ஜப்பானில் பிள்ளையார் & ஸரஸ்வதி கோவில்கள்! (Post No.5128)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 19 JUNE 2018

 

Time uploaded in London –  11-55 am (British Summer Time)

 

Post No. 5128

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஜப்பானில் 131 ஸரஸ்வதி கோவில்கள் இருக்கின்றன. டோக்கியோ, கொயசான், டகாவோ முதலிய இடங்களில் கணபதி (பிள்ளைஐயார்) கோவில்கள் இருக்கின்றன.

 

ஜப்பானில் எடொ (Edo) என்னும் ஊரில் ஜெர்மன் டாக்டர் பிலிப் ப்ரன்ஸ் வோன் சீபோல்ட் (1823-28) வாழ்ந்தார். அங்கு கணபதி என்னும் கடவுள் எவ்வளவு பிரஸித்தமானவர் என்று அவர் எழுதிய ஜப்பானிய கடவுள்கள்  (1832) என்ற நூலில் எழுதியுள்ளார். கணபதிக்குப் பல கோவில்கள் இருந்தமை குறித்தும் ஒரு பேட்டை அவர் பெயரில் ஷோடன் சோ என்று அழைக்கப்படாதாகவும் எழுதுகிறார்.

1970 ஆம் ஆண்டில் அந்த கோவிலுக்கு லோகேஷ் சந்திரா என்ற இந்திய-ஜப்பானிய அறிஞர் சென்றார். அப்பொழுதும் அங்கு வழிபாடு நடந்தது. 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழிபாடு நடக்கிறது. அந்த ஒன்பதாம் நூற்றாண்டு ஆலயத்தில்!

 

லோகேஷ் சந்திரா அங்கு சென்றபோது ஏராளமான தம்பதியர் இல்லற இன்பம் வேண்டியும், மூத்தவர்கள் சந்தோஷத்தையும் வணிகத்தில் வெற்றியையும் நாடி வந்தனர் என்றும் கூறுகிறார். அவரை நந்திகேஸ்வரர் (காங்கிடென்) என்றும் சொல்லுவர்.

 

ஸரஸ்வதி தேவிக்கு 131 கோவில்கள் உள. ஜெர்மானிய புஸ்தகத்தை மொழிபெயர்த்தால் அக்கலத்தில் அங்கு இருந்த உயிர்த் துடிப்புள்ள பௌத்த, இந்து சமய வழிபாடுகளை அறியலாம்.

 

புயற்காற்றுத் தாகுதல்களைத் தடுக்க 1836-ல் வருண பகவானுக்கு ஒரு ஆலயம் சமைக்கப்பட்டதாம். அரசு வேலையில் உயர பிரம்மாவையும், மழைக்காக வருணனையும், விஷ முறிவுக்காக கருடனையும், நல்ல வர்த்தகம்- போர் வெற்றிக்காக மஹா காலனையும் அவர்கள் வழிபட்டதாக எழுதியுள்ளார். இந்தியாவுக்கு வெளியேயுள்ள பிள்ளையார் கோவில்களில் மிகவும் பழமையானது எடோ நகர கோவில்தான்.

தத்துவ வித்தகர்களுக்கு கோவில்கள்

நரா என்னும் இடத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தத்துவ வித்தகர்களுக்கு  சிலைகள் உள்ளன. 1208ல் புகழ்பெற்ற சிற்பி உன்கேய் (Unkei) செதுக்கிய வசு பந்துவின் சிலையும், ஆசங்கரின் சிலையும் அங்கே உள்ளன. அவற்றின் ஜப்பானிய பெயர்கள்- செய்ஷின், முசாக்கு

 

நாளந்தா ஈ அற்புதம்!

818 ஆம் ஆண்டில் கோங்கோ சம்மை (வஜ்ரஸமாதி), சீனா வழியாக நாளந்தாவுக்கு வந்தார். பீஹார் மாநிலத்திலுள்ள நாளந்தாவில் சாப்பாடு அறைகளில் லட்சக் கணக்கில் ஈக்கள் இருக்கும் என்றும் ஆனால் புத்த பிக்ஷுக்கள் வந்து சாப்பிடத் துவங்கியவுடன் அவை மாயமாய் மறைந்து விடும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

 

ஜப்பானில் மஹாபாரதம்

ரிஷ்யஸ்ருங்கர் கதை ஜப்பானில் நடித்துக் காட்டப்படுகிறது (kabuki drama Naru-kami) . இது சீனா  வழியாக ஜப்பான வந்தது. ஒரு பிரெஞ்சு ஆசிரியரின்  (Edouard Chavanes ) மொழிபெயர்ப்பு இதற்கு அடிப்படையாக அமைந்தது. அவர் ஏக ஸ்ருங்க என்ற (இக்காகு சென்னின்) மஹாபாரதக் கதையை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் காந்தாரத்திலுள்ள ஏக ஸ்ருங்க ஆஸ்ரமத்தைப் பற்றி எழுதினார். இது காந்தாரத்தில் ஸ்வாட் மலை அடிவாரத்திலுள்ளது.

 

ஹோம குண்டம் படம்

 

டோஜி மடாலயத்தில் ஹோம குண்டம் படம் உள்ளது. நவக்ரஹங்களையும் 28 நக்ஷத்ரங்களையும் வழிபட பல்வேறு வகை ஹோமங்கள் ஒரு சுவடியில் காணப்படுகின்றன. இது ஒன்பதாம் நூற்றாண்டு சுவடி.

 

சாலையில் ஒரு பிரம்மாண்டமான வட்ட வடிவப் பாறையில் நவக்ரஹங்களுக்கான பீஜாக்ஷர மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸம்ஸ்க்ருத ஓரெழுத்தான ரோ இதில் உள்ளது. இதை நமது ஆசிரியர் பார்த்துக் கொண்டு இருக்கையில் ஒரு நவீன உடை அணிந்த இளம் பெண் வந்து ஒரு காகிதத்தை வைத்து அதன் மீது ஒரு ஆரஞ்சுப் பழத்தை வைத்து நைவேத்யம் செய்ததைக் கண்டார்.

புகாகு, ஜிகாகு

ஜப்பானில் ஒரு  ஏரியின் பெயர் பீவா; இதன் பொருள் வீணை. அது வீணை வடிவில் இருப்பதால் அந்தப் பெயர். இதே போல ஜிகாகு புகாகு என்ற நாட்டிய வகைகளில் இந்தியக் கதைகளும் நகைச் சுவைக் கதைகளும் இடம் பெறுகின்றன. இந்தக் கதைகள் பாரத நாட்டுக் கதைகள் என்பதால் அதன் தாக்கம் நன்றாகத் தெரிகிறது.

 

–SUBHAM–