Written by London swaminathan
Date: 7 March 2017
Time uploaded in London:- 6-46 am
Post No. 3700
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
கம்ப ராமாயணத்தை எந்தப் பக்கம் புரட்டினாலும் சுவையான செய்தி கிடைக்கும். அல்லது இலக்கியத் தேன் சொட்டும் பாடல் கிடைக்கும்; அதுவும் இல்லாவிடில் தொடர்ச்சியான ராமாயணக் கதை கிடைக்கும்.
அனுமன், தமிழ்நாட்டிலுள்ள மயேந்திர மலையிலிருந்து இலங்கைக்குத் தாவுகிறான் அங்கே ஒரு பவளக் குன்றின் மீது காலூன்றி ஒரு பறவை பார்ப்பது போல இலங்காபுரி நகரத்தைக் காண்கிறான். அப்பொழுது அவன்
இலங்காதேவியை எதிர்கொள்கிறான். அந்தக் காட்சி சுவைமிக்கது.
இலங்காதேவி ஐந்து வர்ண (பஞ்ச வர்ண) உடை அணிந்திருந்தாளாம்; வானவில் போலக் காட்சி தந்திருப்பாள்!!
அனுமனை நோக்கி யாரடா நீ? என்று ஏக வசனத்தில் கேட்கிறாள். அதற்கு அனுமன் நான் ஒரு டூரிஸ்ட்! இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்கிறான்! அவளோ நகைக்கிறாள்.; இதை சொல்லும்போது கம்பன் இன்னொரு வ ரியையும் சேர்க்கிறான். அவள் வெடி சிரிப்பு சிரிக்கிறாள். அனுமனோ மநதுக்குள் சிரித்தானாம்!
இதோ சுவையான பாடல்களும் காட்சிகளும்:-
நான் ஒரு டூரிஸ்ட்!
சுந்தர காண்டம், ஊர் தேடு படலப் பாடல்கள்
யார் நீ? ஏன் இங்கு வந்தாய்?
அனுமன் பதில்:
அளியால் இவ் வூர் காணும் நலத்தால் அணைகின்றேன்
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு? என்றான்
ஊரைக் காண வேண்டும் (tour) என்ற ஆசையால் வந்தேன். எளியவனாகிய நான் இவ்வூருக்குள் வந்தால் உனக்கு என்ன நஷ்டம்? (இழவு=இழப்பு=நஷ்டம்) என்று கேட்டான்.
நக்கானைக் கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்
அக்கால் நீதான் ஆர் சொல வந்தாய் உனது ஆவி
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள்……..
இலங்கா தேவி வெளிப்பட சிரித்தாள்; அனுமன் மனதுக்குள் சிரித்தான். அதையும் உணர்ந்த லங்காதேவி, ” சிரிக்கிறாயா? நீ யார்? யார் உன்னை இங்கு ஏவினார்? உன் உயிரே போய்விடுமே! உனக்கு என்ன கிடைக்கப்போகிறது? இவ்வளவு நான் சொல்லியும் ஓடாமல் நிற்கிறாயே? என்றாள்.
இலங்காதேவியின் தோற்றம்
எட்டுத் தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்
முடிப் போரில், மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் கலன் வலத்தாள் சுமை இல்லாள்
இலங்காதேவிக்கு எட்டுத் தோள்கள்; நான்கு முகம். ஏழு உலகங்களையும் தொட்டு மீண்டுவரும் ஒளிபெற்றவள்; சுழலும் கண் கொண்டவள். பகைத்து மோதினால் மூவுலகத்தவரையும் கட்டிச் சீறும் வலிமை பெற்றவள்; ஆனால் பொறுமை என்பது கிடையாது.
வேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்
கோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்
போல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்
அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல், குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.
அஞ்சு வர்ணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுந்தாள் அருள் இல்லாள்
அம்சுவர்ணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்
அம்சும்ச்வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்
அவள் பஞ்ச வர்ண ஆடை உடுத்தவள்; பாம்புகள் அஞ்சும் கருடன் போல வேகம் மிக்கவள்; கருணை அற்றவள்; பொன்னாடையை மேலாடையா கப் போட்டிருப்பவள் கடலிலுள்ள அழகிய பெரிய நத்தைகள் ஈன்ற முத்தூக்களால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவள்.
(இதற்குப் பின் அனுமன் அவளை ஒரு குத்துக் குத்தி விழுத்தாட்டுகிறான் என்று கதை தொடர்கிறது. பெண் என்பதால் கொல்லக்கூடாது என்று ஒரு தட்டு தட்டினான்!)
–Subham–