ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 1 (Post No.7591)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7591

Date uploaded in London – 19 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 1

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

அவற்றில் சில:

நாத்திகப் பெண்மணி மாறினார்

அமெரிக்காவில் இருந்த போது ஒவ்வொரு நாள் மாலையும் அமெரிக்கர் அவர் இருந்த இடத்தில் குழுமி அவரது உரைகளைக் கேட்பது வழக்கம்.

நாத்திக சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவரை நாத்திகராக மாற்றி தனது பக்கம் சேர்க்க நினைத்தார்.

அவரைச் சந்திக்கச் சென்ற போது அவர் சமாதி நிலையில் இருந்தார். அவருக்கு முன்னால் அந்தப் பெண்மணி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழிந்தது. ராமதீர்த்தர் கண் விழித்தார்.

அந்தப் பெண்மணி, “அட, கடவுளே! நான் இனி நாத்திகவாதி இல்லை. உங்களது ஒரு சின்ன பார்வை என்னை மாற்றி விட்டது” என்று கூவினார்.

அந்தப் பெண்மணி அன்றிலிருந்து ஆத்திகவாதியாக மாறினார்.

விறகு வெட்டி உழைத்த சம்பவம்

சாஸ்தா நீரூற்றில் (Shasta Springs) என்ற இடத்தில் அவர் தங்கி இருந்த போது அவர் தான் தங்கி இருந்த வீட்டாருக்கு ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. தனது பங்கிற்குச் சிறிது உழைப்பையும் தர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே மலையிலிருந்து விறகுகளை வெட்டிக் கொண்டு வந்து வீட்டிற்குத் தருவார். அவர் தங்கி இருந்த இடம் டாக்டர் ஹில்லர், திருமதி ஹில்லர் (Dr Hiller and Mrs Hiller) ஆகியோருக்குச் சொந்தமான வீடு. அவர்கள் ராமதீர்த்தரைத் தங்களுடனேயே அமெரிக்காவிலேயே வசித்து விடுமாறு வேண்டினர்.

சாஸ்தா நதியில் தவம்!

ஸ்வாமி ராமதீர்த்தர் எப்போதுமே தனிமையையே விரும்பினார்.

சாஸ்தா நதிக்கரையோரம் அவருக்கென ஒரு சிறிய தொங்கு படுக்கை (Hammock) அமைக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கு அமர்ந்து அவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். வேதாந்த பிரசாரம் என்றால் மட்டும் உற்சாகமாக அதிலிருந்து வெளியே கிளம்பி கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றுவார். பொங்கி வரும் சாஸ்தா நதிக்கரையோரம் அமைந்த தொங்குபடுக்கையில் இருந்ததைப் பற்றி அவர் கூறினார் இப்படி :- ‘அமெரிக்க ஜனாதிபதியை விட பறவைகளுடன் இருந்த அவருக்கு அதிக சந்தோஷம் இருந்ததாம்’ (‘In tune with his birdies, feeling happier than the President of all the United States’)

சாஸ்தா மலை சிகரம் ஏறும் போட்டி!

ஒரு முறை சில அமெரிக்கர்கள் சாஸ்தா மலை சிகரத்தில் யார் முதலில் ஏறுவது என்ற போட்டியை அமைத்து அவரையும் பங்கு கொள்ள அழைத்தனர். சாஸ்தா மலை கடல் மட்டத்திலிருந்து 14,444 அடி உயரம் கொண்டது. உற்சாகமாக அதில் கலந்துகொண்ட ஸ்வாமி முதல் பரிசை வென்றார். என்றாலும் கூட பரிசைப் பெற அவர் மறுத்து விட்டார். இதைப் பற்றி எழுதிய பத்திரிகளைகள் பெரும் விற்பனைக்குள்ளாயின. அந்தப் பத்திரிகைகள் அவர் முதல் பரிசை வென்றும் கூட அதை வாங்க மறுத்ததை விவரமாக எழுதி வெளியிட்டன.

30 மைல் மாரதான் ரேஸ்!

இன்னொரு சமயம் 30 மைல் தூரம் ஓடும் மாரதான் ரேஸ் (30 mile Marathon race) ஒன்று நடந்தது. அந்த ஓட்டப் பந்தயத்தில்  கலந்து கொண்ட ராமதீர்த்தர் முதலாவதாக வந்தார். அனைவரும் அதிசயித்தனர்!

கங்கா தந்த செல்வத்தை ஏற்கவில்லை

அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு ஸ்வாமி ராமதீர்த்தர் கங்கா என்று பெயர் சூட்டியிருந்தார். அந்த கங்கா என்ற பெண்மணி ஸ்வாமி ராமதீர்த்தரிடம் வந்து தனது வீடு, செல்வம், பெயர், புகழ் அனைத்தையும் அர்ப்பணித்ததோடு தன்னையும் அர்ப்பணித்தார். சந்யாசம் மேற்கொள்வதாகச் சொன்னார்.

ஆனால் ஸ்வாமியோ அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டி விட்டு அதை ஏற்கவில்லை.

வேதாந்தா காலனியை இந்தியாவிலேயே அமைக்க விரும்புவதாகவும் அமெரிக்காவில் அல்ல அவர் தெரிவித்தார்.

*

ஸ்வாமி ராமதீர்த்தரைப் பற்றி விரிவாக விளக்கி எழுதிய நூல் தமிழில் இல்லாதது ஒரு பெரும் குறை.

ஆங்கிலத்தில் பூரண் சிங் (Puran singh) எழுதிய வரலாறு அதிகாரபூர்வமான வரலாறு.

அடுத்து லக்னௌ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பி.பிரிஜ்நாத் சர்கா (P.Brijnath Sharga M.A., LL.B) எழுதிய Swami Rama His Life & Legacy என்ற நூல் ஏராளமான சம்பவங்களைத் தருகிறது. 720 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1936ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

அடுத்து பாரதீய வித்யா பவன் வெளியிட்ட வாழ்க்கை வரலாறும் குறிப்பிடத் தகுந்தது.

சுப்ரமண்ய சிவா ராமதீர்த்தரின் உரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக (அதைத் தமிழில் பற்பல ஆண்டுகளுக்கு முன்னம் படித்திருப்பதாக) ஒரு நினைவு இருக்கிறது.  

*

அடுத்து இன்னும் சில சம்பவங்களைக் காண்போம்