சாமியார் வேடத்தில் உளவாளிகள்!

The Spy Who Loved Me

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1209; தேதி ஆகஸ்ட் 2, 2014.

இந்தியாவில் சாமியார் வேடத்தில் உளவாளிகள் இருப்பதை எல்லோரும் அறிவர். வெளி நாட்டுக்காரர்களில் உண்மையான பக்தர்களும் உண்டு. ஆனால் பலர் சமயத்தைப் பயன்படுத்தி எளிதாக உளவு வேலைகளில் ஈடுபடுவது வள்ளுவர் காலத்தில் இருந்து நடக்கிறது. வடமொழி நூல்களில் உலகப் பிரசித்தி பெற்ற அர்த்த சாஸ்திரமும் ஒன்று. அதை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன், உளவுக் கலை பற்றி விரிவாக எழுதி இருப்பதை அறிஞர் உலகம் அறியும். ஆனால் மனு, வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோரும் பல சுவையான தகவல்களைத் தருவதை சிலரே அறிவர்.

சிலப்பதிகாரம் தரும் சுவையான தகவல்கள்

1.நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன். உடனே அழும்பில் வேல் எழுந்து மன்னர் மன்னா ! அதற்குத் தேவையே இல்லை. இந்த ஜம்பூத்வீப நாட்டின் எல்லா பகுதி உளவாளிகளும் நம் தலை நகர் வஞ்சியில் இருக்கின்றனர். நகர் எங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி பறந்து விடும் என்கிறான்.

நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப
–(காட்சிக் காதை சிலப்பதிகாரம்)

இதிலிருந்து தெரிவதென்ன? அக்கலத்தில் உளவுத் துறை மிகவும் முன்னேறிய நிலையில் இருந்தது. இன்றும் கூட டில்லியில் உலக நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள் எல்லோரும் இருப்பதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன.
THE-SPY-WHO-LOVED-ME-POSTER

2.இரண்டாவது விஷயம் கீரந்தை என்னும் பிராமணன் கதையில் வருகிறது. அந்தப் பிராமணன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக பாண்டிய மன்னன் கையையே இழந்தான். பொற்கைப் பாண்டியன் கதை எல்லோரும் அறிந்ததே. மன்னரே மாறுவேடத்தில் நாட்டை உளவு பார்த்தது இக்கதையில் தெரிய வருகிறது–(கட்டுரை காதை, சிலப்பதிகாரம்)

ராமாயணம் தரும் சுவையான தகவல்கள்
3.வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் ராவணன் அனுப்பிய சுகன், சாரன் என்ற இரண்டு உளவாளிகள் பற்றி விரிவான பகுதி உள்ளது. யுத்த காண்டத்தில் கம்பன் இதற்கு ஒரு பெரிய படலத்தையே ஒதுக்கி உளவுக் கலை பற்றி அலசுகிறான். அந்த இரண்டு உளவாளிகளும் குரங்கு வேடம் போட்டு நடித்த போதும் விபீசணன் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து ராமனிடம் ஒப்படைக்கிறான். ராமனோ அவர்களை மன்னித்து, படை பலம் பற்றிய முழு தகவல்களையும் அளித்து ராவணனிடம் போய்ச் சொல்லுங்கள் என்கிறான். இறுதி வெற்றி ராமனுக்கே என்பது அவனுக்குத் தெரியும்!
asceticdog

புறநானூறு தரும் சுவையான தகவல்கள்

4.சங்க இலக்கிய நூலான புற நானூற்றில் (பாடல் 47) சுவையான சம்பவம் வருகிறது. இளந்தத்தன் என்ற புலவன் நெடுங்கிள்ளியிடம் வந்தான். அவன் அதற்கு முன் நலங்கிள்ளியிடம் பாடிப் பரிசில் பெற்றவன். நலங்கிள்ளியோ அவனுடைய எதிரி. ஆகையால் இந்தப் புலவன் உளவு பார்க்க வந்தான் என்று சொல்லி நெடுங்கிள்ளி, மரண தண்டனை விதித்து விடுகிறான். உடனே புத்திசாலிப் புலவர் கோவூர் கிழார் வந்து உண்மையை எடுத்துரைத்துப் புலவன் உயிரைக் காப்பாற்றுகிறார். “பழுமரம் நாடி ஓடும் பறவைகளைப் போல உன் போன்றவரை நாடி வரும் அப்பாவிப் புலவன் இவன். மறு நாளைக்குக் கூடச் சேர்த்து வைக்காமல் உறவினர்களுக்குக் கொடுத்து மகிழும் ஜாதி புலவர் ஜாதி. இவன் உனக்குத் தீங்கு செய்வானா? இல்லவே இல்லை. இவனை விடுவி” என்கிறார் கோவூர்க் கிழார்.
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ? இன்றே.

6228-000541
வள்ளுவர் தரும் சுவையான தகவல்கள்

5.ஒற்றாடல் என்னும் 59 ஆம் அதிகாரத்தில் பத்தே குறள்களில் இருபதே வரிகளில் உளவுக்கலை விஷயங்களைச் சாறு பிழிந்து கொடுக்கிறான் வள்ளுவன். “புல்லட் பாயிண்ட்” வள்ளுவன் கூறுவது:–
1.துறவி வேடத்தில் நாட்டு எல்லைகளைக் கடந்து உளவு பார் –(குறள் 586)
துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று
2.மூன்று ஒற்றர்களை நியமி; ஒருவருக்கு மற்றவர் பற்றித் தெரியக் கூடாது. மூவரும் ஒரே மாதிரி சொன்னால் அதை நம்பு —(குறள் 589)
3.எல்லோருக்கும் முன்னால் ஒற்றர்களைப் பாராட்டாதே. உன் குட்டு வெளிப்பட்டு விடும். ‘’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்ற கதை ஆகிவிடும்!! —(குறள் 590)
4.நன்றாக வேஷம் போட வேண்டும். யாராவது சந்தேகமாகப் பார்த்தாலும் சமாளிக்க வேண்டும். ரகசியம் வெளியாகக் கூடாது. அவன் தான் நல்ல ஒற்றன் —(குறள் 585)
5.அரசு அதிகாரிகள், அரசனின் சொந்தக்காரர்கள், வேற்று நாட்டுப் பகைவர் அத்தனை பேரையும் வேவு பார்க்க வேண்டும் –(குறள் 584)
இப்படி முத்து முத்தாக உதிர்க்கிறான் வள்ளுவன்.

220px-Noor_Inayat_Khan
Noor Inayat Khan was Moscow born Indian Muslim, worked as a British agent and executed by Hitler

மனு தரும் சுவையான தகவல்கள்

மனு ஸ்மிருதியில் ஏழாவது ஒன்பதாவது அத்தியாயங்களில் ஒற்றாடல் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மனு சொல்லும் விஷயங்கள்:
1.ஒவ்வொரு ஊரிலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஒற்றர் மூலம் தகவல் திரட்ட வேண்டும்
2.அந்தப்புரத்திலும், ரகசிய ஒற்றர் விஷயத்திலும் நடப்பனவற்றை நாள்தோறும் ஆராய வேண்டும்.
3.சந்தியாகால பிரார்த்தனைக்குப் பின்னர் ஒற்றர்களை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று ‘’ரிப்போர்ட்’’ வாங்க வேண்டும்.
4.அரசனுக்கு இரண்டு கண்கள் ஒற்ற்ர்கள்தான். தெரிந்த திருடர்கள், தெரியாத திருடர்கள் ஆகியவர்களைப் பிடிக்கும் கண்கள் இவை.
5.குற்றவாளிகளை குற்றம் செய்யுமாறு உளவாளிகள் மூலம் தூண்ட வேண்டும். அப்போது அவர்களை வகையாகப் பிடித்து விடலாம்.
6 தன் வலி, மாற்றான் வலி – இரண்டையும் அறிய ஒற்றர்களப் பயன்படுத்த வேண்டும்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் எழுதியது இன்றும் சாலப் பொருந்தும். தூதர் விஷயத்திலும், உளவுக் கலை விஷயத்திலும் நாம்தான் உலகிற்கே முன்னோடி. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்திலும் உள்ளதைப் போல உலகில் வேறு எங்கேயும் இல்லை. அவர் நூல் எழுதி 2300 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
mata hari executed in 1917
Most famous woman spy executed in 1917 during First World War.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர் போர்வைகளிலும் அறிஞர்கள் போர்வையிலும் உளவாளிகள் ஒளிந்திருப்பர். —-பத்திரிக்கையாளர்களில் பலர் உளவாளிகள்! —மடங்களில் நிறையவே உளவாளிகள் உண்டு. எளிதில் மற்றவர்களைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் அறியும் இடம் மத அமைப்புகள்தான்.— அரசியல் அலுவலகங்களில் உண்மையை உளறுபவர்கள் அதிகம் என்பதால் உளவாளிகளின் சொர்க்க பூமி அது.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு!! ராத்திரியில் அதுவும் பேசாதே !! என்று சும்மாவா சொன்னான் தமிழன்!!
–சுபம்–