Compiled by London swaminathan
Article No.1916; Dated 7 June 2015.
Uploaded at London time: காலை 6-32
பழங்கால உலகில் இந்தியாவில் மட்டுமே பெண்கள் கல்வி கற்றனர். உயர் நிலையில் இருந்தனர்.சுமேரிய, எகிப்திய,கிரேக்க நாட்டு வரலாற்றைப் படித்த்வர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை இது. எதை எழுதினாலும் அதற்கு சான்று தருவது அறிவுடைமை; மேலும் அது நம் கடமை.
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களின் பாடல்கள் உள. அதற்கு 1700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தோன்றுவதற்கு முன்னர் பீஹாரிலுள்ள பாட்னா நகரில் (பாடலிபுத்ரம்) இருந்து அசோகனின் மகள் சங்க மித்திரை கப்பலில் இலங்கைக்குச் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தாள். அவள் ஒரு அறிவாளி. புத்த மதத்தில் மேலும் பல தலைவிகளும் இருந்தனர். இதற்கெல்லாம் மிக முன்னதாக, அதாவது கி.மு 850-ல், இற்றைக்கு 2850 ஆண்டுகளுக்கு முன், ஜனக மாமன்னன் கூட்டிய அகில இந்திய தத்துவ மஹாநாட்டில் பல மாநில த்தினர் கலந்து கொண்டனர். அந்த அறிஞர்களின் பெயர்ப் பட்டியல் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தில் உள்ளது. அதில் கலந்துகொண்ட மகளிர் அணியில் கார்கி வாசக்னவி என்ற பேரறிவாளி, கூட்டத்தில் எழுந்து பேசினாள். அப்போதைய பேரறிஞர் யாக்ஞவல்கியர் மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.
ஆதிசங்கரருக்கும் மண்டன மிஸ்ரருக்கும் நடந்த வாதத்தில் மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணிதான் ஜட்ஜ்/ நடுவர். அவ்வளவு பெரிய அறிவாளி அவள். ஆயினும் தன் கணவர் பங்கு பெறுவதால் அவள் ஒரு தந்திரம் செய்தாள். அவள் அறிவாளி மட்டும் அல்ல; ஒரு விஞ்ஞானி! ஒரு விஞ்ஞானி மட்டும் அல்ல; பெரிய சைகாலஜிஸ்ட் – அதாவது உளவியல் மாமேதை. அவளுக்குத் தெரியும் யார் உணர்ச்சி வசப்பட்டு வாதாடுகிறார்களோ அவர்கள் உடம்பில் சூடு ஏறும்; குறைகுடம் கூத்தாடும், ஆனால் நிறைகுடம் தழும்பாது என்று. ஆகையால் இருவர் கழுத்திலும் மலர் மாலையைப் போட்டுக் கொள்ளவைத்து, முதலில் யார் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டாள். அவர் கணவரின் மாலை முதலில் வாடவே, அவரே தோற்றவர் என்று அறிவித்துவிட்டு, தன்னுடன் வாதத்துக்கு வரும்படி அழைத்து, பிரம்மச்சாரி சங்கரரிடம் ‘செக்ஸ்’ பற்றிய கேள்விகளைக்கேட்டு அவரைத் திணறடித்தாள். இறுதியில் அவளும் தோற்றுப்போனாள். அப்பேற்பட்ட மாமேதையான பெண்மணிகளை உடையது நம் நாடு.
மேலை உலகத்திலோ பெண்களை மட்டம் தட்டி வைத்திருந்தனர். ஷீபா மஹாராணி, கிளியோபாட்ரா ஆகியோர் பெயர்கள் அடிபட்டாலும் அவர்களின் ‘அழகே’ அதிகம் பாராட்டப்பட்டுள்ளது. அவர்களின் ‘அறிவு’க்குச் சான்று பகரும் கவிகள் ஏதுமில! நமக்கோ இலக்கியச் சான்றுகள் உள!!
அலெக்ஸாண்டர் படை எடுத்தபோது உலகில் பல நகரங்களை ஏற்படுத்தினார். அதில் ஒன்று எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் அமைந்த அலெக்ஸாண்டிரியா. அதில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பத்து லட்சம் மக்கள் வாழத் துவங்கினர். இந்திய அறிஞர்களும், வணிகர்களும் அங்கு வசித்த வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. அந்த நகரில் மியூசியம், பல்கலைக் கழகம் எல்லாம் ஒன்றாக இணைந்திருந்த இடத்தில் கிரேக்க அறிஞர் தேயன் (தேவன்) பாடம் சொல்லிக் கொடுத்தார். அவரது மகளின் பெயர் ஹைபேசியா. அவள் நன்கு படித்து கணித மேதை ஆனாள். அவள் பேரழகி. தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்கள் தன் அழகில் மயங்கி புத்தி பேதலித்து விடக்கூடாது என்று எண்ணி, திரைக்குப் பின்னால் நின்றுதான் பாடம் சொல்லிக் கொடுப்பாள். அவள் பிறந்தது கி.பி 350க்கும் 370 க்கும் இடையில் என்பது ஆராய்ச்சியாளரின் கணிப்பு.அப்போது ரோமானிய ஆட்சி எகிப்து வரை பரவி இருந்தது.
ஹைபேசியா மற்றும் அவரது தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மதத்தை ஏற்கவில்லை. ஆகையால் கிறிஸ்தவ மதத்தினருக்கு அவளைப் பிடிக்கவில்லை. இந்து மத தத்துவத்துக்கு இணையான (மறுபிறப்பு) கொள்கைகளைப் பரப்பிய சாக்ரடீஸ்-பிளாட்டோ ஆகியோரின் கொள்கைகளை ஹைபேசியா குடும்பம் பின்பற்றியது.
இதற்கிடையில் அலெக்சாண்டிரியாவில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு யூதர்களூம் கிறிஸ்தவர்களும் வன்முறையில் இறங்கினர். இருதரப்பிலும் மதத்தலைவர்கள் படுகொலையுண்டனர்.
கான்ஸ்டாண்டி நோபிள் நகரிலிருந்து வந்த வெறிபிடித்த பாதிரியார் சிரில் என்பவருக்கும், ஹைபசியாவின் மாணவரும் ரோமானிய கவர்னருமான ஆரிஸ்டஸ் என்பவருக்கும் மோதல் அதிகரித்தது. கி.பி 415ல் பெரிய ரோமானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹைபேசியா, கணிதம் மற்றும் தத்துவ பாடத்தைப் போதித்ததோடு பலரை வாதுக்கு அழைத்து வெற்றியும் பெற்றுவந்தாள். இந்தியாவில் காசி மநகரத்தில் தெரு மூலைகளில் அறிஞர்கள் நின்று கொண்டு எல்லோரையும் வாதுக்கு அழைப்பர். பெரிய பட்டிமன்றங்கள் நடக்கும். இதுபோல ஹைபேசியாவும் செய்து வந்ததால் ரோமானிய எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்த அன்று அவருடைய வீட்டில் ஒரு கிறிஸ்தவ கும்பல் புகுந்து அவரை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்து வந்தனர். பின்னர் அவளை உயிருடன் எரித்துக் கொன்றனர். இதுபற்றி சாக்ரடீஸ் ஸ்காலஸ்டிகஸ் என்ற வரலாற்று அறிஞர் அந்தக் காலத்திலேயே எழுதி வைத்தது இப்பொழுது விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் உள்ளது.
இந்தப் படுகொலைக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் விஞ்ஞானம் என்பது இருளில் மூழ்கியது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலிலியோ, கோபர்நிகஸ் ஆகியோரையும் கொடுமைப் படுத்தினர். இதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியவுடன் கி.பி.1500 வாக்கில் மறுமலர்ச்சி உதயமானது.
ஹைபேசியா பல நூல்களை எழுதினார். நீரை அளக்கும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார், ஆனால் ஒன்றுகூட இன்று மிஞ்சவில்லை. இதற்குக் காரணம், முஸ்லீம்கள் நாலந்தா பலகலைக்கழக நூல்நிலையத்தை எரித்து நம்முடைய நூல்களை எப்படி சாம்பலாக்கினரோ அப்படியே கி.பி 640ல் ஒரு அராபிய முஸ்லீம் கும்பல் அலெக்ஸாண்டிரியா நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது. இதன் விவரங்களும் கலைக் களஞ்சியங்களில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். அவை அனைத்தும் இன்றும் சாம்பல் ரூபத்தில் பீஹாரில் நாலந்தா பலகலைக் கழகத்தின் அடியில் உள்ளன. இதே கதை அலெக்ஸாண்டிரியாவிலும் நடந்தது.
நாம் இவர்களை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாறு இவர்களை மன்னிக்கவே மன்னிக்காது.
You must be logged in to post a comment.