ஹிந்து பாரதி! (Post No.4478)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4478

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி இயல்

டிசம்பர் 11 : பாரதி பிறந்த தினம்; அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

ஹிந்து பாரதி!

 

.நாகராஜன்

1

மஹாகவியை கடந்த எண்பது ஆண்டுகளில் ‘எங்களில் ஒருவர்’ ஆக்க பலர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்; தொடரும் முயற்சிகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்.

முதலில் சிலர் பாரதியை ஒதுக்கிப் பார்த்தார்கள். அவனோ விசுவ ரூபம் எடுத்தான்.

பின்னர் சிலர் வெறுத்துப் பார்த்தார்கள். வெறுத்தவர்கள் வெறுக்கப்பட்டதால் மிரண்டு போனார்கள்.

இறுதியாக இருந்த ஒரே வழி புகழ்வது தான்.. அதிலும் அவர் எங்களில் ஒருவர் என்று சொல்லி விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது இல்லையா?

‘ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்ற வரியைக் கையிலே ஏந்திக் களமிறங்கினர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மதத்தைப் பற்றியும், சிவன், முருகன், கண்ணன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களை அவன் மனமுருகித் தொழுததற்கு விபரீத வியாக்யானங்களைத் தந்தனர். ஏனென்றால் மதம் என்பது அபின் இல்லையா அவர்களுக்கு! என்றாலும் எடுபடவில்லை!!

திராவிடப் பிசாசுகளுக்கு பாரதி என்றாலே பாகற்காய். கம்பனைப் புகழ்ந்த வம்பன் அல்லவா அவன்! ஆனால் பாரதிக்குக் கிடைத்த பாரதிரும் புகழ் கண்டு பயந்தவர்கள் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற வரியைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். ஆனால் இவர்களின் இரட்டை வேடத்தைக் காலம் தோலுரித்துக் காட்டியது. கர்த்தரின் ஏஜண்டுகளுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும், தலையில் முக்காடிட்டு நோன்பில் பங்கு கொள்வதும் ஒரு புறம் அவர்களைப் ‘பக்திப் பரவசத்தில்’ ஏற்ற, இன்னொரு புறமோ ராமனையும், கிருஷ்ணனையும் ஏசி, அம்பாள் எந்தக் காலத்திலடா அருள் பாலித்தாள் என்று வீர வசனம் பேசினர். மக்கள் இந்த ஜகஜாலப் புரட்டைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டனர். ஆக அவர்களும் வலுக்கட்டாயமாக பாரதி விழாக்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்க வேண்டி வந்து விட்டது.

சுயநல மதவாதிகளுக்கோ பாரதி கூறிய ஏசு, அல்லா உதவிக்கு வந்தது.

ஆக, பாரதியை ஒரு குழப்பு குழப்பி விட்டு ஒரு பெரிய உண்மையை எல்லோருமாகச் சேர்ந்து மறைக்க முயன்றார்கள்.

என்ன உண்மை அது?

ஹிந்து பாரதி! பாரதி ஹிந்துவாக வாழ்ந்தான்; ஹிந்துத்வத்திற்கு ஏற்றம் தந்தான். அது வாழ்ந்தால் உலகம் வாழும் என்று நம்பினான். அந்த ஹிந்து பாரதியைத் தங்கள் குப்பைக் கொள்கைகளாலும் வீர தீரப் பேச்சுக்களாலும் மூடி மறைத்தார்கள்!

மலையை, சிறு கை மறைக்க முடியுமா?

ஆதவன் ஒளியை, அறை இருட்டு எதிர் கொள்ளுமா?முடியாது.

ஹிந்துத்துவத்தின் அடிப்படையான அன்பால் (அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!) அனைவரையும் கட்டுப் படுத்தலாம் என்று பாரதி ஹிந்து சிந்தனையோடு ஏராளம், ஏராளம் எழுதினான்.

ஹிந்து பாரதி பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், அவனது எழுத்தைக் கொண்டே எழுதுவதாக இருந்தால், பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்தச் சிறு கட்டுரையில் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

ஒரு பானைச் சோற்றில் இவை சில பருக்கைகளே. ஆனால் அனைத்தும் உண்மையில் வெந்த பருக்கைகள்!

சுவையுங்கள். ஹிந்து பாரதியை அனைவருக்கும் சொல்லி ஆனந்தம் அடையுங்கள்.

2

உமையே பாரத தேவி

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களில் களித்திடும் கமலை நீ!

வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ   – வந்தே மாதரம்!

(பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கீதத்தில் பாரதி எப்படி மனதைப் பறி கொடுத்தான், வந்தேமாதரம் பற்றி எப்படியெல்லாம் பாடியுள்ளான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை)

 

ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னை …

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும்,

பாதகர் ஓதினும் மேதகவுற்றிடும் பண்புயர் மந்திரமும்…

மாணுயர் தேவி விரும்பிடும் வந்தேமாதரமே.

 

உபநிடதப் புகழ்

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூலிது போலே

 

 

வேத பூமி

நாரத கான நலந்திகழ் நாடு

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

 

உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!

 

நாவில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

ஹிந்து பாரம்பரியமே தேச பாரம்பரியம்!

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்?

எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்!

 

இப்படி வேத பாரதியின் வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் படித்தும் கூட ஹிந்து பாரதியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன!

ஹிந்துப் பண்பாட்டை, ஹிந்து அடித்தளத்தை வைத்தே சுதந்திரத்தை அடைய எழுச்சியை ஊட்டியவன் ஹிந்து பாரதி!

3

தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் நாயே!

இனி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் வாய்ச் சொற்களாக கம்பீரமான வார்த்தைகளில்  அவன் தரும் சில கருத்துக்கள்:

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

தாய்த்திரு நாட்டைத்  தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வண்மையும்

ஞானமும் அறியா நவைபடு துருக்கர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாட் படைகொணர்ந் தின்னல்செய் கின்றார்

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்.

தாய் பிறன் கைப்படச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?!

காளியும் கனக நல்நாட்டு தேவியும் ஒன்றே!

அடுத்து குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

வ.வே.சு. ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு  எழுந்தது இந்தக் கவிதை.

காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!

 

நீர் அனைவரும் தரும, கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றனையே சார்ந்தோர் ஆவீ ர்.

 

 

ஹிந்து பாரதியின் மனம் இன்னுமா புரியவில்லை?

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் அறிந்திலார் என்று பாரதி கேலி செய்வானே, அந்தக் கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடக் கூடாது.

செகுலரிஸ்டுகளும்  கம்யூனிஸ்டுகளும் போலி மதவாதிகளும் மேலே கூறியது போன்ற பாரதியின் நூற்றுக் கணக்கான வரிகளை எங்குமே மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே பாரதியை நாமே தான், நேரடியாகக் கற்க வேண்டும்.

4

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். முடிவே இருக்காது.

இறுதியாக ஒரு கட்டுரைப் பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

“ஆதி முதல் அந்தம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டு பண்ணி அவர்களில் தேசத் துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய  வீரத் தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோஹங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறே தான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம்.”

 

“ஆகாயத்தினின்று விழும் எல்லா ஜலங்களும் எப்படிக் கடலையே போய்ச் சேருமோ அவ்வண்ணம் எல்லா மதஸ்தர்கள் செய்யும் ஆராதனைகளும் ஒரே ப்ரஹ்மத்தைத் தான் சேரும் என்னும் வேதாந்த சமரஸ புத்தியை அடைந்து இனியாகிலும் ஒத்து வாழ வேண்டும்.”

 

மேற்கண்ட கட்டுரைப் பகுதிகள், “ இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்தக் கட்டுரை புதுவை சூரியோதயம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை பாரதியின் கட்டுரை அல்ல என்று அபிப்ராயப்படுகிறார் சீனி.விசுவநாதன். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டு. 1) நூலில் எங்கும் பாரதியின் பெயர் இல்லை. 2) நூலின் நடையும் பாரதியினுடையதாகத் தோன்றவில்லை.

 

அதாவது இந்தக் கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை.

ஆனால் ‘பாரதிக்குத் தடை’ என்ற நூலை எழுதியுள்ள வி.வெங்கட் ராமன் தனது நூலில் இது பாரதி எழுதியது தான் என்று ஆய்ந்து நிறுவியிருக்கிறார்.

சூரியோதயத்தில் பாரதியின் பணி குறிப்பிடத்தகுந்தது. ஆகவே இந்தக் கட்டுரையின் கருத்துகள் அவர் எழுதினாரோ இல்லையோ அவரது குழுவினரின் ஏகோபித்த கருத்து என்பதில் ஐயமில்லை.

“பிற தேச எதிரிகளுடைய வஞ்சக வேலையென்று முன்னமே தெரிவித்திருக்கிறோம்” என்ற கட்டுரை வரியை வைத்து இதர பாரதியின், “முன்னமே தெரிவித்திருக்கிற” பெயரிடப்பட்ட கட்டுரைகளை ஒப்பிட்டால் இது அவர் எழுதியதே என்ற முடிவுக்கு வர முடியும்.

5

 

பாரதிக்குச் சங்கடங்கள் ஏராளம். வெள்ளையரால் மட்டுமல்ல; நம்மவராலும் கூடத் தான். அவரைத் தன் மனதிற்கு ஏற்றபடி எல்லாம் ஒவ்வொருவரும் டிசைன் செய்யப் பார்ப்பதால் அவர் படும் அல்லல் ஏராளம்.

அவர் வாயில், தனக்குக் கெட்டது என்று தோன்றும் “கெட்ட வார்த்தைகள்” (செகுலர் அல்லாத என்று கொள்க) எதையும்  வந்து விட்டதாகச் சொல்லி விடக் கூடாது என்ற “பாரதியின் மீது கொண்ட கருணையால்” அந்த வார்த்தைகளை சென்ஸார் செய்த அறிஞர்களும் உண்டு.

சின்னச் சின்ன மாற்றங்களை – வார்த்தைகளை மாற்றி – சில்மிஷம் செய்த அறிஞர்களும் உண்டு.

ஆய்வுப் பதிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலோ, அவர்கள் அரசுக்குப் பயந்து இப்படியும் இருக்கலாம்; அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்ற பாணியில் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக மஹாகவிக்கு வாழ்ந்த நாளிலும் சங்கடம்; மறைந்த பிறகும் சங்கடம்.

இந்த சுயநலமிகளின் பதிப்புப் பணியில் ஹிந்து பாரதி மறைந்து விட்டார்.

நண்பர்களே, தேடிக் கண்டு பிடியுங்கள். உண்மை பாரதி தோன்றுவார்.

அப்படித் தோன்றும் பாரதி, ‘ஹிந்து பாரதி’ என்பதை அறிந்து மகிழலாம்.

***