வேதத்தில் தமிழ் உணவுகள்: வடை, பாயசம், பிட்டு!!

Written by London swaminathan

Research Article No: 1830

Date: 27 April 2015; Uploaded in London at 10-13 am

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1830

கட்டுரையாளர்; லண்டன் சுவாமிநாதன்

தேதி: 27 ஏப்ரல், 2015  லண்டன் நேரம்:காலை 10-13

(This is already uploaded in English)

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இட்லி, வடை, பொங்கல், தோசை இல்லாதது நமக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆயினும் ஊன் (மாமிசம்) பற்றியும், மது பற்றியும் வேறு பல சாப்பாடு வகைகள் பற்றியும் உள்ளன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் பிராமணர் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும், மன்னர்கள் வீட்டுக்குப் போனால் என்ன கிடைக்கும் என்பனவற்றைத் தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். பிராமணர் தெருவில் கோழியோ நாயோ இரா என்றும் துல்லியமாகப் பாடி வைத்துள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ‘வெஜிட்டேரியன்’ என்பதை இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றனர். ஆயினும் பாரி முதலிய வள்ளல் பிறருக்கு அளித்த “நான் வெஜ்” – வகைகளையும் புகழத் தவறவில்லை. அதுவும் புலனழுக்கற்ற அந்தணாளன் என்று பாடப்பெற்ற கபிலர் என்னும் பிராமனப் புலவர் ஊன் ஊனவைப் பாராட்டினார்!! ஏனெனில் தமிழ் மன்னர்களோ பாணர், கூத்தர், விறலியரோ பிரியாணி இல்லாமல் வாழ முடியவில்லை. ஏராளமான பாடல்களில் பிரியாணிக்கு புகழ்மாலை!

மேலை நாட்டில் கொஞ்சம் வெய்யில் கூடுதலானால் உடனே தோட்டத்தில் பாய் விரித்து, ‘சேர்’ போட்டு,  நண்பர்களைக் கூட்டி, ‘பார்பிக்யூ; (கம்பியில் கோர்த்துச் சுட்ட மாமிச வகையறா, தொகையறாக்கள்) ‘பார்ட்டி கொடுப்பார்கள். இது கூட சங்கத் தமிழ் பாடலில் உள்ளது. இட்லி, வடை, சாம்பார் இல்லதது பெருங்குறையே! ஆனால் புளிக் குழம்பு உள்ளது. நிற்க! சொல்லவந்ததோ வேறு விஷயம்.

வேதத்தில் பிட்டு,அப்பம் ஆகியன உள்ளது. மதுரையில் பிட்டு விற்ற கிழவிக்கு சிவன் எப்படி உதவினார் என்பதையும், அவர் மீது பாண்டியன் போட்ட அடி, அங்கிருந்த எல்லார் முதுகிலும் விழுந்தது என்பதையும் மாணிக்கவாசகர் வரலாற்றின் மூலம் அறிவோம். இந்தப் பிட்டு என்ற தமிழ் சொல் வேதத்தில் உள்ளது.

அபூப என்று நெய்யப்பம், ஆப்பம் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளன. இன்று வரை மலையாள தேசத்திலும், பிராமணர் வீட்டுக் கல்யாண சீர் வரிசையிலும் இந்த அப்பத்தைக் காணலாம். தமிழர்கள் விரும்பிச் சாப்பிடும் உளுந்து வடை, பருப்பு வடைகளை பிராமணர்கள் இறைவனுக்குப் படைக்கையில் (நைவேத்யம் செய்கையில்) – மாஷாபூபம் முதலிய சொற்களைப் பயன்படுத்துவதால் இன்றும் இது சம்ஸ்கிருத, தமிழ் சொற்களில் அப்படியே பயிலப்படுகிறது என்பது தெளிவு. இது தவிர நாம் இடியப்பம், குழியப்பம் என்று காலப் போக்கில் பல அப்பங்களைக் கண்டு பிடித்து அறுசுவை உணவுகளில் சேர்த்துவிட்டோம்.

சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சொன்னது போல வேதம் கி.மு 4000- க்கு முந்தையது என்று கொண்டால் 6000 ஆண்டுகளாக சில சொற்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இருப்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம்.

அந்தக் காலத்தில் ரிஷி முனிவர்கள் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் அவர்களுடைய பர்ணசாலைகளுக்கு (இலை/ஓலை வீடு) போனாலோ அங்கே “மது பர்க்கம்” கொடுக்கப்படும். இப்போது நாம் யாரவது வீட்டுக்கு வந்தால் காப்பி, தேநீர் அல்லது பழரசம் (ஜூஸ்) கொடுப்பது போல. மதுபர்கத்தில் தயிரும், தேனும் இருக்கும். இப்போது ஸ்ரீகண்ட் என்ற இனிப்பு செய்வது போல அந்தக் காலத்திலும் இதைச் செய்திருக்கிறார்கள் இப்போதும் குஜராத் முதலிய இடங்களில் ஸ்ரீகண்ட் கிடைக்கிறது.

இப்போது நாம் சாதத்துடன் பலவகைப் பொருட்களைக் கலந்து எலுமிச்சம்பழச் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், எள்ளுஞ்சாதம், தேங்காய்ச் சாதம், பிரியாணி, பால் சோறு என்று செய்வது போல வேத காலத்தில் பலவகை ஓதனம் (சோறு அல்லது களி) செய்தது பற்றிய குறிப்புகளும் நிறைய இருக்கின்றன.

இப்போது கிராமப்புறங்களில் அம்மன் உற்சவங்களில் கூழ், கஞ்சி வார்த்துக் கொண்டாடுவது போல அந்தக் காலத்தில் கஞ்சி, கூழ் செய்த குறிப்புகளும் உண்டு. வேதத்தில் குறிப்பிடும் தானியங்களின் பட்டியல் நீண்ட பட்டியலாகும்.

பத்து வகை மீன்களும் குறிப்பிடப்படுகின்றன. நீர், மீன், மயில், முதலிய சொற்கள் வேதத்தில் இருப்பதைக் கொண்டு பலரும் ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள் இருப்பதாக எழுதி வந்தனர். ஆனால் நீர் என்ற சொல் கிரேக்க மொழியிலும் உள்ளது. ஆகையால் தமிழும் வடமொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்த மொழிகள் என்ற கொள்கையே சரியென்று படுகிறது. அதனால்தான் இப்படி பல சொற்கள் இரண்டு மொழி இலக்கியங்களிலும் இருக்கின்றன. வ்ரீஹி என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து அரிசி (ரைஸ்) வந்தது அல்லது அரிசியிலிருந்து வ்ரீஹி வந்தது என்றும் சொல்லலாம். மூல மொழி ஒன்றே என்பதற்கு பிட்டு, அப்பம் என்பனவும் சான்றாகத் திகழ்கின்றன.

பசு, காளை மாடு, பால் (பயஸ், ஆயச,க்ஷீர, துக்த) ஆகியவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களை நாகரீகப் படுத்தியது வேத கால இந்துக்களே. பசுவுக்கும் பாலுக்கும் வேதங்கள் கொடுக்கும் மரியாதையை உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாது. வேதங்களில் பசு-கன்று இடையிலுள்ள அன்பை (வாத்சல்யம்) உவமையாகவும் பல இடங்களில் காணமுடியும். பசுவை ஒரு தாய் நிலைக்கு (கோ மாதா) என்பதை எந்த நாட்டு இலக்கியத்திலும் கான முடியாது. இன்று பால் உணவு இல்லாத இடமே இல்லை.

பால் (பயஸ், பாயச) பொருட்கள் பற்றி தனியே ஒரு கட்டுரை வரைவேன்.

மேற்கோள்கள்:

Apuupa (RV 3-52-7; RV 10-45-9), Satapatha Brahmana (2-2-3-12; 4-2-5-19)