WRITTEN by London Swaminathan
Date: 11 September 2018
Time uploaded in London – 8-15 am (British Summer Time)
Post No. 5418
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.
இருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.
முதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)
மானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.
இதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-
‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.
‘மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்
XXX
சூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,
சூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).
இந்த ஸ்லோகத்திலும் பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.
XXXX
கண்கள் இரண்டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.
நிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)
XXXX
பொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)
பாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,
‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்
-என்று ஜயபேரிகை கொட்டுகிறார்.
இங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.
XXXX
குருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,
குருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)
பாரதியும் சுயசரிதையில்,
‘ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன்
நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்
மோனகுரு திருவருளால் பிறப்புமாறி
முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’
என்று ஆனந்தக் கூத்தாடுகிறான்.
சங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.
‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.
XXXX
ஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,
பக்தியினாலே, தெய்வ பக்தியினாலே
பக்தியினாலே – இந்தப்
பாரிலெய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்தந்தெளியும்- இங்கு
செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும்-நல்ல
வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவமுண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்
ஆசையைக்கொல்வோம்- புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……’
என்று நீண்டதொருபாடலைப் பாடுகிறார்.
XXXX
எண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.
இதே உவமையை ஆதி சங்கரர்,
சூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.
XXX
பாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.
வாழ்க பாரதி- வளர்க அத்வைதம்
–SUBHAM-
You must be logged in to post a comment.