Written by S NAGARAJAN
Date:20 April 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.3833
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
விளம்பர குருவின் நல்ல அறிவுரை!
ச.நாகராஜன்
“படைப்பாற்றல் திறன் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்த்து விடும்” – ஜார்ஜ் லாய்ஸ்
அறிவியல் யுகத்தில் எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துவது ஒரு தனிக் கலை ஆகி விட்டது. ஏராளமான நவீன சாதனங்களைப் பயன் படுத்தி அழகிய மாடல்கள் பஞ்ச் வசனங்களை உதிர்க்க ஏராளமான உத்திகளுடன் மக்கள் மனதைக் கவர வழி வகுக்கின்றனர் ‘அட்வர்டைஸ்மெண்ட்’ குருமார்கள்.
இந்த ‘அட்’ குருக்களில் (AD – Guru) தனக்கெனத் தனி இடம் பிடித்திருப்பவர் ஜார்ஜ் லாய்ஸ் (George Lois). இவர் தனது அனுபவங்களை எல்லாம் தொகுத்து படைப்பாற்றலுடன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான குறிப்புகளை ‘டாம் குட் அட்வைஸ்’ ( Damn Good Advice) என்ற புத்தகத்தில் தந்துள்ளார்.
விளம்பர குரு! உலகின் நம்பர் ஒன் படைப்பாளி! கேட்கவா வேண்டும் அறிவுரைகளுக்கு?! 120 அறிவுரைகளை நச்சென்று கொடுக்கிறார் வித விதமான சுவையான சம்பவங்கள், மேற்கோள்களுடன்!
முதலில் மனிதர்களை அவர் நான்கு வகையாகப் பிரிக்கிறார்:
- மிகுந்த புத்திசாலிகள், உழைப்பாளிகள்
- மிகுந்த புத்திசாலிகள், ஆனால் சோம்பேறிகள்
- வடிகட்டிய முட்டாள்கள், சோம்பேறிகள்
- வடிகட்டிய முட்டாள்கள், ஆனால் உழைப்பாளிகள்
முதல் இரண்டு பிரிவினருக்கு லாய்ஸின் அறிவுரைகள் பயன்படும். மற்ற இரு பிரிவினரிடம் அனாவசியமாகத் தனது அறிவுரைகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார் அவர்.
உங்களிடம் ஏராளமான சாதனங்கள் இருக்கலாம். ஆனால் படைப்பாற்றலுடன் கூடிய ஐடியா இல்லை என்றால் வெற்றி பெற முடியாது. ஒரு சின்ன கருத்துருவாக்கம், நல்ல வார்த்தைகள், சித்திரம் இவையெல்லாம் வாழ்க்கையில் மாயாஜால வெற்றிக்கான வித்துக்கள். முதலில் நல்ல ஐடியாவை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் லாய்ஸ்.
வாய்ப்புக் கிடைக்கும் போது உங்கள் ஐடியாவை ஒரு விநாடியில் நூற்றில் ஒரு பங்கிற்குள், ஒரு நேனோ செகண்டிற்குள் சொல்லும் அளவு நீங்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.
எதையும் சுருக்கமாகச் சொல்லுங்கள். உரிய வார்த்தைகளில் விளக்குங்கள். முதலில் வார்த்தைகள், பின்னரே சித்திரங்கள் அல்லது வீடியோ மூலமான விளக்கம். இதுவே அனைவரையும் கவரும் எளிய மாஜிக் வழி என்கிறார் அவர்!
ஆற்றலுடன் செயல்படுங்கள். ஆற்றல் ஆற்றலைக் கூட்டிக் கொண்டே இருக்கும். இதற்காக மனதையும் உடலையும் வலுப்படுத்தும் விதத்தில் ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லும் லாய்ஸ் ‘வார் கேம்ஸ்’ எனப்படும் விளையாட்டைத் தான் விளையாடிக் கொண்டே இருப்பதாகக் கூறுகிறார்.
விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் உடலுக்கும் மனதுக்கும் அதிக ஆற்றலைத் தரும். செஸ் விளையாட்டும் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும்.
தாமஸ் ஹக்ஸ்லி என்னும் படைப்பாற்றல் நிபுணர் கூறுவது: “செஸ் போர்ட் என்பது தான் உலகம். அதில் உள்ள காய்கள் தான் பிரபஞ்சத்தின் அம்சங்கள். செஸ் விளையாட்டின் விதிகளைத் தான் இயற்கையின் விதிகள் என்று கூறுகிறோம்”
முன்னேற்றத்திற்கு வயது ஒரு தடையில்லை. உலகின் பிரபல அறிவியல் நூலான ‘ தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீஸஸ்’ என்ற நூலை எழுதும் போது டார்வினுக்கு வயது 50.
மக்டொனால்ட் என்ற சங்கிலித் தொடர் உணவு விடுதிகளை ஆரம்பிக்கும் போது ரே க்ராக்கிற்கு வயது 52.
ஹரே கிருஷ்ணா இயக்கத்தை அமெரிக்காவில் ஆரம்பித்த பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதர் அந்த இயக்கத்தை நிறுவிய போது அவருக்கு வயது 69. அவர் கையில் இருந்த பணம் வெறும் 7 டாலர் தான்!
“எப்போதாவது எதையாவது செய்ய முயன்றிருக்கிறீர்களா? அதில் தோற்றிருக்கிறீர்களா? பரவாயில்லை. போனது போகட்டும். மீண்டும் முயலுங்கள். தோல்வியைச் சந்தியுங்கள். ஆனால் நல்ல விதமாகத் தோல்வியை அணுகுங்கள்.” – வெற்றிக்கான வழியாக லாய்ஸ் தரும் டிப்ஸ் இவை.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் உங்களை நல்ல விதமாக அறிமுகப்படுத்தும் நல்ல பொதுத் தொடர்பு அதிகாரிகளாக மாற்றுங்கள்.
தேவையில்லாதவருடன் பழகவே பழகாதீர்கள்.
நண்டு எப்போதும் ஒரு நண்டு தான்! பாம்பு எப்போதும் ஒரு பாம்பு தான். உங்கள் படைப்பாற்றல் மிக்க வாழ்க்கையில் ஒரு முட்டாள் எப்போதும் ஒரு முட்டாள் தான்! உங்களின் அருமையான யோசனையை அங்கீகரிக்கத் தெரியாதவரிடம் பழகி என்ன பிர்யோஜனம்? ஒரு நண்டுக்கு நேராக நடக்க உங்களால் கற்பிக்க முடியுமா, என்ன?
உலகில் பல அரிய காரியங்கள் கொஞ்சம் துணிச்சல் இல்லாததனால் தான் வெற்றி பெறாமல் போய்விட்டன. வெப்ஸ்டர் அகராதியில் தைரியம் என்ற வார்த்தைக்கு அபாயகரமான கஷ்டமான, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயத்தில் அதை துணிகரமாக எதிர்கொள்ள உறுதியாகத் தீர்மானித்தல் என்று அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே.போல்ஸ்மூர் சிறையில் 27 வருட காலம் கழித்த நெல்ஸன் மண்டேலா வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லி என்ற கவிஞரால் 1875ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இன்விக்டஸ் (ஜெயிக்க முடியாத என்ற பொருள் கொண்ட) என்ற கவிதையை அடிக்கடி தன் தோழர்களுக்கு சிறையில் படித்துக் காண்பித்துக் கொண்டே இருப்பார். அதில் வரும் கீழ்க்கண்ட அமர வரிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தது போலவே நெல்ஸன் மண்டேலாவைச் சார்ந்தவர்களுக்கும் உத்வேகம் அளித்து வெற்றியைத் தந்தது.
“It matter not how strait the gate, How charged with punishment the scroll, I am the master of my fate, I am the captain of my soul”
இது போன்ற உற்சாகம் தரும் நூற்றி இருபது அறிவுரைகளைப் படித்தவுடன் ‘அட, நல்ல அறிவுரை தான்’ என்று வாழ்க்கையை ஒரு புதிய அணுகுமுறையுடன் உத்வேகத்துடன் பார்க்க வைக்கிறார் லாய்ஸ்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
இயற்பியல் விஞ்ஞானியான ராபர்ட் ஓப்பன்ஹீமர் (Robert Oppenheimer) எட்டு மொழிகளில் புலமை கொண்ட நிபுணர். கவிதை,மொழி வன்மை, தத்துவம் போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட பன்முக விற்பன்னர். இந்த அபாரமான அறிவால்அவருக்குப் பல தடவைகள் பெரும் சங்கடங்கள் ஏற்பட்டதுண்டு.
அவரால் மற்றவர்களுக்குள்ள குறைவான அறிவுத் திறனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னைப் போலவேஅனைவரும் எல்லாவற்றிலும் வல்லுநர்கள் என்றே அவர் எண்ணிக் கொண்டிருந்தார்.
1931ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது:
கலிபோர்னியாவில்,
பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தன் சகாவான லியோ நெடெல்ஸ்கி (Leo Nedelsky) என்பவரிடம் தனக்காக ஒரு சொற்பொழிவைத் தயாரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். அந்தச்சொற்பொழிவுக்கான அனைத்தும் ஒரு புத்தகத்தில் இருந்ததால் அதை லியோ தயாரிப்பது மிகவும் சுலபம் தான் என்று அவர் எண்ணினார்.
ஆனால் புத்தகத்தை வாங்கிக் கொண்ட சிறிது நேரத்திலேயே மிகுந்த குழப்பத்துடன் அவரிடம் லியோ ஓடி வந்தார்.
“இது ஜெர்மன் மொழியில் அல்லவா இருக்கிறது” என்று குழப்பத்துடன் அவர் கேட்டார். அவருக்கு ஜெர்மானிய மொழி தெரியாது!
“ஆமாம், ஆனால் அது சுலபமான நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி தானே இருக்கிறது” என்று பதில் சொன்னார் ஓப்பன்ஹீமர்.
அனைவருக்கும் ஜெர்மன் மொழி தெரியும் என்பது அவரது எண்ணம். தன்னைப் போலவே அனைவரையும் இப்படி நினைத்ததால் அடிக்கடி இது போன்ற சங்கடங்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது!
*****