Article No 1729; Date 18th March 2015
Written by London swaminathan
லண்டன் நேரம் காலை 8-15
வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்
ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.
முனிவர் வைசம்பாயனர்:
மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?
மன்னன் ஜனமேஜயன்:
முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.
முனிவர் வைசம்பாயனர்:
மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.
மன்னன் ஜனமேஜயன்:
வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.
முனிவர் வைசம்பாயனர்:
(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!
மன்னன் ஜனமேஜயன்:
முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!
முனிவர் வைசம்பாயனர்:
புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!
மன்னன் ஜனமேஜயன்:
சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.
முனிவர் வைசம்பாயனர்:
துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?
இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.
மன்னன் ஜனமேஜயன்:
சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.
முனிவர் வைசம்பாயனர்:
ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………
இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.
ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.
வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!
You must be logged in to post a comment.