ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? (Post No.4652)

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 8-21 AM

 

Post No. 4652

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு பேய்க் கதை; பழமொழிக் கதை

சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

‘திராவிட பூர்வகாலக் கதைகள்’ என்ற பெயரில் நடேச சாஸ்திரி என்பார் பழங் கதைகளைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அவை பழந்தமிழில் இருப்பதால் அவற்றைப் புதுக்கியும் சுருக்கியும் தருகிறேன்.

 

 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள  ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.

தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.

 

ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்.

 

தங்கை சொன்னாள்,

“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

அடுத்ததாக, அவள் பகன்றாள்,

“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

 

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,

“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,

“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்

 

அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.

 

 

தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”

 

அக்காள் சொன்னாள்,

“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்

அப்போது திடீரென்று ஒரு சப்தம்

 

சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

வா நாம் போவோம்– என்று.

 

உடனே அக்காள் கேட்டாள்,

‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’

 

அப்போது ஒரு குரல் ஒலித்தது,

“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.

 

இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்!

 

அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.

 

இதுதான் சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

பழமொழியின் பின்னாலுள்ள கதை.

வாழ்க தமிழ்! 20, 000 பழமொழிகளுக்கும் கதையோ காரணமோ, அனுபவ அறிவோ உண்டு. எனது கட்டுரைகளைப் படித்து அறிக.

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சுபம்