DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
WRIITEN BY london swaminathan
Date : 12 September 2015
Post No. 2151
Time uploaded in London: – காலை 7-02
(Thanks for the pictures)
‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி?
மார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.
“மிஸ்டர் மார்க் ட்வைன்! என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்!” என்றான்.
“அன்பனே! நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப் பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.
இப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.
அவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே? என்றார். ஓ, அவரா? இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.
‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை!
வேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி?
கொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி!
பல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:
இனிய நண்பருக்கு
வணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.
இப்படிக்கு
(ஆசிரியர் பெயர்)
புத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.
இப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேராசிரியர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்!!
–சுபம்–
You must be logged in to post a comment.