
Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)
எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 2005
தேதி:– 20 ஜூலை, 2015
லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்:– காலை 9-28
தியாகம், அன்பு, நன்றி ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது உலகத்தில் எல்லா இன மக்களிடையேயும் இப்படிப்பட்ட நல்லோர் இருப்பதை அறிய முடிகிறது.
டைட்டானிக் கப்பல் விபத்தை அறியாதோர் யாரும் இருக்கமுடியாது. இந்தக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஆகும். 1912 ஏப்ரல் 15-ஆம் தேதி பிரிட்டனின் தென்பகுதி நகரான சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதல் (கன்னி) பயணத்தைத் துவக்கியது. வட அட்லாண்டிக் மஹா சமுத்திரத்தில் ஒரு மிதக்கும் பனிப்பாறை (ஐஸ்பெர்க்) மீது மோதி கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் 2224 பேர் சென்றனர். அவர்களில் 1500-க்கும் மேலானோர் கடலில் மூழ்கி இறந்தனர். அதில் ஒரு சம்பவம்.
டைட்டானிக் கப்பலில், உயிர்காக்கும் அவசரப் படகுகள், பாதிப்பேரை மட்டுமே காக்கும் எண்ணிக்கையில் இருந்தன. ஆகையால் முதலில் குழந்தைகளையும், பெண்களையும் படகுகளில் ஏற்றுவது என்று தீர்மானித்தனர். சில தியாக உள்ளம் படைத்தோர் தன்னுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாது மற்ற எல்லோரையும் படகுகளில் ஏற்றி கரை சேர உதவினர். இவர்களில் அன்றிற் பறவைபோன்ற இணைபிரியா கணவன் மனைவி தம்பதிகள் இருவர் எல்லோருக்கும் உதவி செய்தனர். அநேகமாக எல்லாப் பெண்களும் ஏற்றியாகிவிட்டது என்று அறிந்தபோது நியூயார்க் நகர பெண்மணி திருமதி ஈடா ஸ்ட்ராஸ் என்பவரை அவரது கணவர் ஈஸிடோர் ஒரு படகுக்குள் உள்ளே தள்ளி, “நீயாவது உயிர் தப்பு” என்று சொன்னார். அந்தப் பெண்ணோ படகிலிருந்து மீண்டும் கப்பலுக்குள் — மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்குள் –- குதித்தார்.
“அன்பரே! நீரும் நானும் எத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில் உம்மை விட்டுப் பிரியமாட்டேன். நீங்கள் எங்கே செல்கிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டார். இருவரும் கப்பலுடன் கடலுக்கடியில் சென்றுவிட்டனர். அதனால் என்ன? பூத உடல்தானே மறைந்தது. அவர் புகழ் உடம்பு மனித சமுதாயம் வாழும்வரை என்றும் நிலைத்து நிற்குமே!! அவர் எங்கு வேலை பார்த்தாரோ அந்த நிறுவன (மேஸிஸ்) ஊழியர்கள், அந்த தியாக சீலிக்கு ஒரு சிலையே வைத்துவிட்டனர் நியூயார்க் நகரில்!
சமோவா தீவில் ஒரு எழுத்தாளனுக்கு சமாதி!
ஆங்கிலம் படித்தவர்கள் ஆர்.எல்.ஸ்டீவன்சன் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, கிட்நாப்ட்’ போன்ற கதைகளைப் படித்திருப்பார்கள். அந்த ஸ்டீவென்சன் பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள சமோவா தீவின் மக்களின் உள்ளத்தில் அழியாஇடம் பெற்றுவிட்டார். எப்படி?
ஐரோப்பிய காலனியாதிக்கம் கொடிகட்டிப் பறந்த நாட்களில் உலகம் முழுதும் பிரிட்டனும், பிரான்சும், போர்ச்சுகல்லும் ஸ்பெயினும், ஹாலந்தும் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டனர். உள்நாட்டு மக்களை குருவி, கொக்கு சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளினர். பசிபிக் மஹா சமுத்திர சமோவா தீவில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் தலைவர் மடாFபாவைப் பிடித்து சிறையில் தள்ளினர். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் இருந்த சிறைகளுக்கு, கதாசிரியர் ஸ்டீவென்ஸன், சென்று புகையிலை முதலிய பொருட்களைக் கொடுத்து, ‘கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’ (பலனை எதிர்பாரா உதவி) செய்தார். கொஞ்ச காலத்துக்குப் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பழங்குடி இனமக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. ஆனால் குணநலன்களில், படித்தவர்களை விட ஒரு படி மேல்தான். அவர்களாக முன்வந்து ஸ்டீவன்ஸன் வாழும் மலைப்பகுதிக்கு சாலை அமைத்தனர். அந்த சாலை அவர் வீட்டு வாசல் வரை சென்றது. அது மட்டுமல்ல. அவரை தங்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவராக அறிவித்தனர்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”
ஸ்டீவென்சனின் மெய்க்காப்பளரும் அந்த பழங்குடி இனத்தச் சேர்ந்தவரே. அவரிடம் ஸ்டீவென்ஸன் சொன்னார்:
அடடா! உங்களுக்குத் தான் என்னே விவேகம் இருக்கிறது.
உடனே அந்த பழங்குடி இனத்தவர் சொன்னார்
விவேகம் அல்ல! இது பேரன்பு! என்றார்.
நல்ல குணங்களைப் பின்பற்ற எழுத்தறிவு தேவை இல்லையே!
ஸ்டீவென்சன் இறந்தவுடன் அவர்களே அந்த சடலத்தை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அங்கு முக்கியமான வர்கள் மட்டுமே அழைக்கப்படிருந்தனர். அந்த இடத்தில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் இருந்தார். எல்லோரும் வியப்புடன் நீங்கள் யார்? ஏன் இங்கே வந்தீர்கள்? என்று கேட்டனர். நீண்டகாலத்துக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்குச் சென்றபோது அந்தப் பக்கம் வந்த ஸ்டீவென்சன், காரணத்தைக் கேட்டுவிட்டு தன்னை தற்கொலை செய்யாமல் இருக்க அறிவுரை பகன்றதாகவும் அதனால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றும் நன்றியுடன் சொன்னார்.
“நன்றி மறப்பது நன்று அன்று” — என்பதற்கு பழங்குடி இன மக்களும் இந்த ஸ்காட்ஸ்மேனும் எடுத்துக் காட்டுகள்!
You must be logged in to post a comment.