
Translated by London swaminathan
Date: 4 June 2016
Post No. 2866
Time uploaded in London :– 6-25 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:
நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.
டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:
“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.
நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”
(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)
Xxx
(மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்; இந்த சம்பவங்கள் ஏற்கனவே என்னால் இங்கே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன)

சங்கீதம் – நல்ல மருந்து!
ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.
மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” — என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.
உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?
மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.
பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.
உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.
மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.
Xxx

காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!
டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.
டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.
அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.
வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.
(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)
–சுபம்–
You must be logged in to post a comment.