ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1(Post No.10,289)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,289

Date uploaded in London – –   2 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

பாரத தேசம் கண்ட மகான்களில் சமீப காலத்தில் வாழ்ந்து நடைமுறை வேதாந்தம் பற்றிய சிந்தனைகளை புது விதத்தில் பரப்பியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் முரளிவாலா என்னும் இடத்தில் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை தீபாவளி தினத்தன்று பண்டிட் ஹீரானந்த கோஸ்வாமி என்ற பண்டிதருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமி ராமதீர்த்தர். அவருக்கு தீர்த்த ராமர் என்று பெயரிடப்பட்டது. அவரது தாயார் அவர் பிறந்த ஒரு வருடத்தில் மறைந்தார். அவரது தமக்கை தீர்த்த தேவியும் அவரது அத்தை தர்மா கௌரும் அவரை வளர்த்தனர். கணிதத்தில் இயல்பாகவே அபார வல்லமையை அவர் பெற்றிருந்தார்.  லாகூரில் கவர்ன்மெண்ட் காலேஜில் கணிதத்தில் மாஸ்டர் டிகிரி வாங்கிப் பின்னர் அதே லாகூரிலேயே ஃபொர்மன் கிறிஸ்டியன் காலேஜில் (Forman Christina College, Lahore) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றலானார்.

1897ஆம் ஆண்டில் ஸ்வாமி விவேகானந்தர் லாகூருக்கு விஜயம் செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய அரும் பணியால் உலகம் முழுவதும் அவர் பெயர் புகழுடன் விளங்கிய நிலையில் அவரது லாகூர் விஜயம் ஸ்வாமி ராமதீர்த்தரை வெகுவாக அவர் பால் ஈர்த்தது. அவர் சந்யாசியாகத் தீர்மானித்தார். தனது இளம் மனைவியையும் மகனையும் துறந்து அவர் சந்யாச ஆஸ்ரமத்தை  1899ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று மேற்கொண்டார்.

சந்யாசி ஆனதால் அவர் ஒரு பொழுதும் காசைக் கையால் தொட்டதே இல்லை. அது மட்டுமல்ல, சந்யாச தர்மத்திற்கு உரிய வகையில் தனக்கென்று பெட்டி, படுக்கை, பொருள்கள் என எதையும் ஒரு போதும் அவர் கையில் கூட எடுத்துக் கொண்டு சென்றதே இல்லை.

அவரது அபாரமான சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தேஹ்ரியை ஆண்ட மஹராஜா கீர்த்திஷா பஹாதூர் அவரைத் தன் செலவில் 1902ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அனுப்பினார்.  ஜப்பானில் தனது சொற்பொழிவுகளால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்னர் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். இரு வருடங்கள் கழித்த பின்னர் 1904ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பெருத்த வரவேற்பு காத்திருந்தது. ஏராளமான இடங்களில் அவரைச் சொற்பொழிவாற்ற அனைவரும் அனைத்தனர். சிஷ்யர்களும் பெருகலாயினர்.  1906ஆம் ஆண்டில் நகர்ப்புறத்தில் வாழ்வதைக் குறைத்துக் கொண்ட ஸ்வாமி ராமதீர்த்தர் இமயமலைக் காட்டினுக்குள் சென்றார். அங்கேயே தங்கலானார். நடைமுறை வேதாந்தம் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான புத்தகத்தை எழுத வேண்டுமென முனைந்தார். ஆனால் அது முடியவில்லை.

கங்கையில் 17-10-1906ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தினார்.

அவர் பிறந்ததும் தீபாவளி தினத்தன்று; அவர் சந்யாச தர்மம் ஏற்றதும் தீபாவளி தினத்தன்று; ஜல சமாதி எய்தியதும் ஒரு தீபாவளி தினத்தன்று! இது ஒரு அதிசயம் அல்லவா?! முப்பத்திமூன்று வயது ஆவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் தன் உடலைத் தானே உகுத்து விட்டார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் உருது மொழியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் கடைசி பாராவில் அவர் எழுதியிருந்தார் இப்படி:-இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!

ஓ மரணமே! நிச்சயமாக இந்த உடலை வெடித்துச் சிதறச் செய்! என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று! நானே போதை கொண்ட காற்று! இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள். நான் அதோ அந்த அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன். இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன்……… இதோ இங்கே போகிறேன். அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.”

மரணத்திற்கே இப்படி ஒரு செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்கான தனது இறுதிச் செய்தியாக மாற்றினார் ராமதீர்த்தர்.

அவர் தனது கருத்துக்களைச் சொற்பொழிவுகள் மூலமும் கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் கூறினார்; அவர் உவமைக் கதைகளைக் கூறியுள்ளார்; சுவாரசியமான சம்பவங்களையும், புதிர்களையும் விவரித்துள்ளார். தனது கருத்துக்களை பல நோட்புத்தகங்களில் – குறிப்பேடுகளில் – பதிவிட்டுள்ளார். உருது மொழியிலும் அவர் அபார திறமை கொண்டவர். ஆக உருது, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என பன்மொழி வல்லுநராக அவர் திகழ்ந்ததால் அவரது கருத்துக் களஞ்சியம் ஒரு ஆன்மீகச் சுரங்கம் என்றே கூறலாம்.

அவரது வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. என்றாலும் கூட நேரத்தைக் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.

tags– ஸ்வாமி, ராமதீர்த்தர், 

என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!(Post No.9660)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9660

Date uploaded in London – –  –29 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!

ச.நாகராஜன்

1

இன்று நாம் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய பல அரிய தகவல்களைப் பெறப் பெரிதும் காரணமாக இருப்பவர் ம (M) என்று அழைக்கப்படும் மஹேந்திர நாத் குப்தா தான்!

அவர் ஒருமுறை பரமஹம்ஸரைப் பற்றி இப்படிக் கூறினார் தன் சிஷ்யரான ஸ்வாமி நித்யாத்மநந்தாவிடம்:

தாகூர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரை ‘ம’ இப்படித் தான் குறிப்பிடுவார்) உயிருடன் இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் நான் பதூர் பகன் (Badur Bagan) செல்லும் வழியில், வித்யாசாகர் மஹாஷய் வீட்டின் முன்னால் மயங்கி விழுந்து விட்டேன். எனது நிலையைக் கண்ட அக்கம்பக்கத்தார் விரைந்து வந்து என்னைத் தூக்கி ஒரு வண்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட பரமஹம்ஸர் எனக்கு இந்த மருத்துவ பரிந்துரையை (Prescription) அருளினார்: “சில நாட்கள் நன்றாக உறங்கு. எனக்கு அருகில் வராதே. என்னிடம் வந்து எனது சொற்களைக் கேட்டால் இன்னும் உன் நிலையை அது மோசமாக்கி விடும். எவ்வளவு பாலை அருந்த முடியுமோ, எவ்வளவு ஜீரணமாகுமோ அந்த அளவுக்கு அருந்து.”

பரமஹம்ஸரின் சொற்கள் வலிமை வாய்ந்தவை என்பதை விளக்க அவர் தன் சிஷ்யரிடம் கூறிய வார்த்தைகள் இவை.

2

ஸ்வாமி விவேகானந்தருக்கும் பரமஹம்ஸரின் வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பது தெரியும். சில சமயம் அடுத்து என்ன செய்வது என்று அவர் திகைத்தால் வழி காட்டுதல் பரமஹம்ஸரிடமிருந்து தானே வரும்.

ஸ்வாமிஜியின் சீடரான மன்மதநாத் கங்குலி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் சம்பாஷணையின் போது ஸ்வாமிஜியே இந்தச் சம்பவத்தை அவரிடம் விவரித்தார்.

ஸ்வாமிஜி ஊர் உராகச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சமயம் அது. எல்லா விஷயங்களையும் அவர் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நாள் அவருக்கு மறுநாள் ஆற்ற வேண்டிய சொற்பொழிவில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. சொன்னதையே திருப்பிச் சொல்லவும் அவருக்குப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு அவலநிலைக்குத் தன்னை தள்ளி விட்டதற்காக அவர் குருநாதர் ராமகிருஷ்ணரை நொந்து கொண்டார். திடீரென்று அவர் தன்னுடன் பேசுவதை அவர் கேட்டார். கண்களை மூடிக் கொண்டார் ஸ்வாமிஜி. ராமகிருஷ்ணரின் திருவுருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் நன்கு கேட்டது. ‘நீ இதைப் பற்றிப் பேசு; இதோ இது பற்றி…. கவலைப்படாதே’ என்றெல்லாம் அவர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். எனக்கு மறுநாள் பேச வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கிடைத்து விட்டன. ஆனால் அதை விட இன்னொரு பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. மறு நாள் காலை நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் என்னைச் சந்தித்தார்.

அவர், “நேற்று உங்களுடன் யார் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் எனக்குப் புரியாத வேறு ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டிருந்தார்!” என்றார்.

என்னிடம் ராமகிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்தது வங்க மொழியில்! எனக்கு ஒரே ஆச்சரியம், அந்த மனிதரும் இந்தப் பேச்சை எப்படிக் கேட்டார் என்பது தான்!

இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணரைப் பற்றி இன்னும் பல அரிய தகவல்களை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இப்படி தனது நினைவுகளை மன்மதநாத் கங்குலி பகிர்ந்து கொண்டதை, வேதாந்த கேசரி ஆங்கிலப் பத்திரிகை 1960ஆம் வருடம் ஜனவரி, ஏப்ரல்  இதழ்களில் வெளியிட்டது.

ஆதாரம் : 1. M- The Apostle and the Evangelist by Swami NItyatmananda – Vol 1 P 10

2. Remniscences of Swami Vivekananda – Manmatha Nath Ganguli  P-343

***

tags- ஸ்வாமி ,விவேகானந்தர் ,

ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச் செய்தி!(9622)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9622

Date uploaded in London – –  –19 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச் செய்தி!

ச.நாகராஜன்

17,அக்டோபர் 1906. பகல் மணி 12. ஸ்வாமி ராமதீர்த்தர் தனது உடலைக் கங்கையில் துறந்தார்.

ஸ்வாமி ராமதீர்த்தர் ஆங்கிலக் கணக்குப் படி 33 வயதை முடிக்கும் சமயம்! (பிறந்த தேதி :22-10-1873).

அது ஒரு விபத்து தான்.  சில நாட்களுக்கு முன்னர் அவர் முழங்காலில் ஒரு அடிபட்டிருந்தது. அந்த நிலையில் அவர் வீட்டிலேயே குளித்து வந்தார். ஆனால் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி நன்னாள்.

அன்று கங்கையிலே குளிக்க எண்ணிய அவர் கங்கையில் இறங்கினார். தவறி அவரை கங்கை இழுக்க, அவரால் மீண்டு நீந்தி வர முடியவில்லை.

குளிக்கச் செல்லும் முன்னர்  ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கட்டுரையை உருது மொழியில் எழுதிக் கொண்டிருந்தார். Self-Intoxication என்பது பற்றிய அவரது கட்டுரையில் இறுதிப் பாராவை அவர் எழுதி முடித்து விட்டுக் குளிக்கப் போனார்.

இதை அவரது சமையல்காரர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது கடைசி எழுத்துக்கள் உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

அது இது தான்:-

Indra! Rudra! Maruta! Vishnu! Shiva! Ganga! Etc. Bharat!

O, Death! Certainly blow up this one body. I have enough bodies to use. I can wear those divine silver threads, the beams of the moon, and live. I can roam as divine minstrel, in the guise of hilly streams and mountain brooks. I can dance in the waves of the sea. I am the breeze that proudly walks and I am the wind inebriate. All these shapes of mine are wandering shapes of change. I came down from yonder hills, raised the dead, awakened the sleeping, unveiled the fair faces of some and wiped the tears of a few weeping ones. The nightingale and the roe both I saw and I comforted them. I touched this, I touched that, I doff my hat and off I am. Here I go and there I go; none can fine me.

கடைசி வரி பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.

இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!

ஓ, மரணமே! நிச்சயமாக இந்த ஒரு உடலை வெடித்துச் சிதறச் செய். என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று.நானே போதை கொண்ட காற்று.

இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள்! நான் அதோ அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன், இறந்தவர்களை உயிர்ப்பித்தேன், உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன், அழகிய முகங்களை மூடியிருந்த, சிலரது முகத்திரையை விலக்கினேன், அழுகின்ற சிலரது கண்ணீரைத் துடைத்தேன். பாடுகின்ற கானம்பாடி பறவை, ரோஜா மலர் ஆகிய இரண்டையும் பார்த்தேன். அவற்றிற்கு ஆறுதல் தந்தேன். இதைத் தொட்டேன், அதைத் தொட்டேன். எனது தலைப்பாகையைக் களைந்தேன்.இதோ போகிறேன். இதோ இங்கே போகிறேன், அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.

மரணத்திற்குச் செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்குத் தந்த செய்தியாக மாற்றினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.

பெரியோரது ஒவ்வொரு செயலிலும் ஒரு உள்ளர்த்தம் பொருந்தி இருக்கும் அல்லவா!

தற்செயல் ஒற்றுமையாக இருந்தாலும் கூட ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி வரிகள் அவரது அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது ஒரு தெய்வீக விளையாடல் தானே!

***

tags- ஸ்வாமி, ராமதீர்த்தர் ,