WRITTEN BY S NAGARAJAN
Date: 7 November 2016
Time uploaded in London: 5-34 AM
Post No.3327
Pictures are taken from various sources. Thanks.
Contact: swami_48@yahoo.com
பாக்யா 4-11-2016 தீபாவளி இத்ழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’!
ச.நாகராஜன்
‘ஒருவரின் உணர்வில் உள்ள மொத்த நிலைகளையும் பிரக்ஞை என்று குறிப்பிடலாம்” – ஆங்கில அகராதி கான்ஸியெஸ்னெஸுக்குத் தரும் விளக்கம்
பிரபல இயற்பியல் விஞ்ஞானியான எட்வர்ட் விட்டன் (Edward Witten) சமீபத்தில் அறிவியல் உலகில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்
“நான் நினைக்கிறேன், பிரக்ஞை என்பது ஒரு பெரிய மர்மமாகவே தொடர்ந்து இருக்கும். பிக் பேங் என்பது எப்படி இருக்கும் என்பதை என்னால் ஒருவாறு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரக்ஞை என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார் அவர்.
அறிவியலுக்குள்ள ஹார்ட் ப்ராப்ளம் (Hard Problem) சிக்கலான பிரச்சினை இன்றைக்கு இது தான்!
விட்டன் ஒரு சாதாரண விஞ்ஞானி இல்லை.இன்றைய கால கட்டத்தில அவரை ஐன்ஸ்டீனுக்கும் நியூட்டனுக்கும் ஒப்பிட்டுப் பேசுமளவு அவர் ஒரு மாமேதை. ஸ்ட்ரிங் தியரி என்ற கொள்கையை முன் வைத்து அவரைப் போல வேறு யாராலும் பேச முடியாது.
“மூளையின் இயக்கம் பற்றி உயிரியல் நிபுணர்களும் விஞ்ஞானிகளும் ஒருவேளை இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளலாம். ஆனால் பிரக்ஞை என்பது நீடித்த மர்மமாகவே இருக்கும்” என்ற அவரது உரை அறிவியல் உலகில் ஒரு சலசலப்பை எற்படுத்தி இருக்கிறது.
Consciousness அல்லது பிரக்ஞை அல்லது உணர்வு என்பதைப் பற்றிய ஒரு சிக்கல் இன்றைக்குச் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவியலுக்கு ஆரம்பித்தது.
அரிஜோனாவில் உள்ள டஸ்கானில் உள்ள பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் காலை நேரத்தில் அறிவியல் அறிஞர்கள் ஒரு கூட்டத்தில் குழுமி இருந்தனர். ஸ்டூவர்ட் ஹாமராஃப் என்ற பேராசிரியர் தான் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர். முதலில் பேசியவர் போரடித்தார். அடுத்துப் பேசியவர் அதை விட போர்! எல்லோரும் முழித்தனர்.
பேராசிரியருக்கோ சங்கடமாகப் போய் விட்டது. இந்தக் கூட்டம் உருப்படியாய் ஒப்பேறுமா?
திடீரென ஒரு ஆஸ்திரேலிய இளைஞர் பேசுவதற்கு வந்தார். 27 வயதான் அவர் பெயர் டேவிட் சால்மர்ஸ். டேவ் என்று செல்லமாக அழைக்கப்படும் அவர் பேச ஆரம்பித்தவுடன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் முழித்துக் கொண்டனர்.
“மூளை எல்லாவிதமான பிரச்சினைகளையும் விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தப் போகிறது. எப்படி நாம் கற்கிறோம், எப்படி எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்கிறோம், விஷயங்களை ஊடுருவிப் பார்க்கிறோம்? கூட்டம் நிறைந்த ஒரு அறையில் உங்கள் பெயரை ஒருவர் கூப்பிடும் போது அந்த சத்தத்திலும் கூட நீங்கள் எப்படித் திரும்பிப் பார்க்கிறீர்கள்?” என்று ஆரம்பித்துக் கடகடவென்று கேள்வி மேல் கேள்வியாக அவர் கேட்டுக் கொண்டே போனார்.
“ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கூட அறிந்து கொள்வதற்கு சுலபமான பிரச்சினைகளாகி விடலாம்! ஆனால் உண்மையில் சிக்கலான பிரச்சினை என்னவென்றால் பிரக்ஞை (உணர்வு) பற்றி அறிவது தான். அது தான் உண்மையிலேயே ஹார்ட் ப்ராப்ளம் (சிக்கலான பிரச்சினை)” என்று நிறுத்தினார் அவர்.
கூட்டத்தினர் ஒருவர் இன்னொருவரை நோக்கி ஹார்ட் ப்ராப்ளம் என்று சொல்லிக் கொண்டனர்.
விஷயத்தின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொண்டனர். ஹார்ட் ப்ராப்ளம் ஹார்ட் ப்ராப்ளம் ஹார்ட் ப்ராப்ளம் என்று பல்கலைக் கழகம் முழுவதும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டே இருக்க உலகம் முழுவதும் ஹார்ட் ப்ராப்ளம் என்ற சொற்றொடர் பரவி இன்று வரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
சிறிய வயதாக இருந்த போது டேவிட்டுக்கு தூரத்தில் இருப்பது தெரியாது, பார்வைக்காக கண்ணாடியைப் போட்டுக் கொண்டார். உடனே கண் பார்வை பைனாகுலர் விஷனாக பளிச்சென்று தெரிந்தது. உலகமே முப்பரிமாணத் தோற்றம் போல அவருக்குக் காட்சி அளித்தது. இதை பலமுறை பலகாலம் யோசனை செய்து கொண்டே இருந்தார்.
பார்வை எப்படி சரியானது என்ற விளக்கம் மெக்கானிகலாகத் தரப்பட முடியும் தான்! ஒரு கண்ணாடி, மூளை, கண், உலகம் – சரி, பிரச்சினை தீர்ந்து விட்டது.
ஆனால் திடீரென்று முப்பரிமாண உலகைக் காண்பிப்பது எப்படி? யார்?
அப்போது உணர்வு பற்றி அவருக்குப் பெரும் உணர்வு ஏற்பட்டது.
இப்போது உலகமே அவர் கூறிய் உணர்வு என்ற சிக்கலான பிரச்சினை பற்றிப் பேசுகிறது.
ஆனால் இது பிரச்சினையே இல்லை என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு.
பாஸ்டனுக்கு அருகில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக (Tufts University, Boston) பேராசிரியர் டேனியல் டென்னட் (Daniel Dennett), “ பிரக்ஞை என்று ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு மாயை. மூளையானது உணர்வு என்ற ஒன்றைத் தோற்றுவிக்கவில்லை” என்கிறார்.
“உணர்வு என்பது மந்திரவாதி செய்யும் வித்தை போலத் தான்! சாதாரண மூளையின் இயக்கமே கண்ணில் தோன்றாத ஏதோ ஒன்று இருப்பது போல நம்மை நினைக்கச் செய்கிறது” என்பது அவர் வாதம்!
இந்த நிலையில் தான் சமீபத்தில் எட்வர்ட் விட்டன், “அறிவியல் ஒருநாளும் பிரக்ஞை பற்றிய மர்மத்தை விடுவிக்காது” என்று ஒரே போடாகப் போட்டு விட்டார். இதனால் இன்று அறிவியல் உலகம் பரபரப்பாக உணர்வு பற்றி உணர்வுடன் பேசுகிறது.
சரி, பிரக்ஞை என்று ஒன்று இருக்கிறதா?
இந்தக் கேள்விக்கு விளையாட்டான பதில் “இதை பிரக்ஞையுடன் கேட்கிறீர்களா? அல்லது பிரக்ஞை இல்லாமல் கேட்கிறீர்களா?”!!!!\
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல அமெரிக்க இரசாயன இயல் மேதையான ஜேம்ஸ் சம்னர் (James B.Sumner தோற்றம்: 19-11-1887 மறைவு:12-8-1955) இரசாயனத்திற்கான நோபல் பரிசை 1946ஆம் ஆண்டு பெற்றார். இந்தப் பரிசை அவர் பெற்றது ஒரு சுவையான வரலாறு. இளமையில் அவரது 17ஆம் வயதில் ஒரு நாள் அவர் பறவைகளை வேட்டையாட நண்பர்களுடன் சென்றார். அதில் தவறுதலாக ஒருவர் அவரைச் சுட்டு விடவே அவர் தனது வலது கையை இழந்தார்.
படிக்கும் போது அவர் இரசாயனத்தைத் தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஊட்டியது. எப்படி ஒரு கையினால் ஒருவர் சோதனைகளைச் செய்ய முடியும்? ஆனால் தளரா மனம் கொண்ட சம்னர் பி.ஹெச்.டி பட்டம் பெற்று என் ஜைம்களைத் தனிமைப் படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அனைவரும் சிரித்தனர். ஏனெனில் அந்த முயற்சியில் வெற்றியே பெற முடியாது என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது.
ஆனால் 1926ஆம் ஆண்டு யுரிஸ் (Urease enzyme) என் ஜைமை கிறிஸ்டல்களாக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு உயிரியல் நிபுணரான ஜான் நார்த்ராப் 1935ஆம் ஆண்டு பெப்ஸின் என் ஜைமின் கிறிஸ்டல்களைப் பெறுவதில் வெற்றி பெற்றார். அப்போது தான் அனைவரின் கவனமும் சம்னர் மீது திரும்பியது. அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர். இடது கை வீரர் கடைசியில் விஞ்ஞான உலகத்தில் நோப்ல பரிசு பெற்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்று உயர்ந்தார்.
உத்வேகமூட்டும் வரலாறு கொண்ட பெரிய விஞ்ஞானி சம்னர்!
**********