Compiled by London swaminathan
Date: 27 February 2016
Post No. 2579
Time uploaded in London :– 6-01 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு!
ரோமானிய அரசன் காலிகுலா, ஒரு விருந்து கொடுத்தான். நிறைய அதிகரிகளும், அமமைச்சர்களும் அரச குலத்தினரும் அமர்ந்திருந்தனர். திடீரென்று காலிகுலா வெடிச் சிரிப்பு சிரித்தார். அது வில்லன் சிரிப்பாக மாறியது. நிற்கவே இல்லை. எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். எதற்காக? சிரிக்காவிட்டால் அவர்கள் தலையே போய்விடும். அப்பேற்பட்ட ஹிரண்யகசிபு அவன்!
கொஞ்ச நேரம் ஆயிற்று, சிரித்து சிரித்துக் களைப்பானவுடன் சிம்மாசனத்தில் ‘அப்பாடா’ என்று சாய்ந்தார். அருகிலுள்ள, ஒருவர் மட்டும் பய பக்தியுடன் மன்னர் சிரித்ததன் காரணத்தை வினவினார்.
“ஒன்றுமில்லை, நான் மட்டும் தலை அசைத்திருந்தால், உங்கள் குரல்வளைகளெல்லாம் வெட்டப்பட்டு நீங்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்திருப்பீர்கள்” – என்று தன்னுடைய பருத்த கையினால் அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் சுட்டிக்காட்டினான். கேட்டவருக்கு ரத்தமே உறைந்து போயிருக்கும்.
இதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர்!
Xxxx
குழந்தாய்! என்ன படிக்கிறாய்?
இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஒரு நாள் அரண்மனைக்குள் சுற்றிவரும்போது, பேரப்பிள்ளை மிகவும் உன்னிப்பாக, கவனமாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.
மன்னர், அவனிடம் போனார். அன்பாக தலையை வருடினார். அது என்ன? இவ்வளவு ஆர்வத்தோடு படிக்கிறாயே! என்ன விஷயம் என்று உசாவினார்.
பேரன் சொன்னான்:
“ஒன்றுமில்லை, தாத்தா! பீட்டர் வார்பெக் பற்றிப் படித்தேன்.
மன்னர் கேட்டார், “ பீட்டர்…. வார்பெக்……… அது யாரு எனக்கே தெரியாதே!
பேரன் சொன்னான்,
“தாத்தா, அவன் ஒரு மன்னரின் மகன் போல நடித்தான். ஆனால் உண்மையில் அவன் அப்படிப்பட்ட பேர்வழி இல்லை; மிகவும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவன்!”
மன்னருக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது!
Xxx
இரண்டு கடிகாரம்!
ஐந்தாம் சார்லஸ் மன்னன், அரச பதவியைத் துறந்து ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் அமைதியாகக் காலம் கழித்து வந்தார். ஆனால் பொழுது போவதற்காக கடிகாரங்களைச் சேகரிப்பது, சுத்தம் செய்வது, அவைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றைச் செய்துவந்தார். ஒரு முறை இரண்டு சரியாக ஓடாத கடிகாரங்களைச் செப்பனிட்டு, இரண்டிலும் சரியான நேரத்தைக் காட்ட முயன்றார். ஆனால் இரண்டு கடிகாரங்களும் ஒத்துழைக்க மறுத்தன.
இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி நேரம் காட்டாது – என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கேற்ப அவை இரண்டும் தனக்கு இஷ்டப்பட்ட நேரங்களைக் காட்டின.
உடனே அருகில் நின்ற உதவியாளரிடம், மன்னர் சொன்னார், “ என்ன மடமை! இரண்டு கடிகாரங்களைக்கூட ஒன்றாக ஓடச் செய்யமுடியாத நான், ஆட்சி செய்த காலத்தில் ஆயிரக் கணக்கானோரை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டுமென்று எதிர்பார்த்தேனே!” – என்றார்.
Xxx
மஹாராணியை மயக்கிய பிரதமர்
பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டிஸ்ரேலி என்பவர், விக்டோரியா மஹாராணியின் நன்மதிப்பை பெற்றிருந்தார். எல்லோருக்கும் வியப்பு. எப்படி ஒரு பிரதமர், ஒரு மஹாராணியிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று. அவரிடமே இதற்கான காரணத்தையும் கேட்டுவிட்டனர்.
அவர் சொன்னார், “ அட, மற்ற அரசியல்வாதிகள் எல்லாம், அவரை மஹாராணியாக நினைத்து, பயபக்தியுடன், அரசு செயல்பாடுபற்றி மட்டும், இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்து விடுவர். நான் அவரும் ஒரு பெண்மணிதானே என்று கருதி பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசுவேன்; அது மட்டுமல்ல அவர் என்ன சொன்னாலும் ஆமாம்சாமி போடுவேன், எதையும் மறுத்துரைக்க மாட்டேன். அவர் பேசும் விஷயங்களை மறந்துகூட விடுவேன்” – என்றார். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்)
-சுபம்-
You must be logged in to post a comment.