விமானத்தில் பறக்கும்போது நோபல் பரிசு கிடைத்தது!(Post No.2797)

live science

Written  BY S NAGARAJAN
Date: 10 May 2016

 

Post No. 2797

 

 

Time uploaded in London :–  6-42 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 6-5-2016 இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியான  கட்டுரை

பிரபல டைரக்டர் கே.பாக்யாராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வாரந்தோறும் வெளி வரும் சிறந்த பத்திரிகை பாக்யா.

சந்தா முதலிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி bhagyaweek@gmail.com

 

 

மன்னிக்க வேண்டுகிறேன்!

.நாகராஜன்

 

 sarh miller1

“வாழ்க்கையில் பிளவு பட்ட எதையும் ஒட்டிவிடும் சூப்பர் கோந்து மன்னிப்பு தான்! அது எதையும் ரிப்பேர் செய்து விடும்!” –லின் ஜான்ஸ்டன்

 

உலகின் பிரபல அறிவியல் இதழான லைவ் ஸயின்ஸ் (Live Science) உலகிலுள்ள அறிவியல் கட்டுரைகளிலெல்லாம் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வாராவாரம் முத்திரைக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்திய ஏப்ரல் 2016, இரண்டாவது வார இதழில் அது வெளியிட்டுள்ள கட்டுரை ‘சாரி ஸயின்ஸ்’ (Sorry Science) பற்றியது. அதாவது மன்னிப்பு பற்றிய அறிவியல் நோக்கிலான கட்டுரை தான் சாரி ஸயின்ஸ் கட்டுரை!. சாரா மில்லர் என்பவர் இதை எழுதியுள்ளார்.

 

 

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால், ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த மன்னிப்பில் ஆறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்கிறது அறிவியல் ஆய்வு. அமெரிக்காவிலுள்ள ஓஹையோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் லெவிகி (Roy Lewicki),” மன்னிப்பு நிச்சயம் வேலை செய்யும் – அதில் ஆறு அம்சங்கள் இருந்தால்” என்கிறார். அவர் தான் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர்.

 

 

மன்னிப்பு கேட்பதில் முதலாவது அம்சம் தவறுக்கான பொறுப்பை தான் ஏற்பதாகும். “நான் தான் தவறு செய்தேன்.,” என்று ஒத்துக் கொள்ளும் போது பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் மேம்படுகிறது; ஆறுதல் அடைகிறது.

அடுத்ததாக தவறினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய முன்வருவது. ’ஏற்பட்ட ‘டாமேஜை’ சரி செய்கிறேன் என்று சொல்லும் போது எதிராளியின் மனம் மிகவும் சமாதானப்பட்டு விடும்.

 

 

மன்னிப்பு கேட்கும் போது கேட்பவருக்குப் புரியும் அதே மொழியில் கேட்க வேண்டும். உலகில் எந்த  மொழியினராக இருந்தாலும் அனைவருக்கும் பிடிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள், “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று சொல்வது தான்!

மன்னிப்பை முன் வைக்கும் போது ஒரு உணர்வு பூர்வமான தொடர்பை நீங்கள் பாதிக்கப்பட்டவருடன் கொள்ள வேண்டும். உங்களின் தவறினால் அவருக்கு எப்படிப்பட்ட வலி அல்லது வேதனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் வேதனைப்படுவதை அவர் உணர வேண்டும்,

 

 

அடுத்து பாதிக்கப்பட்டவர் சொல்வதை முழுதுமாக அமைதியாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

கடைசியான அம்சம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்பது தான்!

இந்த ஆய்வில் 755 பேர் பங்கேற்றனர்.

முதலாவது சோதனையில் 333 பேர்கள் பங்கேற்றனர். மன்னிப்பின் ஆறு அம்சங்களோ அல்லது அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுக்கப்பட்டு அதை எப்படி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

இரண்டாவது சோதனையில் 422 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்று முதல் ஆறு வரையிலான மன்னிப்பு அம்சங்களை படிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு எப்படி அதை அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என்று பார்க்கப்பட்டது.

 

 

முதல் சோதனையில் மன்னிப்பின் எத்தனை அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று முன்னமேயே சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் சோதனையில் எத்தனை அம்சங்கள் மன்னிப்பு கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படவில்லை.

ஆறு அம்சங்களையும் கொண்ட மன்னிப்பே சிறந்த மன்னிப்பாக அனைவராலும் கருதப்பட்டதை சோதனை முடிவு தெரிவித்தது.

 

மன்னிக்க வேண்டுகிறேன் என்பதைச் சொல்லும் போது ஆறு அம்சங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன் என்று கூறிய ஆய்வின் தலைவர் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

இந்த ஆய்வின் குறையாக ஒன்றையும் இது பற்றி சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சோதனையில் மன்னிப்பு என்பது எழுதிய வாசகங்களைப் படிப்பதாக மட்டும் அமைந்துள்ளது. நேரடியாக மன்னிப்பு கேட்பது போல அமையவில்லை.

 

 

நேருக்கு நேர் கண்ணொடு கண் பேசும் மொழி இதில் இல்லை. அந்த உணர்வு பூர்வமான வெளிப்பாடு மன்னிப்பு கேட்பதில் தலையாய அம்சமாகும் என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

மன்னிப்பு கேட்பதைப் பற்றி ஆய்வு நடத்திய இன்னொரு உளவியல் நிபுணரான ஃபெர் (Fehr) இது பற்றி ஏராளமான ஆய்வுப் பேப்பர்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அவர், “மன்னிப்பு என்பது ஒருவரின் செயலையும் அந்த நபரையும் இரண்டாக பிரிவு படுத்திக் காட்டும் ஒன்று” என்கிறார்.

“நான் செய்த செயல் மோசம் தான். ஆனால் நான் கெட்ட ஆள் இல்லை. இதை உளமாரச் சொல்கிறேன்.” என்று ஒருவர் சொல்லும் போது பாதிக்கப்பட்டவரின் மனம் சமனம் அடைந்து மன்னிப்பை நல்கும் மனப்பான்மையை அடைகிறது என்கிறார் அவர்.

 

 

மன்னிப்பைக் கேட்கும் சமயமும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

ஆக மன்னிப்பு கேட்பதைக் கூட அறிவியல் ரீதியாகக் கேட்கலாம். மற்றவர்களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தலாம்!

200px-Jerome_Karle,_2009

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இரசாயனத்தில் 1985ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம் கார்லே (Dr Jerome Karle- தோற்றம் 18-6-1918 மறைவு 6-6-2013)

அவர் இஸபெல்லா லுகோஸ்கி என்ற இளம் பெண்ணை இரசாயன சோதனைக்கூடத்தில் 1940 ஆண்டு சந்தித்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக 1942இல் அவர் இஸபெல்லாவை மணந்தார். எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி துறையில் இருவரும் இரு வேறு ஆராய்ச்சிகளைச் செய்தனர்.

 

 

நோபல் பரிசு பெற்ற போது அதில் தன் மனைவிக்கு உரிய கௌரவம் தரப்படவில்லையே என்று வருத்தமுற்றார் அவர்.

நோபல் பரிசு பெற்ற செய்தி அவருக்கு ஒரு பெரும் ஆச்சரியமூட்டும் செய்தியாகவே அமைந்தது.

அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்த போது அவர் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.

 

திடீரென்று விமான பைலட் ஒரு செய்தியை மைக்கில் அறிவித்தார்.

“நாம் இந்த தருணத்தில் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டுள்ளோம். நம்முடன் இப்போது தான் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்முடன் இதோ இந்த விமானத்தில் இருக்கிறார். அவருக்கே தனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பது இதுவரை தெரியாது”

விமானிக்குக் கிடைத்த செய்தியை அவர் சுடச்சுடச் சொல்ல அனைவரும் பரபரப்புடன் ஆரவாரித்தனர்.

 

 

விமானி தொடர்ந்தார்: “உண்மையில் இந்த நோபல் பரிசு 29-சி சீட்டில் அமர்ந்திருக்கும் டாக்டர் ஜெரோம் கார்லேக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ள செய்தியை அவர் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர் மூனிச்சிலிருந்து இன்று காலை  கிளம்பி விட்டார். ஆகவே இப்போது இந்த நல்ல செய்தியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”

 

 

பயணிகள் எல்லோரும் குதூகலப்பட ஜெரோமுக்கு விமானி சாம்பெய்ன் கொடுத்து விசேஷமாக கௌரவித்தார்.
உயரத்தில் பறந்தவருக்கு உயரிய விருது கிடைத்த செய்தியை உரிய விதத்தில் அளித்தார் விமானி!

*************