ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 1 (Post No.10118)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,118

Date uploaded in London – 21 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

ஸ்ரீ காமாக்ஷி தேவியையும் அருணாசல சிவனையும் ஸ்ரீ ராமரையும் போற்றி பெரும் தபஸ்வியாக இருந்து அனைவருக்கும் அருள் பாலித்த பெரும் மகான்

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!

தர்மக்ஷேத்ரம் என்றும் ப்ரஹம புரம் என்றும் போற்றப்படும் கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகரில் ஆதி சங்கர பகவத்பாதர் காமாக்ஷி அம்மனைத் தொழுது வழிபட சில நடைமுறைகளை வகுத்து அதைத் திறம்படச் செய்ய நர்மதை நதிக்கரையில் வசித்து வந்த 30 குடும்பங்களை காஞ்சிக்கு அழைத்து வந்தார். அந்தக் குடும்பங்கள் வழிவழியாக இந்த பூஜாமுறைகளை நடத்தி வந்தனர். இந்தக் குடும்பங்களுள் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள்  என்பவர் பெரும் புக்ழ் பெற்றவராக இருந்தார். இவரது தமையனார் சிதம்பர சாஸ்திரிகளின் பெண்ணான மரகதத்தை காமாக்ஷியின் அம்சம் என்றே இவர் கருதினார். மரகதம் தனது 12வது வயதிலேயே சாஹித்ய சங்கீத கலாநிதி என்ற பெரும் பட்டத்தைப் பெற்றார். அவருக்குத் திருமண வயது ஆகவே காமகோடி வம்சத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த வரதராஜர் என்பவரை அவர் மணந்தார். வரதராஜர் ஸ்ரீவித்யா சித்தி பெற்றவர். இந்த தம்பதியருக்கு மகனாக உத்தரமேரூர் அருகில் உள்ள வாவூர் கிராமத்தில் 1870 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி – தைமாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் – சேஷாத்ரி ஸ்வாமிகள் அவதரித்தார். சனிக்கிழமை பிறந்ததால் அவருக்கு சேஷாத்ரி என்று பெயர் சூட்டப்பட்டது.

இளவயதில் ஒரு நாள் மரகதம் தனது நான்கு வயதான சேஷாத்ரியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். வரதராஜ பெருமாள் உற்சவம் நிகழ இருப்பதால் வியாபாரிகள் தாங்கள் செய்த பொருள்களை கூடையில் வைத்து விற்பனைக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நவநீத கிருஷ்ணனின் வெங்கலச் சிலை வார்ப்புகளை ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேஷாத்ரி அந்த குவியலின் மீது தன் கையை வைத்தார். அந்த பொம்மைச் சிலைகளில் ஒன்றை சேஷாத்ரி எடுத்துக் கொண்டார். இரண்டனா பெறுமானம் உள்ள  அந்தச் சிலைக்கு பணத்தை மரகதம் தரவே அதைப் பெற வியாபாரி மறுத்து விட்டார். மறுநாள் மரகதம் குழந்தையுடன் அதே பாதையில் செல்லும் போது முதல் நாள் கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த அந்த வியாபாரி மரகதம் முன்னால் நமஸ்காரம் செய்து சேஷாத்ரியின் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். ‘தங்கக் கை, ‘தங்கக் கை’, என்று கூவினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

#விஷயம் என்னவெனில் சாதாரணமாக மிக குறைந்த அளவே விற்பனையாகும் அந்த பொம்மைகள் அன்று முழுவதும் விற்றுத் தீர்ந்தன என்பது தான். அன்றிலிருந்து அனைவரும் தங்கக் கை என குழந்தையை அழைக்க ஆரம்பித்தனர். இந்த கிருஷ்ணருக்கு ஸ்வாமிகள் நெடுங்காலம் பூஜை செய்து வந்தார். உரிய வயதில் சேஷாத்ரியின் நாக்கில் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகள் சரஸ்வத மஹாபீஜத்தையும் சரஸ்வத தசஸ்லோகி மந்திரத்தையும் தர்பை புல்லால் எழுதி அனுக்ரஹித்தார். அன்று பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்த சேஷாத்ரி ஸ்வாமிகள் மூன்றே வருடங்களில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். இசையைக் கற்று இசை மேதையானார். திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களையும் கசடறக் கற்றார். 15ஆம் வயதிற்குள் அவர் புகழ் எங்கும் பரவியது. வந்தவாசியில் அவர் ராமாயண கதாகாலக்ஷேபம் செய்ய மக்கள் மெய்ம்மறந்து அதைக் கேட்டனர். விதிவசத்தால், அவரது தந்தையும் ஸ்ரீ காமகோடி சாஸ்திரிகளும் இறைநிலையை எய்தினர்.

17ஆம் வயதில் அவரது அன்னையார் அவருக்கு மணம் முடித்து வைக்கத் தீர்மானித்தார். ஆனால் ஜோதிடரோ சேஷாத்ரி பெரும் யோகி என்றும் அவர் சந்யாசி ஆவார் என்றும் தீர்க்கமாகக் கூறி விட்டார். இதனால் பெரிதும் வருத்தமுற்ற மரகதம் ஒரு நாள் அவரை அழைத்து ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வ்ம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சலதத்வே ஜீவன் முக்தி என்பதை மும்முறை சொல்லி அவர் மார்பைத் தட்டிக் கொடுத்தார். ‘அம்பா சிவே’ என்ற கீர்த்தனையையும் அவரைப் பாடச் சொன்னார். ‘அருணாசலா, அருணாசலா’ என்று கூவியவாறே சேஷாத்ரி ஸ்வாமிகளின் மடியில் அவர் உயிரைத் துறந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் சுதந்திர புருஷராக அலைய ஆரம்பித்தார். அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் கர்மாவைத் தீர்க்க ஜபம் செய்வதாக கூறுவார். ஒரு லட்சம் தடவை மந்திரத்தைச் சொல்லி விட்டதாகவும் இன்னும் அரை லட்சம் தான் பாக்கி என்றும் அவர் கூறினார். கோவிலில் அவரை சுற்றமும் நட்பும் தொந்தரவு செய்யவே மயானத்திற்குச் சென்று ருத்ர பூமியான அங்கு தனது தியானம் உள்ளிட்டவற்றைச் செய்யலானார்.

தனது  மாமாவிற்கு எண்ணெய் தேய்த்து விடுவது அவரது வழக்கம். ஒரு நாள் அப்படிச் செய்யும் போது திடீரென்று வானத்தைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்து மீண்டும் வந்து எண்ணெயை எடுத்தார். ‘அங்கே வானத்தில் என்ன பார்த்தாய்’ என்று கேட்டார் மாமா. “அதோ அங்கு தேவதைகள் சென்று கொண்டிருக்கின்றனர், அதைப் பார்த்தேன்”  என்றார் அவர். ‘அவர்களுடன் கந்தர்வர்கள் சிலரும் செல்கின்றார்களோ’ என்று கிண்டலாக மாமா கேட்க, ‘ஆமாம் ஆமாம் கந்தர்வர்களும் பாடிக் கொண்டே செல்கின்றனர்’ என்றார் சேஷாத்ரி. ‘ஆஹா, என்ன ராகமோ’ என்று கேட்க ‘பிலஹரி ராகம்’ என்றார் சேஷாத்ரி. இதனால் திடுக்கிட்ட மாமா, ‘அவர்கள் எங்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை’ என்று கேட்க, ‘கர்மாவை முழுவதும் கழித்தவர்களின் கண்களுக்கே அவர்கள் தோன்றுவர்’ என்றார் சேஷாத்ரி.

ஒரு நாள் பாலாஜி ஸ்வாமிஜி என்பவர் ஹரித்வாரிலிருந்து ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டு வந்தார். அவரை சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்துக் கண்களில் நீராய் பொழிந்தார். ‘மாஷுச மாஷுச வருந்தாதே, வருந்தாதே’ என்றார் அவர். ஆறு நாட்கள் அவருக்குச் சேவை செய்தார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரது பக்குவ நிலையைக் கண்ட பாலாஜி அவருக்கு சந்யாச தீக்ஷையை அளித்தார். அன்றிலிருந்து அவர் சந்யாசியானார். காஞ்சியில் சிறிது நாட்கள் தங்கிய பின்னர் காவேரிப்பாக்கம் சென்றார். இது காஞ்சிக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமம். பின்னர் திண்டிவனத்தில் சிலர் அவரைப் பார்த்தனர். பின்னர் 1889ஆம் ஆண்டு தை மாதம் ரத ஸப்தமி அன்று திருவண்ணாமலையை வந்து அடைந்த ஸ்வாமிகள் அங்கேயே இருக்கலானார்.



Miracles of Sri Seshadri Swamikal | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/06/20 › miracles-of-s…

20 Jun 2014 — Ramana is known to all spiritual aspirants around the world. But Seshadri Swami is not known to many outside Tamil Nadu. His life was full of …

tags — சேஷாத்ரி , ஸ்வாமிகள்,seshadri swamikal, ஸ்ரீ,

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1 (Post No.9986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9986

Date uploaded in London –  17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 16-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். மந்த்ராலயத்தில் இன்றும் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கும் பெரும் மஹானான ஸ்ரீ ராகவேந்திரரைப் பற்றி இன்று காணப் போகிறோம். லக்ஷக்கணக்கான மக்களை இன்று வரை மந்த்ராலயத்திற்கு ஈர்த்து அருள் பாலித்து வரும் இவரது சரிதம் அற்புதமான ஒன்று.

கி.பி.1595ஆம் ஆண்டு பால்குண மாதம், சுக்லபக்ஷ, சப்தமி திதியில் தமிழகத்தில் சிதம்பரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவனகிரியில் மத்வ சம்ப்ரதாய பிராமண குலத்தில் கௌதம கோத்திரத்தில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார்  ஸ்ரீ ராகவேந்திரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். குடும்பமோ வறுமை சூழ்நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த பட்டர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே வித்யாமடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சுதீந்திரர் அந்தக் குடும்பத்தை அன்போடு வரவேற்றார். வேங்கடநாதனைப் பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. நமது மடத்தின் அடுத்த பீடாதிபதி வேங்கடநாதனே என்று அவர் மனதில் தீர்மானம் உருவாயிற்று. ஸ்ரீ மடத்தில் மூலராமருக்கு தினமும் சுதீந்திரர் செய்யும் பூஜையை லயிப்புடன் கவனித்து வந்தார் வேங்கடநாதன். உரிய வயதிலே சரஸ்வதி என்ற மங்கையை அவருக்கு மணம் முடித்து வைத்தனர் பெற்றோர். வறுமை நீங்காத நிலையில் தன் மனைவியுடன் ஸ்ரீ மடத்தில் அடைக்கலம் புகுந்தார் வேங்கடநாதன்.

வேங்கடநாதனின் பக்தியையும் இறைத்தன்மையையும், அவர் பாடங்களை கிரகித்து உள்வாங்கிக் கொண்ட பான்மையையும் அவரது மேதைத் தன்மையையும் கவனித்து வந்த சுதீந்திரர் அவரின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டார். இதனால் சுதீந்திரரரிடம் அவருடன் பயின்று வந்த மற்ற சிஷ்யர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு நாள் மத்வாசாரியரின் பிரம்ம சூத்ரத்தின் பாஷ்யத்தைப் பற்றி சுதீந்திரர் விளக்க ஆரம்பித்தார். இந்த பாஷ்யத்தின் விளக்க உரையாக ஸ்ரீ ஜயதீர்த்தர் என்பவர் நியாயசுதா என்ற நூலை இயற்றினார். ஸ்ரீ ஜயதீர்த்தரின் நியாயசுதாவின் பெருமையை விளக்க ஆரம்பித்த சுதீந்திரர் திடீரென்று தனது உரையை நிறுத்தினார். அவரால் மேலே தொடரமுடியவில்லை. ‘இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருளினார் சுதீந்திரர். அன்றிரவு சுதீந்திரர் தன்னால் எளிய விதத்தில் விளக்கவுரையை ஆற்ற முடியவில்லையே என்று எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சிந்தனையில் ஆழ்ந்தவாறே வெளியில் சற்று சென்று வரலாம் என்று எண்ணிய அவர் சிஷ்யர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க வேங்கடநாதனை மட்டும் காணோம். அவர் தன் பார்வையை எல்லா திசைகளிலும் செலுத்த  அங்கு தூரத்தில் வேங்கடநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அருகில் ஓலைச்சுவடிகள் பல இருந்ததையும் அவர் கண்டார். மெதுவாக அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்தவர்,. திகைத்துப் போனார். அன்று அவரால் விளக்க உரை செய்ய முடியாமல் இருந்த நியாய சுதா ஸ்லோகங்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக எளிமையாக எழுதி இருந்தார் வேங்கடநாதர். அந்த சுவடிகளை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் மீண்டார் சுதீந்திரர்.மறுநாள் காலையில்  வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் குழுமிய போது சுதீந்திரர் வேங்கடநாதன் எழுதிய ஓலைச் சுவடிகளைக் காண்பித்து தன்னால் விளக்க முடியாமல் இருந்த ஸ்லோகங்களுக்கு வேங்கடநாதன் எழுதிய உரையை விவரித்தார். அனைத்து சக மாணவர்களும் அதிசயித்துப் போயினர். இப்படிப்பட்ட பரிமள சுகந்தம்  வீசும் இந்த உரைக்கு ‘ஸுதா பரிமளம்’ என்ற பெயரைச் சூட்டுகிறேன். இதை இயற்றிய வேங்கடநாதனுக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறேன் என்றார். அனைவருக்கும் வேங்கடநாதனின் பெருமை புரிய வந்தது.

ஒரு முறை கும்பகோணத்தில் நடந்த ஒரு விருந்திற்கு வேங்கடநாதர் அழைக்கப்பட்டார். விருந்தை அளித்தவருக்கு அவரது பெருமை தெரியாது. அவரை சந்தனம் அரைத்துத் தருமாறு கூறினார். சந்தனம் அரைக்கப்பட்ட பின் அனைவருக்கும் அது தரப்பட்டது. ஆனால் அதை பூசிக் கொண்ட விருந்தினர்கள் குளிர்ச்சியை அனுபவிப்பதற்கு பதில் ‘ஆ, எரிகிறதே எரிகிறதே’ என்று உடல் எரிச்சலால் அலறினர். இதனால் ஆச்சரியப்பட்ட விருந்தை அளித்தவர், வேங்கடநாதரை அழைத்துக் காரணம் கேட்க தான் சந்தனத்தை அரைத்த போது அக்னி சூத்ரத்தை ஜபித்ததாகவும் அதன் பயனாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே வருண மந்திரத்தைக் கூறியவாறே சந்தனத்தை அரைத்து அதைத் தந்து அனைவரையும் பூசிக் கொள்ளச் சொன்னார். இப்போது அது மிக்க குளிர்ச்சியைத் தந்தது. விருந்தினர்கள் மகிழ்ந்தனர். அத்துடன் வேங்கடநாதரின் புகழ் எங்கும் பரவியது.

     வேங்கடநாதரை மடத்தின் பொறுப்பை ஏற்குமாறு சுதீந்திரர் கூறியருளினார். ஆனால் அவரோ குடும்பப் பற்றால் அதை ஏற்க மறுத்தார். இதனால் சுதீந்திரர் ஸ்ரீ யாதவேந்திரர் என்பவரை பூஜை செய்ய நியமித்து தனது இளவலாக நியமித்தார். காலம் சென்றது. ஒருநாள் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்றியது. ஸ்ரீ யாதவேந்திரரும் அருகில் இல்லை.

அடடா, காலம் காலமாகச் செய்து வரும் மூலராமரின் பூஜைக்குத் தடை வந்து விடுமோ என்று கவலைப்பட்டார் சுதீந்திரர். அன்று இரவில் அவர் கனவில் மூலராமர் தோன்றி, “உனக்குப் பின் அர்ச்சனை செய்ய தகுதியானவர் வேங்கடநாதனே” என்று கூறியருளினார். இதனால் மகிழ்ந்த சுதீந்திரர் மறுநாள் வேங்கடநாதனிடம் தன் கனவில் மூலநாதர் அருளிச் செய்த உரையைக் கூறி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

     வேங்கடநாதர் சற்றுத் தயங்கினார். அன்றே சரஸ்வதி தேவி அவரது கனவில் தோன்றி அவர் யார் என்பதை விளக்கியருளினாள். பிரம்ம லோகத்தில் பாகவத சேவையில் ஈடுபட்டிருந்த சங்குகர்ணனே உலக நன்மையைக் கருதி ஒரு சாபத்தினால் கிருதயுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து பக்தியின் பெருமையை நிலை நாட்டினார். அடுத்து துவாபர யுகத்தில் பாஹலீக மன்னனாகப் பிறந்து விஷ்ணு பக்தனாக இருந்து பக்தியின் பெருமையை உலகறியச் செய்தார். அடுத்து கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து கிருஷ்ணதேவராயரின் அரச சபையை அலங்கரித்தார். இப்போது மக்களின் துயரம் நீங்க வேங்கடநாதனாகப் பக்தியின் பெருமையை அவர் நிலை நாட்டப் பிறந்துள்ளார்.

     தான் யார் என்பதை அறிந்த வேங்கடநாதர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சுதீந்திரர் கூறியதற்கு உடனே ஒப்புக் கொண்டார். தன் மகனான லக்ஷ்மிநாராயணனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தை முடித்து விட்டு வருவதாக கூறி தனது கடமையை முடித்தார். மீண்டும் மடத்திற்கு வந்த அவருக்கு தஞ்சாவூரில் 1621ஆம் ஆண்டு பால்குன மாதம் சுக்கில பக்ஷம் துவிதியை திதி அன்று சுதீந்திரர் சந்யாசம் அளித்து ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

         *     தொடரும்

 tags – மந்த்ராலய மஹான்,  ஸ்ரீ,  ராகவேந்திரர், மந்த்ராலயம் 

திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480)

73ed7-shri

Research Article Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  6-01 AM

 

Post No.3480

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

9cf2c-shri-ganesh

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

 

ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.

 

‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.

 

இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.

 

ஆங்கிலத்தில் ஸர் SIR  பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

74595-sri

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர்.  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!

 

மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.

 

இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:

ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.

 

திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-

 

ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

d6814-shri-symbol-svg

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.

 

திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்

 

–Subham–