மழை வர பிரார்த்தனை

வினவுங்கள் விடை தருவோம் கேள்வி-2

மழை வர பிரார்த்தனை

 

மழை பெய்விக்க வருண ஜபம் செய்கிறார்கள். தமிழில் ஏதேனும் பாடல்கள் இருக்கிறதா? (ராமதாஸ் கேட்கும் கேள்வி)

 

கீழ்கண்ட பாடல்களை சில ‘வெப்சைட்டில்’ இருந்து எடுத்துள்ளேன். இவைகளை மழை பெய்விக்கவும் பொதுவாக கிரகங்கள் தொடர்பான கோளாறுகள் போகவும் படிப்பதுண்டு.

 

1.திருப்பாவை : ஆண்டாள் பாடியது

 

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

 

விளக்கம்: உலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னாலியன்ற உதவியைச் செய்வார்கள். நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர் நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான். அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள். மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல் மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும். நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு; ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல்; ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு; மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு; பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு; ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்! நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள்.

 

2. இசை விற்பன்னர்கள் இருந்தால் அமிர்தவர்ஷினி ராகம் அல்லது மேகரஞ்சனி ராகத்தில் பாடவோ வாத்தியங்களை இயக்கவோ செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையும் மனம் குவிந்த பிரார்த்தனையும் இருந்தால் கைமேல் பலன் கிடக்கும் என்பது முன்னோர் கண்ட முடிவு. எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர்,  அமிர்த வர்ஷினி ராகத்தில் “ஆனந்த அம்ருதகர்ஷினி” என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது.

 

3.ஆதிகாலத்தில் வறட்சி எற்பட்டால் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் வர அழைப்பார்கள். கோசல நாட்டில் வரட்சி ஏற்பட்டவுடன் ரிஷ்யசிருங்க (கலைக்கோட்டு) முனிவரை காட்டில் இருந்து அழைத்துவந்தார் தசரத மாமன்னன். உடனே மழை கொட்டியது. இதனால்தான் “நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்ற வாசகம் வந்தது.

 

4.தெய்வம் தொழாள் கொழுநன் (கணவன்) தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று வள்ளுவரும் கூறுகிறார்.

 

5.தேவாரம்: கோளறு திருப் பதிகம் (திருஞான சம்பந்தர் பாடியது. இதைப் பாடினால் கிரகங்கள் காரணமாக நிகழும் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை)

 

1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க

எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையது ஊர்தி செயமாது பூமி

திசை தெய்வம் ஆன பலவும்

அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறை ஓதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்

கொடுநோய்கள் ஆன பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்

விடை ஏறும் நங்கள் பரமன்

துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடும்  நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

6. வாள்வரி அதள் ஆடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடும் உடனாய்

நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக

விடையேறு செல்வன் அடைவு ஆர்

ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த

மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்

பசு ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்

வருவகாலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு

குணம் ஆய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர் செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து

மறைஞான ஞானமுனிவன்

தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே.

என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

 

நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (மகா கவி பாரதி)

 

Please read my earlier posts:

1.Spaceships and Special Prayer Days (February 2012)

2.மாதத்துக்கு மூன்று மழை ஏன்? (டிசம்பர் 2012)

3.Rain Miracles: Rain by Fire and Music

Please send your questions to : swami_48@yahoo.com