Written by London swaminathan
Date: 26 September 2016
Time uploaded in London:10-08 AM
Post No.3191
Pictures are taken from various sources; thanks.
நேற்றைய கட்டுரையில் மாக்ஸ்முல்லரின் ஊகத்தின்படி வேதத்தின் காலத்தைப் பார்த்தோம்.
வேதத்தின் காலம் பற்றி உளறுவோரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும்:-
ஐயா, நீங்கள் சொல்லுவது போல வேதத்தின் காலலம் கி.மு.1200 என்று கொண்டால் ராமாயணம் எப்போது நடந்தது? மஹாபாரதம் எப்போது நடந்தது. புராணத்திலுள்ள அரசர்கள் ஆண்டது எப்போது? கோ கருநந்த அடக்கனின் கல்வெட்டு ஏழாவது நூற்றாண்டிலேயே கலியுகத்தின் காலத்தைக் காட்டுகிறதே! அதுவும் நாள் கணக்கில் சொல்லுகிறதே! 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் புளுகத் துவங்கி விட்டானா?
புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ராமாயணம் நடந்தது, மஹாபரதம் நடந்தது, உபநிஷதம் தோன்றியது, பிரம்மாண்டமான வேத இலக்கியம் –கிரேக்க நாட்டு ஹோமருக்கு முன் தோன்றியது எல்லாம்– 600 ஆண்டுக்குள் நடந்ததாக ‘கப்சா’ அடிக்கிறீர்களே!
ராமர் செய்த யுத்ததில் மஹா பாரத வியூகங்கள் இல்லை, மஹாபாரத ஆயுதங்கள் இல்லை, கிருஷ்ணர் கால சூது-வாதுகள் இல்லை– அப்படியானால் இரண்டுக்கும் பெரும் கால வேறுபாடு இருக்க வேண்டுமே. மஹா பாரத கி.மு3102 காலத்தியது என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதை நம்பாதோரும் கி.மு.1500 என்று மஹாபாரத யுத்தத்துக்கு காலம் குறித்துள்ளனரே. அக்காலத்தில் வாழ்ந்த வியாசர்தானே வேதங்கள் மிகவும் பெருகிவிட்டன என்று நான்காகப் பகுத்தார்.
அது போகட்டும்; கிரேக்க நாட்டு மெகஸ்தனீஸ் அவருக்கு முன்னர் 140-க்கும் மேலான அரசர்கள்
மகத சாம்ராஜ்யத்தை ஆண்டதாக எழுதிவைத்துள்ளாரே! அர்ரியன் என்ற கிரேக்க எழுத்தர் கி.மு 6000 க்கு முன் துவங்கிய இந்து மன்னர் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகிறாரே. இதையெல்லாம் அவர்கள் எழுதியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிவிட்டதே.
தமிழ் வளர்க்க அகத்தியர் தென்னகம் வந்தது கி.மு.700-க்கும் கி.மு ஆயிரத்துக்கும் இடையில் என்று அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களே. இவை எல்லாம் இப்படி இருக்க நீங்கள் 600 ஆண்டுக் கால இடைவெளியில் இவ்வளவும் நடந்தது என்று சொல்லுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உளதே! என்று கேட்க வேண்டும்.
இதையெல்லாம் விட, வேத இலக்கியத்தில் உள்ள வானவியல் குறிப்புகளை இதுவரை யாரும் பொய் என்று சொல்லவில்லை அதன் கணக்குப்படி பார்த்தால் கி.மு 3000 அல்
லது அதற்கும் முன்னர் என்று வேதத்தின் காலம் கணக்கிடப்படுகிறதே.
அது போகட்டும். சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் வேதத்தின் காலம் கி.மு. 1900-க்கும் முன்னதாக என்று காட்டுகின்றனவே.
துருக்கி நாட்டில் பொகைஸ்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் பலகைக் கல்வெட்டில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி இரு மன்னர்கள் கையெழுத்து இட்டது இருக்கிறதே. துருக்கியைத் தாண்டி ஈரான் வரை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத கலாசாரம் பரவியுள்ளதே.
இதோ கீழே கண்ட வானவியல் குறிப்புகளை மறுத்துப்பேச முடியுமா? சொல்லுங்கள்:–
சிறுவர்கள் பம்பரம் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி பம்பரம் ஆடுகையில் கடைசியில் பம்பரம் ஆட்டம் முடிந்து அது தரையில் சாயும் முன் சாய்வாகச் சுற்றி கீழே விழுவதையும் பார்த்திருப்பீர்கள் இது போலத்தான் பூமியும் சாய்வாகச் சுற்றுகிறது. வான மண்டலத்தில் வட்டமாக உள்ள ஒரு பொருள் சுற்றும்போது அது சாய்வாகச் சுற்றுகிறது என்றால் என்ன? பொருள் விளங்க வில்லையே? என்று கேட்கலாம். அதாவது பூமியின் அச்சு இப்படிச் சாய்வாக இருக்கிறது. இதனால் இந்தக் கோட்டின் கீழ்ப் புறமும் மேல் புறமும் அச்சுக்கு நேராக நிற்கும் நட்சத்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
துருவ நட்சத்திரம் என்று நாம் இன்று காணும் நட்சத்திரம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துருவ நட்சத்திரமாக இல்லை! வேறு ஒரு நட்சத்திரம்தான் துருவன் பதவியை வகித்து வந்தது. இப்படி மாறிய பல நட்சத்திரங்களை வேத மந்திரங்களில் காண முடிகிறது.
இதையெல்லாம் கொண்டு ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞரும் , பால கங்காதர திலகர் என்ற இந்திய அறிஞரும் வேதத்தின் காலத்தைக் கணக்கிட்டனர். ஒருவருக்கொருவர் தெரியாமல், அறியாமல், தனித்தனி ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த விஷயங்கள் இதோ:-
சதபத பிராமணத்திலுல் கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம் பற்றி உள்ளது. இது மார்ச் 21 ஆம் தேதி சம இரவு நாட்கள் (Vernal Equinox) நிலையாகும். 2000 ஆண்டுகளுக்கு ஒரு பூமியின் முறை அச்சு வேறு ஒரு நட்சத்திரத்தைக் காட்டும். பம்பரம் போல் வேக மாகச் சுற்றாமல் பூமியின் அச்சு மெதுவாகச் சுற்றுவதால் 27 நட்சத்திரங்களில் ஒவ்வொன்றாக மாற 2000 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய நிலயை ஒப்பிடுகையில், இது (கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம்) கி.மு 2500 இல் இருந்த நிலை என்பதை வானவியலாளர் அறிவர்.
ரிக்வேதத்திலும் ஒரு குறிப்பு உள்ளது இது மிருக சீர்ஷம் பற்றிய குறிப்பாகும். இந்த நிலை கி.மு 4500 இல் இருந்த நிலை என்று ஜெர்மானியர் ஜாகோபி எழுதினார்.
கி.மு 2500-ல் இப்போதைய துருவ நட்சத்திரம் இல்லை. Alfa draconia ஆல்பா ட்ராகோனியா என்ற நட்சத்திரமே இருந்தது. இவை எல்லாம் ரிக் வேதத்தின் காலத்தை கி.மு 4500 என்று காட்டுவதாக ஜாகோபி சொன்னார்.
சுதந்திரப் போராட்ட வீரர் திலகரோ, ரிக் வேதத்தில் புனர்வசு நடசத்திரம் பற்றியுள்ள குறிப்பைக் காட்டி வேதத்தின் காலம் கி.மு.6500 என்று காட்டினார்.
டாக்டர் ஆச்சார், அண்மையில் நடத்திய ஆய்விலும் .கி.மு 3000 என்று கண்டுள்ளார்.
அவர் சொல்லும் கணக்கு (கி.மு)
அஸ்வினி – 200
பரணி- 1200
கார்த்திகை- 2200
ரோஹிணி- 3200
மிருகசீர்ஷம்- 4200
கிருத்திகையில் ஆண்டு துவங்குவதாக பிராமணங்கள் கூறுவது அவை 2200-ஐ ஒட்டி எழுதப்பட்டதைக் காட்டும்.
பிரம்மாவின் “தலையை வெட்டியதாக”க் கூறும் புராணக்கதைகள் 4200-ஐ ஒட்டி எழுந்த கதைகள்.
சப்தரிஷிக்கள் காலண்டர்
சப்த ரிஷிக்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 100 ஆண்டுகள் இருப்பர் என்ற பழைய சப்தரிஷி காலண்டர் இன்றும் கூட நாட்டின் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. 2700 ஆண்டு சுழற்சியின் அடிப்படையில் உடையது. “சப்த ரிஷிக்கள்- கிருத்திகை நட்சத்திரக் கல்யாணம்” என்பன எல்லாம் இந்த காலண்டாரின் அடைப்படையில் வந்ததே.
தற்போதைய கணக்குப்படி இதன் துவக்கம் 3076. ஆனால் கிரேக்க ஆசிரியர்கள் அர்ரியன், பிளினி ஆகியோர் இது கி.மு.6676ல் துவங்கியதாக எழுதியுள்ளனர்.
இந்து மத நூல்களில் அஸ்வமேத யக்ஞம் துவங்கப்பட்ட நட்சத்திரம், ஆண்டு துவங்கும் மாதம் ஆகியன மாறுபட்டிருப்பதற்கு அவ்வப்போது இருந்த நட்சத்திர நிலையும் அதன் பழமையும் காரணமாகும்.
“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவது மஹா பாரதத்தின் பழமையைக் காட்டும். அப்போது மார்கழி மாதமே ஆண்டின் துவக்க மாதமாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் நவில்வர்.
தொல்பொருட் துறை சான்று
ஹிட்டைட் மன்னரும் மிட்டனி மன்னரும் துருக்கி நாட்டில் பொகாஸ்கோய் என்னுமிடத்தில் கைச்சாத்திட்ட உடன்பாட்டில் இந்திரன், மித்திரன், வருணன், நாசத்யர் பேரில் உடன்படிக்கையை கை எழுத்திட்டுள்ளனர். இவை எல்லாம் இந்தோ- ஐரோப்பிய இலக்கியத்திலும் வெவ்வேறு கால கட்டங்களில் இருந்ததாகக் காட்டுவோரும் “நாசத்யர்” என்ற அஸ்வினி தேவர்களைக் காட்ட முடியவில்லை. நாசத்யர் என்பது இந்துக்கள், இந்திய மண்ணில் வேதம் பாடியபோது போற்றப்பட்ட தெய்வங்கள். ஆக இதுவரை வானவியல் குறிப்புகளை மறுத்தோ, தொல்பொருட் துறைக் குறிப்புகளை மறுத்தோ அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
சரஸ்வதி நதி சான்று
சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகளும் ரிக்வேத காலத்தைக் கணிக்க பெரிதும் துணைபுரிகிறது. இந்த நதி கடலில்
கலக்கும் நதி என்று ரிக்வேதம் கூறும். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான பூகம்பத்தால் இது திசை றிப்போய் பின்னர் வறண்டுவிட்டது. அண்மைக்கால விஞ்ஞான சோதனைகள் 1900.ல் இது ஏற்பட்டதாகக் காட்டுவதால் ரிக்வேதத்தை கி.மு 1900க்கு முன்னர்தான் கணிக்கமுடியும். இப்படி வானவியல், தொல்பொருட் துறை, மொழியியல், மக்களின் பாரம்பர்ய நம்பிக்கை, இலக்கியச் சான்றுகள் எல்லாம் வேதத்தின் பழமையைப் பறை சாற்றுவதால் வெளிநாட்டான் எழுதியதும் அதற்குத் தாளம் போடும் மார்கஸீய திராவிடங்களின் வாதங்களும் நகைப்புக்குள்ளாகி விடுகின்றன.
அட நகைச் சுவை என்பது ஆராய்ச்சியிலும் தேவைதானே!
–சுபம்—
You must be logged in to post a comment.