
Compiled by london swaminathan
Date: 6 March, 2016
Post No. 2604
Time uploaded in London :– 11-19 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;
“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”
–சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்
பொருள்:- வானளாவிய தோளை உடையவனே! மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், உமாதேவியை தன் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டான். திருமாலாகிய இன்னொருவன், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைத் தன் மார்பில்
வைத்துக்கொண்டான். பிரமன், சரசுவதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் தோன்றுகின்ற மின்னலை வென்ற நுண்ணிய இடையை உடைய சீதையை நீ அடைந்தால், அவளை எந்த இடத்தில் வைத்துகொண்டு வாழ்வாய்?

இது ராவணனிடம் சூர்ப்பநகை கேட்ட கேள்வி. அதாவது, அவன் சீதையை அபகரிக்க வேண்டும் என்பதும், அவளைக் காவலில் வைக்குமிடத்தை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டுமென்பதும் சூர்ப்பநகையின் சதித்திட்டம். அவளுக்குத் தெரியும் ரவணனின் மனிவியான மண்டோதரி, மஹா பதிவிரதை என்பது. ஆகையால் ராவணனை உளவியல் ரீதியாக (சைகலாஜிகல்) தயார்படுத்த இப்படிப் பல வசனங்களைக் கூறுகிறாள். இந்தப் பாடல் பாரதி, கண்ணதாசன் பாடல்களிலும் பிரதிபலிக்கிறது.
பாரதி பாடியது
பாரதியார் பாடல்களை நன்கு ஊன்றிப் படிப்போர்க்கு, ஆழ்வார் பாடல், தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியன, அவர் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவர். கம்பனுடைய மேற்கூறிய பாடல் கருத்தும் அப்படியே இடம் பெறுவதைக் காணலாம்.
பாரதியார் தன் சுயசரிதையில், காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் என்று துவங்கும் பகுதியில் கம்பன் கூறியதை அப்படியே பயன்படுத்துகிறார்.

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
கண்ணதாசன் கவிதைகள்
கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் பாடல்களையும் தமிழ்ப் பாடல்களையும் அவரது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி… என்ற பாடல் பகவத் கீதை, பஜ கோவிந்தம் ஆகிய துதிகளிலிருப்பதையெல்லாம் முன்னரே கட்டுரைகளில் சுட்டிக்காட்டி விட்டோம்.
ஆனால் கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூவரும் ஒரே கருத்தை அதே வரிசையில் சொல்லுவதை இப்பொழுதுதான் காண்கிறேன்.
பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)
படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் GREATMEN THINK ALIKE— அதாவது, “உயர்ந்த மனிதர்க்கு சிந்தனை ஒன்றே” – என்று
அது போல கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூன்று உயர்ந்த கவிஞர்களும் ஒன்றே நினைப்பர்! நன்றே நினைப்பர்.
–சுபம்-
You must be logged in to post a comment.