Post No. 10,419
Date uploaded in London – – 7 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 6-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஷீர்டி சாயிபாபா! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
பாரதம் கண்ட அற்புத மகான்களின் வரிசையில் ஷீர்டி சாயிபாபாவின் பெயர் தனி இடத்தைப் பெறுகிறது.
ஏனெனில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் அவர் பெரும் வழிகாட்டியாக, மகானாக, அருளாளராக விளங்கினார். மஹராஷ்டிரத்தில் பாத்ரி என்று ஒரு கிராமம். அங்கே கங்கா பாவத்யா, தேவகிரியம்மா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். சிறந்த சிவ பக்தர்களான அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் கங்கா பாவத்யா வெளியில் சென்றிருந்த போது ஒரு முதியவர் வீட்டின் கதவைத் தட்டி, “மழை அதிகமாக இருக்கிறது. இன்று இரவு மட்டும் இங்கு தங்குகிறேன்” என்றார். தேவகிரியம்மா சம்மதித்தார். திண்ணையில் அவர் படுத்தார். சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி உணவு கேட்டார். தேவகிரியம்மாவும் உடனே தந்தார். அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. வந்த முதியவர் என் கால்கள் வலிக்கின்றன. அமுக்கி விட வேண்டும் என்றார். குழப்பத்தில் ஆழ்ந்தார் தேவகிரியம்மா. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயம் கதவு தட்டப்பட ஒரு பெண்மணி நின்றிருந்தார். நான் கால்களைப் பிடித்து விடலாமா, இந்த முதியவருக்கு என்று கேட்டார் அவர். சந்தோஷமாக சரி என்றார் தேவகிரியம்மா. அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு மெய் சிலிர்த்தது.வந்த முதியவரும் பெண்மணியும் அங்கு இல்லை. பார்வதி பரமேஸ்வரன் காட்சி தந்தனர்.
“உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும்.மூன்றாவதாக நானே வந்து பிறப்பேன்”
என்று கூறி அருள் பாலித்தார் சிவபிரான்.அப்படியே நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக தேவகிரியம்மா இருந்த போது சிவபிரான் தனக்கும் தரிசனம் தர வேண்டுமென்று கங்கா பாவத்யா காடு மேடுகளில் அலைய ஆரம்பித்தார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற தேவகிரியம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். ஆனால் கங்கா முன்னால் சென்று கொண்டே இருக்கவே, குழந்தையை இலைகளின் மீது வைத்துச் சென்றார் தேவ்கிரியம்மா. அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீம் பக்கீர் எடுத்து தன் கிராமமான மன்வாத்தில் வளர்க்கலானார். பின்னர் குழந்தை வளர்ந்து சிறுவனான போது, அந்தச் சிறுவனை வெங்குசா என்பவரிடம் கொடுத்தார்.
சாயிபாபா 1838ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று சமாதி எய்தினார்.
இடைப்பட்ட 80 ஆண்டு காலத்தில் உலகில் அவர் நிகழ்த்திய லீலைகள் ஏராளம்.
16ஆம் வயதில் அவரது அருள் சக்திகள் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. அவர் மீது செங்கல்லை விட்டு ஒருவன் எறிய அது அப்படியே அந்தரத்தில் நின்றது.
இதைத் தொடர்ந்து, அவரை அணுகி நூற்றுக் கணக்கானவர்கள் வந்து அருளாசி பெறலாயினர்.
அவரது பெயர் எப்படி ஸாயிபாபா ஆனது? இதற்கு பி.வி.நரசிம்மஸ்வாமி ஒரு விளக்கம் தருகிறார்.
ஸாயின் என்ற பாரசீக வார்த்தைக்கு ‘ஸ்வாமி’ என்று பொருள். பாபா என்ற ஹிந்தி வார்த்தைக்கு அப்பா என்று பொருள். ஆகையால் ஸாயிபாபா என்றால் அன்பிற்குரிய ஒரு ஸ்வாமி அல்லது யதி என்று அர்த்தமாகிறது.
ஸாயிபாபாவின் குரு யார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் ராதாபாய் தேஷ்முகீன் என்ற பெண்மணி பாபாவிடம் தனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டி வற்புறுத்தினாள்.அவரோ அதை ஏற்கவில்லை. உடனே அந்தப் பெண்மணி உபதேசிக்கவில்லை என்றால் அன்ன ஆகாரமின்றி உயிரை விட்டு விடுவேன் என்றாள். இதைக் கேட்டு உருகிய பாபா தன்னைப் பற்றி அவளிடம் சொன்னார்.
“நான் பன்னிரெண்டு வருஷ காலம் என் குருவிடம் பாத சேவை செய்தேன். அவரைப் போல ஒரு கருணாநிதியைக் காண முடியாது. அவர் எனக்கு எந்த வித உபதேசமும் செய்யவில்லை. அவர் தனது கடாக்ஷ வீக்ஷண்யத்தால் என்னைக் காப்பாற்றி வந்தார்.குருவிடம் அனன்ய சிந்தை செய்தால் அவரையே பரமார்த்தம் என்று எண்ணினால் அதுவே போதும்” என்று கூறினார்.
வாழ்நாள் முழுவதும் பக்தர்களுக்கு அவர் அருளிய வார்த்தைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று சிரத்தா இன்னொறு சபூரி. அதாவது சிரத்தையும் பொறுமையும், அவ்வளவு தான்! ‘நானிருக்க பயமேன்’ என்பது அவரது அபய வாக்கு!
“உலகில் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நானா, உன்னை மட்டும் ஏன் அழைத்தேன் தெரியுமா, நீயும் நானும் சென்ற நான்கு ஜென்மங்களாக நெருங்கி இருந்து வருகிறோம். உனக்கு அது தெரியாது. எனக்குத் தெரியும்” என்று அணுக்க பக்தரான நானாவிடம் ஒரு முறை அவர் கூறினார்.
இப்படி தனக்கும் பக்தர்களுக்கும் உள்ள நெருங்கிய உறவை ருணானுபந்தம் என்று அவர் கூறுவார்.
ஒரு நாள் காலை 8 மணி. பாபா ரஹதா நதிக்கரையோரம் அமர்ந்திருக்க வழிப்போக்கன் ஒருவர் அவரிடம் வந்து அமர்ந்தார் தனது வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தவளை ஒன்றின் ஓலக் குரல் கேட்டது. வந்த வழிப்போக்கரை அந்தக் குரல் வந்த திசையில் போகச் சொன்னார் பாபா. அங்கு ஒரு பாம்பு தவளை ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார் என்றார். வழிப்போக்கர் அந்த திசையில் சென்று பார்க்க ஒரு பெரிய பாம்பு ஒன்று தவளையை விழுங்க முயல்வதைப் பார்த்த அவர் ஒடி வந்து இன்னும் பத்து இருபது நிமிடங்களில் எல்லாம் முடிந்து விடும். தவளையை கரும்பாம்பு விழுங்கி விடும் என்றார்.
பாபாவோ, “ நானே அதன் தந்தை. அப்படி சாக விட்டுவிடுவேனா” என்று கூறி விட்டு அந்த பாம்பு இருந்த இடத்திற்குச் சென்று கூவினார்:
“ஹே, வீரபத்ரப்பா, இன்னும் கூட உன் எதிரி பசப்பா மீது உனக்கு இரக்கம் வரவில்லையா? இப்படிச் செய்ய நீ வெட்கப்பட வேண்டும்” என்றார்.
உடனே பாம்பு தவளையை விட்டு விட்டுச் சென்று மறைந்தது.
வழிப்போக்கர் ஆச்சரியப்பட்டு வீரபத்ரப்பாவின் கதையைக் கேட்க, வீரபத்ரப்பாவுக்கும் பஸப்பாவிற்கும் சென்ற ஜென்மத்தில் நடந்த சண்டையை விரிவாக எடுத்துரைத்தார் பாபா. தனது சொற்களைக் கேட்டு வெட்கப்பட்டு வீரபத்ரப்பா விலகி ஓடியதாகவும் தெரிவித்தார்.
இன்னொரு முறை ஒரு ஆட்டுக்குட்டியை அன்போது அணைத்துக் கொண்டார். அது அவரது பழைய சிஷ்யன். தன் அன்பைத் தெரிவித்து ஆசி தந்தார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கை விட மாட்டேன் என்பது அவர் பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். இது தான் பந்தத்தினால் ஏற்பட்ட கடன் – இதுவே ருணானுபந்தம் என்றார் அவர்.
** தொடரும்
tags- ஷீர்டி சாயிபாபா, Shirdi, Saibaba