
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9448
Date uploaded in London – –2 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி (SIS, LONDON) சார்பில் மார்ச் 27 சனிக்கிழமையன்று (27-3-2021) அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சொற்பொழிவு ஆற்றினார். ZOOM (ஸும்) வழியாக நடந்த இந்த உபன்யாசத்தில் நிறைய உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடல்மடை திறந்தார் போல சொல்லாட்சி இருந்தது. அக்ஷர லக்ஷம் பெறு ம் என்னும் முது மொழிக்கேற்ப உரை முழுதும் அமைந்தது செ விக்கினிய விருந்தாக இருந்தது. ஆழ்வார் பாசுரங்களையும் கம்பனின் ராமாயணச் செய்யுட்களையும் வால்மீகி ராமாயண, வேதாந்த தேசிக சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுடன் அளித்தது கேட்போரின் அறிவை விசாலமாக்கின.

ராமாயணம் என்பது “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற மாபெரும் உண்மையை விளக்க வந்தது. இதை “பித்ரு வாக்ய பரிபாலனம்” என்பர்; ஆயினும் அதில் முத்தாய்ப்பாக அமைந்தது விபீஷண சரணாகதிதான் என்று சொல்லி ‘ராம வைபவம்’ என்ற தலைப்பில், அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் சொற் பொழிவாற்றினார்.
***
அதிதி என்பவர் யார்?
அவருடைய பிரசங்கத்திலிருந்து, முதலில் நம்மில் பெரும்பாலோர் அதிகம் கேள்விப்படாத மூன்று விசஷயங்களைச் சொல்கிறேன் .
அதிதி என்ற சொல்லுக்கு மூன்று விளக்கம் கொடுத்தார் .
திதி என்றால் நாள். அதிதி என்றால் இந்த நாள் தான் வருவேன் இரு சொல்லிவிட்டு வருபவர் அல்ல (அ +திதி)
அதிதி என்றால் இந்த நாள் நான் திரும்பிப் போவேன் என்று சொல்லமாட்டார். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கக்கூடியவர் என்ற பொருள் அதில் தொனிக்கிறது.
அதிதி என்றால் ஒரு நாளைக்கு மேல் ஒரு வீட்டில் தங்க மாட்டார். இதைச் சொல்லிவிட்டு இதைத்தான் நாம் பெரும்பாலோர் விரும்புவோம் என்று நகைச் சுவை ததும்ப விளக்கினார்.
(அடைப்புக்குறி க்குள் உள்ளது என் கருத்து: அதிதி தேவோ ப வஹ என்று விருந்தாளியையும் தேவருக்குச் சமமாகக் கருதும் ஒரு பண்பை இந்து மத நூல்கள் மட்டுமே விளம்புகின்றன. சீதையும் கண்ணகியும் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று நான் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கும் பாக்கியத்தை (Hospitality) இழந்து விட்டேனே என்பதாகும் ; அது மட்டுமல்ல கிரேக்க, சுமேரிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் இதை ஒரு தர்மமாகவோ கடமையாகவோ சொல்லவில்லை. ஆனால் நமது மத நூல்களில் மட்டும் சொல்லப்பட்ட பஞ்ச மஹா யக்ஞத்தை தெய்வப் புலவர் திருவள்ளுவரும் தென்புலத்தார் , தெய்வம் விருந்து …… என்ற குறளில் விளம்புகிறார்.)
***
பராசரர் அழுதது ஏன் ?
பஞ்சாங்க படனம் என்னும் பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கத்தை எல்லோரும் அறிவர். அந்தக் காலத்தில் மன்னர்களின் அரண் மனைக்குச் சென்று அந்தணர்கள் தினமும் வாசித்தார்கள். இதே போல கோவில்களிலும் பெருமாளுக்கு முன்னர் பஞ்சாங்கம் வாசிப்பார்கள் . ஸ்ரீரங்கத்தில் இந்தப் பணியைச் செய்தவர் பராசரர் என்பவர் ஆவார் .கூரத்தாழ்வாரின் குமாரர். அவரைப் பஞ்சாங்கம் வாசிப்பதற்காக, அதிகாலைப் பொழுதில் கோவில் பட்டர்கள் வந்து அழைத்துச் செல்வர். ஒரு நாள் பட்டார்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்களே காரணத்தையும் சொன்னார்கள். கோவில் கோபுர வளாகத்துக்குள் ஒரு நாய் நுழைந்துவிட்டதால் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் அந்த சடங்குகளால் தாமதம் ஏற்பட்டதற்கு க்ஷமிக்க (Pardon us) வேண்டும் என்றும் பகர்ந்தனர் . பராசர பட்டர் கோவிலுக்குள் பஞ்சாங்கம் வாசிக்கும் பொழுது அழுது கொண்டே வாசித்தார். இதைக் கண்டு கவலையடைந்த மற்ற பட்டர்கள் காரணத்தை வினவியபோது ஒரு நாய் நுழைந்ததற்கு கோவிலையே சுத்தத்தம் செய்தீர்களே , இந்த நாய் தினமும் இறைவன் அருகில் நின்று பஞ்சாங்கம் வாசிக்கிறதே என்று நினைத்து அழுதேன் என்றாராம். அவ்வளவு பணிவு.
(அடைப்புக் குறிக்குள் உள்ளது என் கருத்து- ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது ஆன்றோர் மொழி . அப்படிப்பட்ட திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசக சுவாமிகளும் ஏராளமான பாடல்களில் தன்னை ‘நாயேன்’ என்று குறிப்பிடுகிறார்.. எல்லாவற்றையும் எப்போதும் விரும்புவது நாய். ஆகையால் ஆசை உடைய அனைவரும் நாய்தான். ஆனால் மாணிக்க வாசகர், பராசரர் போன்றோர் இப்படிச் சொல்லுவது நம்மைப் பிரதிநிதிப்படுத்தவே என்பது உரைகாரர்களின் — பாஷ்யக்காரர்களின் கருத்து- அதாவது நம்மைப் போன்ற எளியோருக்காக இரங்கி நமக்கும் அருளைப் பெற்றுத்தரவே இந்த சொற்பிரயோகம்) .
***
அனுமார் வைகுண்டம் போகாதது ஏன் ?
ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்- ராமன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது தன்னுடைய பக்தர்கள் அனைவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றான். ஆனால் கிருஷ்ணன் இறந்தபோது தான் மட்டும் சென்றான். தன்னுடைய நெருங்கிய உறவினர், தோழர்கள் ஆகியோரை அழைத்துச் செல்லவில்லை ராமனுடன் எல்லோரும் வைகுண்டம் செல்ல ஆசைப்பட்டனர். அனுமார் மட்டும் செல்ல விரும்பவில்லை. காரணம் என்ன வென்று கேட்டபோது நீங்கள் வைகுண்டம் போனபின்னர் நீங்கள் மஹாவிஷ்ணுவாகவும் அன்னை சீதாபி ராட்டியார் லெட்சுமியாகவும் காட்சி தருவார். நான் பார்க்க விரும்புவது ராமர்- சீதை வடிவழகையே என்று கூறிவிட்டார். அவ்வளவு ராம பக்தி. ராமாயணத்தில் பிரதிபலன் எதிர்பாராமல் சேவை செய்த ஒரே கதா பாத்திரம் அனுமனே என்றார் அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் .
XXXX
உபன்யாசம் நெடுகிலும் அவர் காட்டியவற்றில் சில மேற்கோள்களை மட்டும் தொட்டுக்காட்டுகிறேன் :-
1.கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நம்மாழ்வார்
2.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் – கம்பன்
3.அனுமன் பற்றி
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
4.’மனதிற்கினியானை’ என்று ஆண்டாள் கண்ணனைக் கூட சொல்லவில்லை . இராமனைத்தான் அப்படி போற்றுகிறாள்.
5.விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் ‘பரம ஸ்பஷ்ட துஷ்டப் புஷ்ட சுபேக்ஷணா த் ராமஹ’ – என்று வருகிறது .
6.’இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று தொண்டரடிப்பொடியார் சொல்வது போல ‘ராம’ என்பது சுவை மிக்க மந்திரம்..
–SUBHAM–

tags- அக்கரைக்கனி, சக்கரைக்கட்டி , South Indian Society, ஸ்ரீநிதி சுவாமிகள்