே, குரு வந்தால் கோபிப்பாரே என்று சீடன் பயந்தான்.
நிறம் மாறிய அன்னத்தைத் தானே சாப்பிட்டு விட்டு வேறு புதிதாக அன்னத்தைச் சமைத்து வைத்தான்.
அந்த கறுப்பு அன்னத்தைப் புசித்ததால் சீடன் நரை திரை நீங்கி இளமை எய்தினான்.
தனது குருவுக்குப் பயந்து அவன் ஒளிந்து கொண்டான்.
மலை மீதிலிருந்து இறங்கி வந்த மூலன் தன் சீடன் எங்கே என்று தேடி, உரக்கக் கூவினான். நீ எங்கே இருக்கிறாய் என்ற குருவின் குரலைக் கேட்ட சீடன் அவர் முன்னே வந்து நின்றான். அவன் யார் என்று தெரியாத குரு அவனை யார் என்று கேட்க அவனோ நான் தான் உங்கள் சீடன் என்று சொல்ல அவர் வியந்து போனார்.
எப்படி இப்படி ஆனாய் என்று அவர் கேட்க சமைத்த சாதம் கறுப்பான சம்பவத்தைக் கூறினான்.
அந்தக் குச்சி எங்கே என்று கேட்டார் குரு.
அதை முறித்து அடுப்பில் வைத்து எரித்து விட்டேன் என்றான் சீடன்.
ஒரு கணம் திகைத்துப் போனார் குரு.
பின்னர் ஒரு யோசனை செய்தார். அவன் வாயில் விரலை விட்டு அவன் உண்ட சாதத்தைக் கக்க வைத்தார். அதைத் தான் எடுத்து உண்டார்.
அவரும் வாலிபர் ஆனார்.
இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.
பாடல் இதோ:
உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்
தலையின் மயிருங் கருக்கக் கண் டேயவன் சற்குருவும்
நிலையுடன் கக்குவித் துண்டடைந்த் தானன் னெறியிற் கஞ்சமலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே
இப்பாடலின் பொருள் :
உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.
இந்த வரலாறைக் கரபுரநாதர் புராணம் கஞ்சமலைச் சருக்கத்தில் இப்படி விவரிக்கிறது:

கரபுரநாதர் புராணம்
அந்தமா ணாக்கன் றன்னை யடுகைநீ செய்யென் றோதி
புந்தியின் மருந்து தேடிப் போயின னயலிற் சீட
னுய்ந்திடக் கருநெல் லிக்கொம் பொன்றினா வனந் துழாவ
வெந்தனங் கரிபோ லாக வெருவியன் னத்தை யுண்டான்
நரைதிரை மாறி மேனி நடந்தவீ ரெட்டாண் டேபோற்
புரையிலா வழகு பெற்றுப் புடமிடு பொன்போ லானான்.
துழாவிய கொம்பெங் கென்றான் சுல்லியிற் போட்டே னென்ன
வழாதுநீ யுண்ட சோற்றை வாயினிற் கக்கென் றோத
விழாத சோ றதனைக் கக்க மிச்சிலைக் குருவு முண்டான்
றொழாரெவ ரிவர்க டம்ப்பைச் சுந்தரப் பால ரானார்
- கஞ்சமலைச் சருக்கம்
இப்படிப்பட்ட அரிய மூலிகைகள் இருப்பது பற்றி வியத்தகும் நல்ல பாடல்கள் மூலமாக அல்லவோ அறிய முடிகிற!
***