வேத நிலாவின் பவனி! (POST No.5530)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 12 October 2018

 

Time uploaded in London – 6-59 AM (British Summer Time)

 

Post No. 5530

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வேத நிலாவின் பவனி!

 

.நாகராஜன்

 

வேத நிலாவின் பவனி – தம்பீ

வீறுபெற் றெழுந்ததைக் கவனி – ஓதும்

நாத ஒலியின் சக்தி – நமக்கு

நல்கிடும் பரசிவ முக்தி

 

நாயென வாழ்ந்தது போதும் – இதோ

ஞாலத் தலைமையென ஓதும் – இன்னும்

பேயென வாழ்க்கை புரிவையோ  – அன்றி

பீடுடை அரியென நடப்பையோ

 

இந்திரன் அக்கினி வளியுடன் – மீண்டும்

அனைவரு மெழுந்தனர் உயிருடன் – ஆஹா

மந்திர வித்தைகள் பாரடா – அதன்

மகிமைகள் ஓர்ந்து தேரடா

 

பட்ட மரம் தளிர்க் குதடா – பருந்துமே

பாம்பை அணைக் குதடா- ஆஹா!

சுட்டவை உயிரோ டாடுதடா – இங்கு

சுடர்ப்பொறி சுழித்துப் பாடுதடா

 

சொல்லவும் குளிருது இதயம் -இங்கு

சுதந்திர ஞானம் உதயம் – தம்பீ

மெல்லெனத் தென்றல் வீசுது – எனது

மேனியும் சிலிர்த்து ஆடுது

 

பாரத நாடிது உயர்ந்தது – அந்தப்

பார்த்தனின் வீரம் மீண்டது – சொல்லினி

பாரதி ஆரிய வாணி – அவளே

பாரினை ஆளும் ராணி!

 

***

களி, துயர் ஒன்றெனக் கருதுவோம்!

 

.நாகராஜன்

 

சிலமலர் வாடி உதிரும்

சிலமலர் தெய்வம் சேரும்

நிலவுல கிதனில் நேர்ந்த

நிலையெலாம் எண்ணி மாய்ந்தால்

கலங்கி நா மழிவோ மன்றோ!

கவலையை விரட்டி ஒழித்தே

உலகியல் களிதுயர் இரண்டும்

ஒன்றெனக் கருதி வாழ்வோம்!

***

வேற்றுமையில் ஒற்றுமை

 

.நாகராஜன்

 

வேற்றுமையில் ஒற்றுமை

விளங்குகின்ற நாடு

நேற்றுமின்றும் நாளையும்

நிலைத்திருக்கும் நாடு   . . பாரத நாடு

 

ஹிந்து முஸ்லீம் சீக்கியர்

புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்

எந்த மதத்தோர் ஆயிலென்?

இணைந்திருக்கும் நாடு    … பாரத நாடு

 

தமிழ் தெலுங்கு வங்கம்

சிந்தி மராட்டி ஹிந்தி

அமிழ் தினைப் போல் மொழிகள்

அனைத்தும் இங்கே ஒன்றாம் ..  பாரத நாடு

 

உடுத்திடும் உடைகள் வேறு

உண்டிடும் உணவுகள் நூறு

அடுத்திடும் சடங்குகள் பலவாம்

ஆயினும் உணர்வோ ஒன்றாம்  … பாரத நாடு

 

இதுவே பூமியில் சொர்க்கம்

இதுவே அமைதியின் நிலையம்

இதுபோல் ஏதொரு நாடு

இணையிலா இன்ப வீடு   … பாரத நாடு

***