
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8989
Date uploaded in London – – –2 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
நடந்தவை தான் நம்புங்கள்!
ச.நாகராஜன்
நான் நெட்டில் படித்தவற்றில் சில இவை! நடந்தவை தான் என்று நம்புங்கள்!
1
கண்பார்வையற்றவர் ஒருவர் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்ல நினைத்து நின்று கொண்டிருந்தார். அவரது முதுகை ஒருவர் தட்டினார்.
‘எனக்குக் கண்பார்வை இல்லை. தயவுசெய்து எதிர்ப்பக்கம் என்னைக் கொண்டு விட முடியுமா?’ – முதுகைத் தட்டியவர் கேட்டார்.
முதல் ஆள் திகைத்தார். மெதுவாக அவர் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கலானார்.
இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்தனர்.
இது ஒரு உண்மையில் நடந்த ஒரு சம்பவம்.
முதலில் நின்று கொண்டிருந்தவர் மிகவும் புகழ் பெற்ற ஜாஸ் பியானோ இசைப்பவரான ஜார்ஜ் ஷியரிங் (Geroge Shearing). இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்னர் அவர் கூறினார் இப்படி: “ நான் என்ன செய்வது? அவரை சாலையின் எதிர்ப்பக்கம் கொண்டு சேர்த்தேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய த்ரில்லான சம்பவம் இது தான்.”
சில சமயம் ரிஸ்க் எடுக்க முடியாமல் நாமே தவிக்கும் போது நாம் வேண்டுமென்றே அதில் விழச் செய்யப்படுகிறோம். என்ன செய்வது? அபாயத்தைச் சில சமயம் எதிர்கொண்டு ஜெயிக்கத் தான் வேண்டும்!


***
2
டாக்டரிடம் ஒருவர் வந்தார்.
“டாக்டர், நீங்கள் எந்த வியாதியையும் குணப்படுத்தி விடுவீர்களாமே! ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருக்கிறது?”
“அப்படித்தான் ஊர் சொல்கிறது. அது சரி, உங்களுக்கு என்ன வியாதி? அதைச் சொல்லுங்கள் பார்ப்போம்!
“டாக்டர், என்னால் திருடாமல் இருக்கவே முடியாது. எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதை எங்கிருந்தாவது திருடிக் கொண்டு வந்து விடுவேன். எத்தனையோ பேரிடம் சிகிச்சைக்குப் போய் விட்டேன். ஒன்றும் சரியாகவில்லை. இன்னும் திருடிக் கொண்டே தான் இருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள்”
டாக்டர் அவரைச் சோதித்து விட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். இரண்டு வாரம் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
வந்த ‘திருடர்’ கிளம்ப ஆயத்தமானார்.
அப்போது டாக்டர் கூறினார்: “நண்பரே, இரண்டு வாரத்தில் உங்கள் நோய் குணமாகவில்லையெனில் எனக்கு ஒரு 60 இஞ்ச் டி.வி. ஹோம் தியேட்டர் எபக்டுடன் கொண்டு வந்து தர முடியுமா?”
****
3

ஒரு மலைச்சாரல் பகுதி. ஆங்காங்கே சிறு சிறு கிராமங்கள். சுற்றிலும் அடர்ந்த காடு. மலை உச்சியில் ஒரு சர்ச் இருந்தது.
சர்ச்சில் பாதிரியாரைத் தவிர வேறு யாருமில்லை. ஒருவரும் வரவில்லை என்பதால் பாதிரியார் சும்மா இருந்தார். அப்போது ஒருவர் உள்ளே வந்தார்.
அவரைப் பார்த்த பாதிரியார், “யாரும் ப்ரேயருக்கு வரவில்லை, நாம் வேண்டுமானால் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் சூடான பானம் அருந்துவோமா?” என்றார்.
வந்தவர் கூறினார்: “ஃபாதர், நான் ஒரு விவசாயி. ஆடுகளுக்குத் தீனி கொண்டு போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட திக்கில் மேயப் போய், ஒரே ஒரு ஆடு தான் என் முன் இருந்தது என்றால், அதைப் பட்டினி போட்டு விட்டுப் போக மாட்டேன்.”
பாதிரியாருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது.
“அன்பரே! இதோ சர்வீஸைத் தொடங்கி விடுகிறேன். பாருங்கள்’ என்றவர் ஆவேசமாகத் தொடங்கினார். தனது ஒரு நபர் ஆடியன்ஸுக்கு அவர் பிரார்த்தனை கீதங்கள், தேவ வசனங்கள், மேற்கோள்கள், என்னவெல்லாம் நல்லது நடக்கப் போகிறது என்பதை விளக்கலானார். இரண்டு மணி நேரம் ஓடியது. சொல்ல வேண்டியதற்கும் மீறிச் சொன்ன பாதிரியார் களைத்துப் போய் தன் சர்வீஸை முடித்தார்.
இப்போது அந்த விவசாயியைப் பார்த்து அவர் கேட்டார். :”அன்பரே! திருப்தி தானா? நீங்கள் ஒருவர் தான் வந்திருந்தீர்கள் என்றாலும் கூட எதையும் விட்டு வைக்கவில்லை!” பெருமிதத்தில் அவர் புன்னகையும் பூத்தார்.
இருவரும் கிளம்ப எத்தனித்தனர். அப்போது விவசாயி கூறினார்: “ஃபாதர்! நான் ஒரு எளிய விவசாயி தான்! நான் ஆடுகளுக்குத் தீனி கொடுக்கப் போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட இடத்தில் திரிய ஒரே ஒரு ஆடு மட்டும் இருக்கும் போது நிச்சயமாக அதைப் பட்டினியால் வாட விட மாட்டேன். ஆனால் அதற்காக என்னிடம் அனைத்து ஆடுகளுக்கும் இருக்கும் தீனியை அந்த ஒரே ஆட்டிற்குப் போட்டு அதை உண்ணுமாறு வற்புறுத்த மாட்டேன்!”
ஒரு சேவையைச் செய்யும் போது அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?!

****
tags — ஜார்ஜ் ஷியரிங், நடந்தவை, நம்புங்கள், விவசாயி, ஆடு
You must be logged in to post a comment.