Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் ; இது எத்தனை கண்களுக்கு வருத்தம்’
எங்க சார், இந்தப்பக்கம் ?
சும்மா, கோர்ட்டுக்கு வந்துட்டு போறேன்.
எதற்கோ?
மூன்று மாதத்துக்கு முன், என் பெண் , எங்க விருப்பத்துக்கு மாறாக கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இப்ப வேண்டாம்னு சொல்றாள். அவள் ஆபிசுக்கு போய்விட்டாள். நான்தான் வக்கீல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும்னு அலையறேன்.
நீங்கள் சென்னையில் இருந்தால் தயவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு போய்ப் பாருங்கள். எல்லாம் இளசுகள். சோகத்துடன் டீ சாப்பிட்டுக்கொண்டே , தாயார், தகப்பனார், வக்கீல்களுடன், கும்பல் கும்பலாக வரும் பரிதாபக் காட்சியைக் காணலாம்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். முகத்தை முகம் பார்த்து செய்து கொள்வதல்ல நுற்றுக்குப் பத்து பேருக்குத் தான் லவ் மேரேஜ் சக்ஸஸ் (Love Marriage success) என்று விஞ்ஞான முறையிலான கணக்கெடுப்பு காட்டுகிறது. இதை ஆங்கிலத்தில் இம்பேசுவேஷன் (INFATUATION) என்று சொல்லுவார்கள். “முத்துக்களோ பற்கள் , தித்தித்ததே சொற்கள், சந்தித்த வேளை , சிந்திக்கவே இல்லை , தந்து விட்டேன் என்னை” என்று பாடி விட்டு மூன்றே மாதங்களில் டைவர்ஸ். (Divorce)!
அந்தப் பத்துப் பேரில் ஐந்து ஜோடிகளுக்கு குழந்தை இல்லை.அது சரி , பொருத்தம் பார்த்து நடந்த எல்லாக் கல்யாணங்களும் சரியா? அதுவும் இல்லை. பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து, டைவர்ஸ் (Divorce) வரைக்கும்போன பிறகு ஜோதிடர் மேலே ‘கேஸ்’ போட்டதாக சரித்திரமே இல்லை.
‘என் கண்ணை மறைத்து விட்டது.மன்னிக்கவும்’
‘நீங்கள் கொண்டுவந்த ஜாதகம் சரியானதா ?’ அல்லது ‘மாற்றிக் கொடுத்துவிட்டார்களா?’ அல்லது ‘மாற்றிக் கொண்டு வந்துவிட்டீர்களா? ‘ ‘ஒரு வேளை சரியான நேரத்தைக் குறித்து, சரியானபடி ஜாதகம் கணித்திருக்க மாட்டார்களோ?’ —
என்றெல்லாம் பதில் சொல்லி ஜோதிடர்கள் தப்பித்து விடுவார்கள்.
போகட்டும்; மீண்டும் ஜோதிட விஷயங்களுக்கு வருவோம்.
பஞ்சாங்கத்தில் ‘திருமணப் பொருத்தங்கள் பத்து’ என்று போட்டிருக்கும். அது எப்பாடியெல்லாம் பொருந்தும் எனவும் போட்டிருப்பார்கள்.இந்த பத்துப் பொருத்தங்களும் ஆண் நட்சத்திரத்துக்கும் பெண் நட்சத்திரத்துக்கும் இடையேயான பொருத்தங்கள்தான். ஆண் ‘ஜாதகத்துக்கும்’ பெண் ‘ஜாதகத்துக்கும்’ இடையேயான பொருத்தங்கள் இல்லை
இது என்ன புதிய குண்டு? ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட பெரிய குண்டாக இருக்கிறதே ! என்கிறீர்களா ?
உண்மையில் சொல்லப் போனால் மொத்த திருமணப் பொருத்தங்கள் 24 .
அவை என்னென்ன ?
அந்தக் கால ராஜ்யங்களில் அரசாங்க ஜோதிடர்கள் என்று பத்துப் பேர் இருப்பார்கள். ஒருவர் கணக்குப் போடுவதில் தவறு செய்திருந்தாலும் மற்றவர் கண்டு பிடித்து விடுவார். மற்றவர் செய்த ‘மிஸ்டேக்’கை சரி செய்துவிடுவார். ஜோதிடர் குழுவின் தலைவர்தான் முடிவை அறிவிப்பார். இந்த நாட்டு இளவரசருக்கும் அந்த நாட்டு இளவரசிக்கும் பொருத்தம் உள்ளது என ‘டிக்ளேர்’ செய்வார். அதில் தவறு இருந்தால் தலைமை ஜோதிடரின் ‘தலை’ இருக்காது ! குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், பண்ணையார்களும் கூட இதே முறையில்தான் ஜோதிடம் பார்த்து இருக்கிறார்கள் .
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – என்பது திரைப்படப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது இல்லை; அது மனுஸ்மிருதி சொல்லும் வாசகம் என்பது இன்று தெரிந்தது.
108 ஆண்டுகளுக்கு முன் பேட்fஈல்டு ( REV J E PADFIELD ) என்னும் பாதிரியார், வீட்டில் இந்துவின் நெறிமுறைகள் ( Hindu at Home) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதில் திருமணம் பற்றிப் படிக்கையில் பல சுவையான விஷயங்கள் கிடைத்தன. ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் விளக்கமாக கொடுத்துவிட்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்.
காதல் திருமணம் ‘ஓகே’ (OK)!
மனு எட்டு வகையான திருமணங்கள் பற்றிச் சொல்லுகிறார். இதை தொல்காப்பியரும் அப்படியே தமிழர் திருமண வகை என்று சொன்னதை முன்னர் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன்.
ஒரு பெண் தானாக கணவனைத் தேடுவதோ, ஒரு ஆண் தானாக பெண்ணை நெருங்கி மணம் முடிப்பதோ தவறில்லை என்று சொல்கிறார் மனு:-
மூன்றாவது அத்தியாயத்தில் திருமணம் பற்றி நிறைய எழுதியுள்ளார். பத்துவகையான குடும்பங்களில் பெண் எடுக்கக்கூடாது என்று குஷ்டம், க்ஷயரோகம், கால்,கை வலிப்புள்ள குடும்பங்கள் பட்டியலைத் தருகிறார். அத்தோடு உடலில் அதிக முடியுள்ள குடும்பங்களிலும் திருமணம் செய்யக்கூடாது, வேத ஆசார அனுஷ்டானங்கள் இல்லாத குடும்பங்களையும் தவிர்க்கவேண்டும் என்பார்.
மனு நீதி பற்றிப் பேசியவுடன் சில திராவிடங்களும் மார்கசீயங்களும் பொங்கி எழும். அவர்கள் எல்லோரும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்பது மனு நீதி நூலைப் படிப்பவர்களுக்குப் புரியும். ஏனெனில் மனு சொல்லும் விதிகளை பிராமணர்களே பின்பற்றுவது இல்லை; முன்னர் பின்பற்றியதும் இல்லை என்பது இதை முழுக்கப் படித்தால் விளங்கும். ஒரு வேளை நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பினபற்றிய ஒரே ஆள் மனுநீதிச் சோழனாகத்தான் இருக்கும்.!!
வாயாடிப் பெண்ணையும், சிவப்புத் தலை முடி உடைய பெண்ணையும். திருமணம் செய்யக்கூடாது. அதிக முடியோ, முடியே இல்லாமலிருந்தாலோ கல்யாணம் செய்யக்கூடாது. வியாதியுடையவர், உடலுறுப்புகள் கூடுதலாக இருப்பவரையும் மணம் முடிக்காதே என்பார் (3-7, 8)
அன்ன நடை அல்லது யானை போல அசைந்தாடும் நடை யுடைய பெண்ணை, அழகிய முடி, பல் வரிசையுடைய பெண்ணை திருமணம் செய்யலாம் என்பார்.(3-10)
சகோதர் இல்லாத பெண் அல்லது ஊர் பேர், குலம் கோத்திரம் தெரியாத தந்தையுடைய பெண்ணையும் தவிர்க்கவும் என்கிறார்(3-11)
இரண்டாவது மனைவி
அவரவர் முதல் மனைவியை சொந்த ஜாதியில் கட்டலாம்; ஆசை காரணமாக மேலும் மனைவி வேண்டுமானால், ஜாதி வரிசைப்படி திருமணம் செய்யலாம் (1.பிராமணர், 2.அரசர் குலம், 3.வணிகர் குலம் என்பது வரிசை) (3-12)
ஒரு பெண் பருவம் அடைந்தவுடன் மூன்றாண்டுகளுக்குக் காத்திருக்கலாம். அதற்குப் பின் அவள் தனக்குரிய தகுந்த ஆடவனைத் தேடலாம். தந்தையே முன்வந்து மணம் முடிக்காதபோது அவளே ஒருவரைத் திருமணம் செய்வதில் தவறில்லை. அவளை திருமணம் செய்ய முன்வரும் ஆடவனும் தவறிழைக்காதவனே (9-91)
ஆனால் அப்படித் தன் காதலனுடன் செல்லுகையில் தந்தை, தாய், சகோதரர் கொடுத்த நகையுடன் ஓடிவிடக் கூடாது. அப்படிப் போனால் அந்தப் பெண் திருடி ஆவாள் (9-92)
முப்பது வயது ஆண் 12 வயதுப் பெண்ணையும், 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.(9-94)
(எனது கருத்து:- மனு தர்மத்தில் வேத காலத்தில் இருந்த பெண் சுதந்திரம் பல பாடல்களில் வருகிறது ஆனால் இங்கே எட்டு வயதுப் பெண் திருமணம் பற்றிச் சொல்லுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆகையால் ஒரிஜினல் மனு ஸ்மிருதியுடன் அவ்வப்போது சில பிற்கால விதிகளும் இடைச் சொருகலாக வந்தன என்று கொள்ளுவதே பொருத்தம்)
கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது; ஆணும் பெண்ணூம் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும். இருவரும் சாகும் வரை பிரியக்கூடாது (9-101, 102)
கடவுள் கொடுக்கும் பரிசு
பெண் என்பவள் கடவுள் கொடுக்கும் பரிசு; ஏதோ தானாக முன்வந்து எடுத்துக் கொண்டதாக எண்ணக்கூடாது. மனைவியை எப்போதும் ஆதரித்து கடவுளைத் திருப்தி செய்ய வேண்டும் (9-94/96)
எப்போது விவாக ரத்து செய்யலாம்?
கணவன் ஏதேனும் கடமையை நிறைவேற்றப் போயிருந்தால் மனைவி 8 வருடம் வரை அவனுக்காக காத்திருக்கலாம்; உயர் படிப்புக்குப் போயிருந்தால் 6 வருடங்களும், சுற்றுலா போயிருந்தால் 3 வருடங்களும் அவனுக்காக காத்திருக்கலாம்.
(அதற்குப் பின்னும் வராவிட்டால் அவள் வேறு ஒருவரை மணம் முடிக்கலாம் என்பது கருத்து)
வெறுப்பை கொட்டும் மனைவியை ஓராண்டு பொறுத்துக் கொள்ளலாம்; பின்னர் அவளை விட்டு நீங்கலாம். குடித்துவிட்டுக் கூத்தாடும் மனைவி, கணவனை அடிக்கும் மனைவி, ஊதாரியாகச் செலவு செய்யும் மனைவியை உடனே விட்டுவிடலாம். (9- 76/80)
மனைவி மலடியாக இருந்தால் 8 வருடங்களுக்குப் பின்னரும், பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்துவிட்டால் 10 வருடங்களுக்குப் பின்னரும், புதல்விகளை மட்டுமே பெற்றெடுத்தால் 11 வருடங்களுக்குப் பின்னரும் பிரியலாம். ஆனால் திட்டித் தீர்க்கும் மனைவியை உடனே விட்டுவிடலாம் (9-81)
மனு ஸ்மிருதியின் மொழிபெயர்ப்பு தமிழிலும் கிடைக்கும். இங்கே பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பதிப்புகள் உள்ளன. திருலோக சீதாராம் எளிய நடையில் மொழி பெயர்த்துள்ளார். பெண்களை மனுஸ்மிருதி போற்றுவது போல உலகில் பழங்கால இலக்கியம் எதுவும் போற்றியதில்லை. நாமே படித்துப் பார்த்தால் அதைக் கண்டு வியப் போம்.
பிராமணர்களுக்கு எவ்வளவு சலுகை தருகிறதோ அந்த அ ளவுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கிறது. அதாவது எளிதில் பின்பற்றமுடியாத கடுமையான விதிகள். இதை யார் எந்தக் காலத்தில் பின்பற்றினார்கள் என்று நான் எண்ணுவேன். ஆகையால் மனுஸ்மிருதியில் ஏதேனும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களை மட்டும் மேற்கோள் காட்டும் வெள்ளைத் தோல் அறிஞர்கள், திராவிடங்கள், மார்கசீயங்கள் சொற்களை நம்பாமல் மெய்ப்பொருள் காண்பதறிவு.