ரோம் நகர வெஸ்டா (வாஸ்து) தேவதை கோவில் (நாணயத்தில்)
Research article by London swaminathan
Article No.1918; Dated 8 June 2015.
Uploaded at London time: காலை 6-09 மணி
வீட்டிலும், கோவில் போன்ற கட்டிடங்களிலும் வாஸ்து புருஷனைப் பூஜிப்பது, வாஸ்து அடிப்படையில் கட்டிடங்களை நிர்மாணிப்பது எல்லாம் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. அது மட்டுமல்ல அதே பெயரில், அதே நோக்கத்தில் இத்தாலிநாட்டின் தலைநகரான ரோமிலும், கிரேக்க நாட்டிலும் வழிபாடுகள் நடத்தப்பட் டூள்ளன. ஆயினும் அங்கே நிறைய புதிய கதைகளும் எட்டுக்கட்டப் பட்டுள்ளன. எப்படி நம் நாட்டில் ஒரே சிவ பெருமானும், ஒரே மஹாவிஷ்ணுவும் ஊருக்கு ஊருள்ள கோவில்களில் பல ஸ்தல புராணக் கதைகளுடன் விளங்குகின்றனரோ அதைப் போல ரோம், கிரிஸில் வேறுபாடுகள் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் அங்கு குடியேறிய இந்துக்கள், காலப் போக்கில் பாரதத்துடன் தொடர்பை இழந்தவுடன் அந்த ஊர்க் கடவுளுடன் இணைத்து புதிய கதைகளை உருவாக்கினர் என்று சொல்லலாம்.
ரோம் நகரில் வெஸ்டா என்ற பெயரிலும் கிரேக்க நாட்டில் ஹெஸ்தியா என்ற பெயரிலும் வீட்டிலுள்ள அக்னிமூலையில் இந்த தெய்வங்கள் வழிபட்டன. ஒவ்வொரு வீட்டிலும் குளிர்காலத்தில் சூடு ஏற்றுவதற்காக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அக்னி மூலை இருக்கும்.
முதலில் ரிக்வேதத்தில் உள்ள விஷயங்களைக் காண்போம். உலகின் மிகப் பழைய மத நூலான் ரிக்வேதம் குறைந்து 3700 ஆண்டுப் பழமையுடையது. இதில் வசிஷ்டர் கோத்ர ரிஷிகள் பாடிய பாடல்கள் ஏழாவது மண்டலத்தில் இருக்கின்றன. அதில் ஒரு பாடலில் (7-54-1) வாஸ்தோஸ்பதி வணங்கப்படுகிறார். வாஸ்தோஸ்பதி என்றால் வீட்டின் கடவுள் எனப்பொருள். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நன்மை செய்யவேண்டும்; கால்நடைகளும் குதிரைகளும் பெருகவேண்டும்;நோய்கள் அழிய வேண்டும்; பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்று முனிவர்கள் வாஸ்துக் கடவுளை வேண்டுகின்றனர்.
இன்னொரு துதியில் சோமன், த்வஸ்டா ஆகியோராக வழிபடப்படுகிறார். இந்திரனுடன் ஒப்பிடப்படுகிறார்.
பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடலில் (10-61-7) அவர் சட்ட நியதிகளை பராமரிப்பவராகவும் கடவுளால் உருவாக்கப்பட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். பிற்காலத்தில் எழுதப்பட்ட கிருஹ்ய சூத்திரங்களில் கிரகப்பிரவேசத்தின் போது அவருக்கு படைப்புகள், காணிக்கைகள் செலுத்தவேண்டும் என்று உள்ளது. அவர் ருத்ரன் போல ஒரு துதியில் போற்றப்பாடாலும் இல்லுறை தெய்வம் அவரே என்று துதிபாடுகின்றனர்.
வெஸ்டா—ஹெஸ்தியா
ரோம் நகர தேவதையாக வெஸ்டா வழிபடப்படுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் அவர் நெருப்பு மூட்டப்படும் இடத்தில் அவள் உறைவாள். அவளுக்கு நாள் தோறும் படைப்புகள்/காணிக்கைகள் செலுத்த வேண்டும். ரோம் நகரில் ‘போரம்’ என்னும் இடத்தில் அவளுடைய பிரதான கோவில் உள்ளது. அங்கு மார்ச், ஜூன் மாதங்களில் வெஸ்டாலியா என்னும் விழா நடை பெறும். ரோம் நகரிலேயே சிறந்த பெண்கள் அந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவர். அவர்கள் அங்கேயே வாழ்ந்து குறைந்தது 30 ஆண்டுகள் ப்ரம்மசாரிணியாக இருந்து விட்டு வெளியே வரலாம். இடையில் கற்புநிலை தவறினால் அவருக்கு கசையடி கொடுக்கப்படும் பின்னர் இந்தக் கசையடிக்குப் பதிலாக அவரைச் சுற்றி சுவர் எழுப்பும் விதிகள் வந்தன. எல்லா பணிகளுக்கும் அந்தக் கோவிலில் எரியும் நந்தாவிளக்கின் ஒளியிலிருந்து தீயை எடுத்துச் செல்ல வேண்டும். விழாக் காலங்களில் பெண்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்து ரொட்டிகள், அப்பங்களைச் சுட்டுப் படைக்கவேண்டும். வருடம் முழுதும் அங்கு தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது. ரோம் நகரில் வெஸ்டாவின் தீ வட்டவடிவான குண்டத்தில் ஏற்றப்பட்டது.
இந்துமத வழக்கங்கள்
இப்பொழுது இவைகளை இந்து மதக் கடவுளருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:-
1.வாஸ்து என்பதே வெஸ்டா என்றும், கிரேக்க மொழியில் ஹெஸ்தியா என்றும் மருவியது
2.எல்லா இடங்களிலும் அக்னியாக, வீட்டுக்கு ஒளியூட்டும் கடவுளாக வழிபடப்பட்டது.
3.பிராமணர் வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம், அவுபாசனம், சமிதாதானம் முதலிய ஹோமங்களைச் செய்வர். இதற்காக அணையாத தீ எப்பொழுதும் ஒரு சட்டியில் (உமி) வைக்கப்பட்டிருக்கும். பிறப்பு முதல் இறக்கும்போது தகனக் கிரியை வரை இதிலிருந்தே அக்னியை எடுப்பர்.
4.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் மூன்று வடிவங்களில் தட்சிணாக்கினீயம் (அரை வட்ட ஹோம குண்டம்), கார்கபத்யம் (வட்ட வடிவம்), ஆஹவனீயம் (சதுர வடிவ ஹோம் குண்டம்) ஹோம குண்டங்கள் இருந்தன. இதில் ரோம் நகரில் எப்பொழுதும் வட்டவடிவத்தில் இருக்கவேண்டும் என்று விதித்தனர்.
5.இந்துக்கள் ஆண் தெய்வமாக வஸ்தோஸ்பதியை வழிபட்டனர். ரோமானியர்கள் பெண் தெய்வமாக வழிபட்டனர். ஆனால் நாமும் கிருஹ லெட்சுமி என்றே சொல்லுவோம்
6.இந்துக்கள் கோவில்களில் நந்தாவிளக்கு என்று அனையாத தீபம் வைத்திருப்பர். அதே போல ரோமிலும் வெஸ்டா கோவிலில் தீயை அணையாமல் பாதுகாத்தனர்.இந்துப் பெண்கள் வெறும் கால்களுடன் கோவிலுக்குச் சென்று நைவேத்யம் செய்தது போல ரோமானியர்களும் செய்தனர்.
சிந்து சமவெளியில் யாக குண்டங்கள் (காளிபங்கன்)
- பால்டிக், ஸ்லாவ் இனமக்கள் வாழும் நாடுகளில் பெண்கள் திருமணமாகி மறுவீடு செல்லுகையில் அம்மா வீட்டிலுள்ள அக்னி மூலையிலிருந்து அக்னியை (விளக்கு) எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. பிராமணர் வீடுகளிலும் ஆண்கள் பரம்பரை பரம்பரையாக அணையாத தீ வைத்திருப்பர். அந்தக் காலத்தில் மூன்று வடிவங்களில் இருந்த ஹோம இடங்கள் இப்பொழுது ஒரு சட்டியில் எரியும் உமிக்கரியாகச் சுருங்கிவிட்டது. எனது நண்பர்கள் சிலர் இன்றும் இதே முறையில் அக்னிஹோத்ரம் செய்துவருகின்றனர்.
- இந்த மூன்று வடிவ யாக குண்டங்கள் சிந்து சமவெளி நாகரீக நகரான காளிபங்கனில் கண்டுபிடிக்கபட்டுள்ளன. இவைகளுக்கு சில அளவுகள், சட்டதிட்டங்கள் உண்டு. அந்தக் கணக்குகள் மிகவும் சிக்கலானவை. அவைகளை விளக்கும் சூல்வ சூத்திரங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டன. அதிலிருந்துதான் ஜியோமிதி என்னும் கணித சாத்திரம் உலகிற்கு கிடைத்தது. இது எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டவும் உதவியது. இந்து மத எஞ்ஜினீயர்கள் அங்கு சென்றதால் பிரமிடு கட்டுவோருக்கும் நூல் பிடிப்போர் (சூல்வ சாத்திர நிபுணர்கள்) என்ற பெயர் ஏற்பட்டது. ‘பை’ முதலிய கணித எண்களை அறிந்தோரே வேத கால யாக குண்டங்களை அமைக்கமுடியும்.
9.வெஸ்டா கோவிலில் கன்னிப் பெண்கள் இருந்தது போல இந்துக் கோவில்களிலும் தேவதாசிகள் இருந்தனர்.
10.இந்தியாவில் எப்படி ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு தேவதை உண்டோ அப்படியே ரோம் நகர தேவதையாக வெஸ்டா வணக்கப்பட்டாள்.
ஆதி காலத்தில் பிராமணர் வீடுகளில், இருந்த மூன்று வடிவ யாக குண்டங்கள்
நான்கு நூல்களில் கிடைத்த விஷயங்களைத் தொகுத்து நான் இவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை.
சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள வாஸ்து சாஸ்திர விஷயங்களைத் தனி கட்டுரையாகத் தருவேன்.
You must be logged in to post a comment.