ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்!

படத்தில்: காந்திஜி உண்ணாவிரதம்

ஆநிரை கவர்தல்

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போரைத் துவக்குவது எப்படி? ரிக்வேதத்திலும் மஹாபாரதத்திலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஒரே முறையைத் தான் பாடி இருக்கிறார்கள். எல்லை கடந்து போய் மாடு திருடுங்கள், மோதல் வரும்— இதுதான் ரிக் வேத காலத்திலிருந்து சேர சோழ பாண்டிய மன்னர் வரை கையாண்ட உத்தி. இமயம் முதல் குமரி வரை ஒரே உத்தி. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்ட உத்தி. ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும், பாகவதத்திலும், மஹா பாரதத்திலும் ‘’ஆநிரை கவர்தல்’’ உள்ளது.

ஆரியர்கள் வேறு, திராவிடர்கள் வேறு என்றும் இருவருக்கும் வெவ்வேறு கலாசாரம் இருந்தது என்றும் பொய்மை வாதம் பேசியோருக்கு இந்த உண்மை ‘’சம்மட்டி அடி’’ கொடுக்கும். இது ஒரு வாதம் மட்டும் அல்ல. இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றே என்று நிரூபிக்க ஆணித்தரமான வாதங்களைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

தோற்றுப் போன மன்னர்களின் நிலத்தை, கழுதைகளை ஏரில் பூட்டி உழும் வழக்கத்தை கலிங்க மன்னன் காரவேலனும் புறநானூற்று மன்னனும் பின்பற்றியதை ‘’கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’’ என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். வடக்குத் திசை புனிதமானது; இமயமும் கங்கையும் புனிதமானது என்பது புறநானூற்றிலும் காளிதாசன் கவிதையிலும் இருப்பதையும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டேன்.

மஹாபாரதத்தில் விராட பர்வத்தில் ஆநிரை கவர்தல் வருகிறது. மத்ஸ்ய தேச மன்னன் விராடனின் அரண்மனையில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் (கரந்துறை வாழ்க்கை) செய்கின்றனர். த்ரிகர்த்தா படைகள் திடீரென்று தாக்கி ஆநிரைகளைக் கவர்ந்து விராட மன்னனையும் கைது செய்து விடுகின்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்தவுடன் பாண்டவர் ஐவரும் அவர்களுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டி படைகளுடன் சென்று விராடனை விடுதலை செய்கின்றனர். அவன் தனது மகள் உத்தராவை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்குக் கொடுக்கிறான்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூற்றின் பாடல் 257 முதல் 269 ஆம் பாடல் வரை இருக்கிறது. இதை வெட்சித் துறைப் பாடல்கள் என்பர். இவை ‘ஆநிரை கவர்தல்’ பற்றிய பாடல்கள். உலோச்சனார் (258), பெரும்பூதனார் (259), வடமோதங்கிழார் (260) ஆவூர் மூலங்கிழார் (261), மதுரைப் பேராலவாயார் (262) உறையூர் இளம் பொன் வாணிகனார் ( 264), கருந்தும்பியார் (265), பெருங்குன்றூர் கிழார் (266) பாடிய படல்கள் இவை. தொல்காப்பியத்திலும் பதிற்றுப்பத்திலும் ஆநிரை கவர்தல் உள்ளது.

ரிக்வேதத்தில் பாணிக்கள் இப்படித் திருடுவதைக் காண்கிறோம். சில கிரேக்க, ஐரிஷ் குறிப்புகளும் உண்டு. ஆயினும் இந்தியா போல தொடர்ந்து பல குறிப்புகள் இல்லை. இது இந்தியர்களின் தனி வழக்கம் என்பதற்கு தமிழ் இலக்கியக் குறிப்புகள் சான்று பகரும். சிலர் கூறுவது (பிதற்றுவது) போல இந்தோ ஆரிய வழக்கம் அல்ல.

நெல்லையில் கோதுமை அல்வா கிடைக்கும், டில்லியில் பூசணிக்காய் அல்வா கிடைக்கும், பம்பாயில் அவல் அல்வா கிடைக்கும், கல்கத்தாவில் தூத் (பால்) அல்வா கிடைக்கும். இதையே வெளி நாட்டு அறிஞர்கள் எழுதும் போது ஒன்றை திராவிட அல்வா என்றும், இன்னொன்றை ஆரிய அல்வா என்றும், கல்கத்தா அல்வாவை முண்டா இன மக்கள் அல்வா என்றும் அவல் அல்வாவை இனம் புரியாத ஒரு இனத்தின் அல்வா என்றும் எழுதி பி.எச்டி. வாங்குவார்கள். உலகத் தமிழ் மஹா நாட்டில் அவர்களுக்கு பொன்னாடை கிடைக்கும், இலவச பிளேன் டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை எல்லாம் கிடைக்கும், புதுப்புது பட்டங்கள் கிடைக்கும். அல்வா பற்றிப் பேசி தமிழனுக்கு அல்வா கொடுத்து விடுவார்கள்!!!

உண்மை என்ன? உலகில் வேறுபாடு இல்லாத இடங்களும் இல்லை, இனங்களும் இல்லை. ஒரே தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்த பிள்ளைகளிடம் எவ்வளவு வேறுபாடு? இதில் ஆரியன் யார், திராவிடன் யார்?

இவ்வளவு எழுதினார்களே, வெளிநாட்டு அறிஞர்கள், உலகில் வேறு எங்காவது இந்த இன விஷத்தை ஊற்றினார்களா? இந்த விஷம விதைகளை விதைத்தார்களா? அவர்களுக்குத் தெரியும் தமிழன் ஒருவன் தான், 1500 வருடங்களுக்கு இடைவிடாமல் சண்டை போட்ட ஒரே இனம் என்று. தமிழ் இனம்.— சேர சோழ பாண்டியர்கள் போல— ஒருவனை ஒருவன் அழித்த இனம் இது என்பதால் பிரிவினை வித்தை விதைக்க அருமையான விளை நிலம் என்று கண்டுகொண்டார்கள்.

ஆரியப் பூனை எது? திராவிடப் பூனை எது?

‘’ஆயிரம் வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சி’’ என்று பாடிய பாரதி,  ஒரு கருத்தைப் பூனைக் குட்டி உதாரணத்தால் சொல்கிறார்:

வெள்ளை நிறத்தொரு பூனை— எங்கள் வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை— அவை பேருக் கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி— கருஞ் சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி— வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

 

எந்த நிறமிருந்தாலும்— அவை யாவும் ஒரே தரமன்றோ?

இந்த நிறம் சிறிதென்றும்— இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை;

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்—இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

—- மஹா கவி சுப்ரமண்ய பாரதி

நான் போடும் விடுகதை என்ன வென்றால் இதில் எது ஆரியப் பூனை? எது திராவிடப் பூனை? எது மங்கோலியப் பூனை? எது முண்டா இனப் பூனை ?

வெள்ளைக்காரன் கையில் இப்பாடல் கிடைத்தால் ஒரு ஆரிய திராவிடப் பிரச்சனையைக் புகுத்தி பி.எச்டி. வாங்கி விடுவான். அதிலும் அதில் கருப்பு நிற திராவிடப் பூனைதான் பழையது…. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் வாளொடு முன் தோன்றியது —மிக புத்திசாலியானது… இது போய் எலியைப் பிடிக்காது…. எலியே இதன் வாயில் வந்து விழுந்துவிடும் என்று எல்லாம் எழுதி… பேசி….. உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை, பட்டம், இலவச பிளேன் டிக்கெட், ஹோட்டல் ரூம் ஆகிய எல்லாம் வாங்கிவிடுவான். உண்மை என்னவென்றால்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை என்று பாரதி சொன்னதே.

ஆதி காலத்தில் இந்தியா முழுதும் ஒரே கலாசாரம், ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே பண்பாடு இருந்தது. வெளிநாட்டுப் படை எடுப்புகளால், வியாபாரத்தால், இனக் கலப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக இது மாறியது. ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உள்ளது; Change is inevitable = ‘’மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது’’. இன்று திருவள்ளுவர் உயிருடன் வந்து ஒரு திருக்குறள் புத்தகம் விலைக்கு வாங்கினால் அவரால் அதைப் படிக்கமுடியாது. ஏனெனில் அவர் கால எழுத்து வேறு, இப்போது நான் எழுதும் தமிழ் எழுத்து வேறு. எல்லாம் மாறிவிட்டன.

சாகும் வரை உண்ணாவிரதம்

மஹாத்மா காந்தியால் மிகவும் பிரபலமான ஒரு வழக்கம் உண்ணாவிரதம். அவரே பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி பின்னர் கைவிட்டும் இருக்கிறார். இது இன்று நேற்று துவங்கியதல்ல. பல சமண முனிவர்கள் இப்படி உயிர் துறந்தனர். சமணர்கள் இதை சல்லேகனம் என்று அழைப்பர். ராமாயணம் ,மஹாபாரதத்தில் இது இருக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இது உண்டு. பாரத நாடு முழுதும் வட திசையை புனித திசை என்று கருதியதை ஏற்கனவே ‘’வடக்கே தலை வைக்காதே’’ என்ற எனது கட்டுரையில் எழுதி இருக்கிறேன். வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருந்து உயிர் துறத்தல் நாடு முழுதும் உண்டு.

சோழன் கரிகால் பெருவளத்தானோடு, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருதியபோது புறப்புண் ஏற்பட்டு நாணி வடக்கிருந்தான். அவனை கழாத் தலையார் பாடிய பாடலில் (புறம் 65)

‘’மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்’’ என்றும்

மிகப் புகழ் உலகம் எய்தி, என்றும்

‘’புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே’’ என்று வெண்ணிக்குயத்தியாரும் (புறம் 66) பாடுகின்றனர்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார். பொத்தியார் என்ற புலவரும் உயிர்நீத்தார். (புறம் 214 முதல் 223 வரை) பாரியின் மரணத்துக்குப் பின், புலவர் கபிலரும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

ராமாயணத்தில்………..

வடக்கிருத்தலை, பிராயோபவேச விரதம் என்று வடமொழியில் சொல்லுவர். ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் (56-ஆவது சர்க்கம்) அங்கதன் உண்ணாவிரதம் இருந்ததைக் காண்கிறோம். சீதையை எங்கும் தேடியும் காணாத அங்கதன் இப்படிச் செய்தான். ஆனால் வட திசை நோக்காதபடி, கிழக்கு திசை நோக்கி தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, தர்ப்பையைப் பரப்பி உண்ணாவிரதம் இருந்தான். இருந்தபோதிலும் தர்ப்பையை எல்லோரும் பயன்படுத்துவதால் இது நாடு தழுவிய ஒரு வழக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.

குமாரில பட்டர் என்ற மாமேதை புத்தமத ரகசியங்களை அறிவதற்காக பொய் சொல்லிவிட்டார். வேதம் படித்துவிட்டு பொய் சொன்னதற்குப் பிராயச்சித்தமாக பஞ்சாக்னியில் உயிர் துறந்தார். உடலின் நாலு பக்கமும் உமியைக் குவித்து, நாற்புறமும் தீயை ஏற்றி மேலே சூரியன் தஹிக்க, ஐந்து அக்னியில் உடலைச் சிறிது சிறிதாகக் கருக்கி உயிர்த் தியாகம் செய்தார். இதற்கு மன வலிமையும், உடல் வலிமையும் எவ்வளவு தேவை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.