இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள் – அரசியல் சட்டங்கள் – ஒப்பீடு -2 (Post No.8262)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8262

Date uploaded in London – – –30 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒப்பீடு – இரண்டாம் கட்டுரை!

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு -2

ச.நாகராஜன்

ஸ்ரீலங்கா

நமக்கு மிக அருகில் இருக்கும் குட்டி நாடு ஸ்ரீ லங்கா. ஒரு குட்டித் தீவு, ஆனால் பழம் பெரும் பாரம்பரியத்தையும் இந்தியாவுடனான நீண்ட நெடுங்கால உறவையும் கொண்டுள்ள ஒரு நாடு அது.

அதன் அரசியல் சட்டத்தின் முகவுரை (Preamble) ஒரு பக்கத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

அதனுடைய தலைப்பு ஸ்வஸ்தி என்பதாகும்.

“பற்பல தலைமுறைகளாக உணர்ந்தறிய முடியாதபடி உள்ள தொடர் பாரம்பரியத்தை (intangible heritage .. for succeeding generations)” அது சுட்டிக் காட்டுகிறது.

தனது மக்களுக்கு “அவர்களின் வீரதீர மற்றும் திருப்பிச் செலுத்த முடியாத போராட்டங்களை நினைவு கூர்ந்து” (while gratefully remembering their heroic and unremitting struggles) செய்ய வேண்டிய கடமையை அது சுட்டிக் காட்டுகிறது.

புத்த மதத்தை முதலிடத்தில் அது வைக்கிறது. அரசு புத்தமதத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கும் என்று அது கூறுகிறது.

ஸ்ரீ லங்காவின் தேசிய கீதம் ஸ்ரீ லங்கா மாதா என்கிறது.

இப்போது நமது அரசியல் சட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஸ்வஸ்தி வாசனம் என்பது இந்தியாவிற்கே உரித்தான ஒன்று.

ஸ்வஸ்தி ஸ்ரீ என்று தான் நமது மன்னர்களின் கல்வெட்டுக்கள் ஆரம்பிக்கும்.

ஓம் என்ற மந்திரம் நமக்கே உரித்தானது.

நமது அரசியல் சட்டத்தின் ஆரம்பமாக ஓம் ஏன் இல்லை? (அல்லது ஸ்வஸ்தி ஸ்ரீ என்று ஏன் ஆரம்பிக்கவில்லை?!)

திருப்பிச் செலுத்த முடியாத, அபாரமான வீரர்களைக் கொண்ட நாடாக ஸ்ரீ லங்கா இருந்து அதன் பழம் பெரும் பாரம்பரியத்தை எவ்வளவு அழகாக அது அரசியல் சட்டத்தின் ஒரு பக்கத்திற்கும் குறைவான முன்னுரையில் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

நமது அரசியல் சட்டத்தில் நமது பாரம்பரிய மிக்க வீரர்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை.

ரிஷிகள், இராமர், கிருஷ்ணர், அர்ஜுனன், தர்மர், பீஷ்மர் என் அவதார புருஷர்களுக்கும், மகான்களுக்கும், வீரர்களுக்கும் பஞ்சமா என்ன இந்த நாட்டில்?

சந்திரகுப்தன், சாணக்கியன், ராஜ ராஜ சோழன், திருவள்ளுவர் போன்ற அற்புதமான மாமன்னர்களுக்கும், அறிஞர்களுக்கும் பஞ்சமா இந்தியாவில்!

இந்தப் பழம் பெரும் பாரம்பரியமிக்க மகான்களை, அறிஞர்களை, வீரர்களை மா மன்னர்களை ஒரு சொல்லிலாவது  நன்றி கூறி, பாராட்டி அவர் வழி நடப்போம் என்று சொல்லக் கூடாதா?

புத்த மதம் போற்றுவோம், புத்த சாஸனம் போற்றுவோம் என்று சொல்லி விட்டதால் ஸ்ரீ லங்கா பத்தாம் பசலித் தனமான கொள்கை உடைய நாடாக ஆகி விட்டதா, அப்படித்தான் இன்றைய உலகத்தினர் அதை எள்ளி நகையாடுகிறார்களா?

மாபெரும் புத்தர் நாடு என்றல்லவா அதைப் புகழ்கிறார்கள்!

இந்தியாவை எடுத்துக் கொண்டால் வசிஷ்டரிலிருந்து விவேகானந்தர் வரை எத்தனை ஆயிரம் மஹாபுருஷர்கள்!

அவர்களைப் போற்றுவோம் என்று ஒரு சொல் கூட ஏன் இல்லை!

பண்டைய பழம் பெரும் பாரம்பரியம் நமக்கு இல்லையா அல்லது 15, ஆகஸ்ட், 1947இல் தான் திடீரென்று இந்தியா தோன்றியதா?!

நேபாளம்

2007இல் ஒரு இடைக்கால அரசியல் சாஸனத்தை நேபாள் மேற்கொண்டது.

அது ஒரு ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையை, இல்லை, இல்லை, உலகின் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது செகுலர் தேசமாக மாறியது.

ஒரு சுவையான தகவல் என்னவெனில் இந்தியா தவிர செகுலர் என்ற வார்த்தையை அரசியல் சாஸனத்தில் கொண்டுள்ள இன்னும் ஒரு நாடு நேபாளம் தான்! (ஆனால் கடைசியாகக் கிடைக்கும் உறுதியாகாத தகவலின் படி அது மீண்டும் ஒரே ஹிந்து ராஷ்டிரம் என்ற பெருமையைப் பெறலாம்)

என்றாலும் கூட நேபாளம் தேவநாகரியை அது தனது அதிகாரபூர்வமான எழுத்தாக அறிவித்துள்ளது!

அது மட்டுமல்ல, பசுவை தேசீய விலங்காக அது அறிவித்துள்ளதோடு அதைப் போற்றிப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க இலக்கிய வளம் செழித்த சம்ஸ்கிருதம் என்ன ஆனது? கோடானுகோடி ஹிந்துக்கள் காலம் காலமாகப் போற்றி வழிபடும் பசுவைப் போற்றக் கூடாதா, அரசியல் சட்டத்தில்?!

குறைந்த பட்சம் அதன் வதையையாவது தடுக்கக் கூடாதா?

சிந்திக்க வேண்டும்!

***