பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2 (Post.8979)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8979

Date uploaded in London – – 29 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் பெல்காமில் தங்கி இருந்த போது பலரும் அவரைச் சந்தித்து வந்தனர்.

அவர்களுள் ஒருவர் ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர். அவர் பெல்காம் நகரிலேயே மெத்தப் படித்தவர் என்ற பெயரைப் பெற்றவர். பாரம்பரியம் தவறாது தென்னிந்தியாவிற்கே உரித்தான ஆசாரங்களைக் கடைப் பிடிக்கும் ஹிந்து அவர். ஆனால் மனதால்  அறிவியல் நோக்கில் எதையும் அலசுபவர் அவர். சந்தேகப் பேர்வழி. சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வந்தாலும் கூட எதையும் விஞ்ஞான நோக்கில் பார்த்து வந்ததால் ஸ்வாமிஜியை அவர் சந்தித்த போது மிகவும் குழம்பிப் போனார்.

ஸ்வாமிஜி அவரை விட அதிக அனுபவசாலி. அவரை விட இன்னும் அதிகம் படித்திருந்தார். தத்துவம் மட்டுமல்ல, அறிவியலிலும் அவர் தேர்ந்த நிபுணராக இருந்தார்.

ஆகவே விவாதங்களில் தனது கருத்துக்களை வலியுறுத்த அடிக்கடி அவர் ஆவேசப்பட்டார்; கோபப்பட்டார். அகங்காரமாகப் பேசவில்லை என்றாலும் கூட அவர் அடிக்கடி எதிர்த்துப் பேசி வந்தார்.

இதையெல்லாம் பார்த்த ஜி.எஸ். பாட்டேயின் (G.S.Bhate) தந்தையார் சற்று சங்கடப்பட்டார். அவரை அப்படிப் பேசக் கூடாது என்று கூறினார்.

ஆனால் ஸ்வாமிஜியோ சற்றும் கோபப்படவில்லை. பாட்டேயின் தந்தையார் எஞ்ஜினியரைக் கடிந்து கொண்ட போது குறுக்கிட்ட ஸ்வாமிஜி புன்முறுவலுடன் அவரது பேச்சால் தனக்குச் சிறிதும் வருத்தமோ கோபமோ இல்லை என்று கூறினார்.

இந்த மாதிரி சமயங்களில் குதிரையைப் பழக்குகின்ற பயிற்சியாளரின் வழியே சிறந்த வழி என்று கூறிய ஸ்வாமிஜி அதை விளக்கலானார்.

குதிரைகள் குட்டியாக இருக்கும் போது பயிற்சியாளர்களிடம அனுப்பப்படுவது வழக்கம். எல்லா குட்டிக் குதிரைகளும் அடங்காது. பிடிவாதம் பிடிக்கும். தன் மனம் போல ஓடும்! குதிக்கும்!

இப்படிப்பட்ட குதிரைகள் வரும் போது பயிற்சியாளர் முதலில் அதன் முதுகின் மீது ஏறி அமர்வார். அப்படி அமர்ந்தவுடனேயே தனது இருக்கையை விட்டு விடாது பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்.

தன் மீது ஏறி அமர்ந்த பயிற்சியாளரை கோபம் கொண்ட குதிரைக் குட்டிகள் எப்படியாவது கீழே தள்ளப் பார்க்கும்.

அங்கும் இங்கும் ஓடும்; குதிக்கும்!

ஆனால் பயிற்சியாளரோ அமைதியாக தன் பிடியை விடாது குதிரையின் மீது அமர்ந்திருப்பார்.

ஆடி, ஓடி தனது ஆற்றலை எல்லாம் இழந்த குதிரை களைத்துப் போகும்!

இந்த நிலையில் தான் பயிற்சியாளரின் நிஜமான வேலையே ஆரம்பிக்கும். அவர் தனது வேலையை ஆரம்பிக்கும் போது, குதிரைக்குத் தெரிய வரும் தனது உண்மையான  மாஸ்டர் தன் மீது அமர்ந்திருப்பவர் தான் என்று!

பிறகு பயிற்சி மிக சுலபமாக ஆகி விடும்.

மாஸ்டர் சொன்னதையெல்லாம் அது கேட்கும்.

இதே போலத் தான் விவாதங்களும் என்று கூறி நிறுத்திய ஸ்வாமிஜி மேலும் விளக்கலானார்.

உரையாடலின் போதும் விவாதத்தின் போதும் எதிராளியை தனது சக்தியை எல்லாம் உபயோகித்துப் பேசட்டும், விவாதிக்கட்டும் என்று அதை அப்படியே விட்டு விட வேண்டும். தன்னிடம் மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் களைத்துப் போன நிலையில் அவரைச் சுலபமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். என்ன வேண்டுமானாலும் அவரைச் செய்யச் சொல்லலாம்.

வற்புறுத்தலினாலோ, தொடர்ந்து பேசுவதினாலோ சாதிக்க முடியாததை இப்போது செய்து விட முடியும். விவாதத்திற்கு வரும் ஒருவர் தன்னை எதிராளி வற்புறுத்தப் பார்க்கிறார், சம்மதிக்க வைக்கப் பார்க்கிறார் என்றே நினைப்பார். ஆக வற்புறுத்தல் இல்லாமல் அவர் ஒப்புக் கொள்ள வேண்டியதை உரிய முறையில் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வார்.

ஸ்வாமிஜியின் இந்த உத்தி பெல்காமில் அவரை வாதுக்கு அழைத்து வெல்ல வேண்டும் என்று நினைத்த அனைவரையும் தோற்க அடித்தது.

தங்களின் எல்லாத் திறமைகளையும் உபயோகித்து அவர்கள் வாதம் செய்த போதும் புன்முறுவலுடன் அதை கேட்ட ஸ்வாமிஜி மெதுவாக தனது கருத்துக்களை முன் வைப்பார்.

அனாயாசமாக வெவ்வேறு நூல்களிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல அவர் தரும் மேற்கோள்கள் எதிராளியின் வாயை அடைத்தது மட்டுமல்ல; பிரமிக்க வைத்தது.

ஆனால் ஸ்வாமிஜி ஒரு விவாதத்தில் தான் வெல்ல வேண்டும் என்று எப்போதுமே நினைத்ததில்லை ; ஹிந்து மதத்தின் கொள்கைகள் உலகின் முன் சரியானபடி வைக்கப்படும் காலம் வந்து விட்டது என்பதை நிரூபித்தால் போதும் என்றே அவர் நினைத்தார்.

வேதாந்தம் என்பதை ஒரு கோழை கூடப் பேசி விளக்க முடியும், ஆனால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க வலிமை வாய்ந்த ஒருவரால் தான் முடியும் என்பதை முத்தாய்ப்பாக அவர் கூறி அருளினார்!

சந்யாசி ஒருவரின் நியதிப்படி சில நாட்களிலேயே பெல்காமை விட்டு ஸ்வாமிஜி சென்ற போது பெல்காமே வருந்தியது.

பின்னால் உலகம் வியக்கும் பெரும் ஆற்றல் கொண்ட விவேகானந்தராக அவர் போற்றப்பட்ட போது அவர்கள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்ல முடியுமா என்ன?

***

ஆதாரம் : ஜி.எஸ். பாடே தனது நினைவுகளை 1923 ஜூலை இதழில் பிரபுத்த பாரத இதழில் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியதன் சுருக்கமே இந்தக் கட்டுரையில் தரப்படுகிறது.

ஸ்வாமிஜியைப் பற்றி 35 பேர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நூல் Reminiscences of Swami Vivekananda. கிடைக்குமிடம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடக் கிளைகள் அனைத்திலும்!

வேதாந்தம், பெல்காமில் , விவேகானந்த,