ராமாயணம் தோன்றியது எப்படி? அற்புதமான கதை

rama rama
Post No 1015; Date 2nd May 2014.

எழுதியவர் ச.நாகராஜன்
ராமாயண வழிகாட்டி- அத்தியாயம் 26

சிலேடைக் கவிதையில் ராமாயண உதயம்!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

ramachandra swami

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!
சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

rama flowering sita

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I
ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

அப்போது வால்மீகி முனிவரைப் பார்க்க தாமே வந்த பிரம்மாவை அவர் உபசரித்து வரவேற்றார். ஆனாலும் மனதிலே க்ரௌஞ்ச பக்ஷியைப் பற்றிய எண்ணம் அவருக்கு இன்னும் போகவில்லை.
பிரம்மா அவர் எண்ணத்தை அறிந்து சிரித்தார்.பிறகு கூறினார்:-

kothanda raman

மச்சாந்தாதேவ தே ப்ரஹ்மண் ப்ரவ்ருத்தேயம் சரஸ்வதி I
ராமஸ்ய சரிதம் சர்வ குரு த்வம்ருஷிசத்தம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியிரண்டாம் ஸ்லோகம்

ப்ரஹ்மன் – பிராம்மணரே தே – உம்முடைய இயம் சரஸ்வதி – இந்த வாக்கானது மச்சாந்தாத் ஏவ – என்னுடைய அபிப்ராயத்தினாலேயே ப்ரவ்ருத்தா – உண்டானது ருஷிசத்தம – முனி ச்ரேஷ்டரே த்வம் – நீர் ராமஸ்ய சரிதம் –ராமருடைய சரித்திரத்தை சர்வம் – முழுவதையும் குரு – செய்யும்.

இவ்வாறு ராம சரிதத்தை முழுவதுமாகச் செய்ய பிரம்மா அருளுரை புகல ராமாயணம் உருவானது. வால்மீகி முனிவருக்கு உலகம் உய்ய வேண்டும் என்ற பிரம்மாவின் சங்கல்பம் மகிழ்ச்சியைத் தரவே அற்புதமான காவியத்தை உள்ளது உள்ளபடி செய்தார்.

உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

Golden_Globe_awards_logo

மஹீதலே – உலகத்தில் கிரய: – மலைகளும் சரிதஸ்ச – நதிகளும் யாவத் – எதுவரைக்கும் ஸ்தாஸ்வந்தி – இருக்குமோ தாவத் – அதுவரை ராமாயணகதா – ராமாயண கதை லோகேஷு – உலகங்களில் ப்ரசரிஷ்யதி –விளங்கப் போகின்றது.

வால்மீகி முனிவரின் இந்த ஆதி காவியம் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமேது! இதைப் படிக்கும் பேறு பெற்றோரின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் அல்லவா!!

contact swami_48@yahoo.com