புறச் சூழல் விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது! (Post No.5379)

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 August 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5379

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற பத்தாவது உரை.

 

விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!

 

உலகெங்கும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பல நாடுகளில் புதிய தலைவர்கள் அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர். கிரீஸ், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வெப்பநிலை உயர்வைத் தடுக்கும் தங்களது இலக்கை அடைந்து விட்டன. சீனா தனது நான்கு இலக்குகளில் ஒன்றை அடைந்து விட்டது. 50 நாடுகள் 2050ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகித தூய்மையை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளன.

 

 

பாரிஸில் கூடிய க்ளைமேட் அக்கார்ட் எனப்படும் சீதோஷ்ண நிலை ஒப்பந்தம்,  நியூயார்க்கில் ஏற்பட்ட காடுகள் பற்றிய பிரகடனம் ஆகியவை நல்லதொரு நம்பிக்கையை உலக மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.

நமது நாட்டில் புதிய விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர். க்ளீன் இந்தியா மூவ்மெண்ட் எனப்படும் ஸ்வச்ச பாரத் அபிக்யான் (Swachh Bharat Abhiyan) என்ற திட்டத்தை பாரத அரசு தொடங்கியுள்ளது. இதன்படி சாலைகள், தெருக்கள்,சந்துகளில் சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு கிராம மக்களுக்கு மேம்பட்ட ஆரோக்கிய நல்வாழ்வு அளிக்கப்படும். 2014ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கப்பட்ட இந்தத் திட்டம் நாடெங்கும் நற்பயன்களை அளித்து வருகிறது

 

சூரிய ஆற்றலின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

 

பெட்ரோல், டீஸலைத் தவிர்த்து சூரிய சக்தியாலும், மின் சக்தியாலும் இயங்கும் கார்கள், பஸ்கள், லாரிகள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

 

மண்வளத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அற்புதமான இந்த வளத்தினால் தான் விவசாயம் செழிக்கிறது. உணவு தானியங்கள் விளைகின்றன.உலகம் இயங்குகிறது. இந்த வளமே நீரை வடிகட்டிக் குடிநீராக்கித் தருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆக மண்வளத்தைச் சீராக்கி மேம்படுத்தினால் உற்பத்தி பெருகும், சுற்றுப்புறச் சூழல் பெரிதும் மேம்படும் என்பதால் விவசாயப் பெருமக்களும் விஞ்ஞானிகளும் இணைந்து மண்வளத்தை மேம்படுத்தும் அரிய பணிகளில் இறங்கியுள்ளனர்.

 

நமது அரிய பூமியில் இந்த சமீப விழிப்புணர்வு எதிர்கால சந்ததியினருக்கும் உதவக் கூடிய ஒரு பெரிய வரபிரசாதமாகும்.

ஆக பல்வேறு துறைகளிலும் இளைய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க மாறுதலில் அவர்களுடன் அனைவரும் இணைந்து உலகை மாசற்ற சுற்றுப்புறச் சூழல் கொண்ட ஒன்றாக ஆக்குவோமாக!

***