11. ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று உண்மைகள்!

sun buddha

ச.நாகராஜன்

கடைசி கடைசியாக டைடோகுஜி மடாலயத்தின் உள்ளே அடியெடுத்து வைத்தார் சோகோ.அவர் நுழைந்த அறையில் ஒரே ஒரு சுவர் தான் இருந்தது. மூன்று பக்கங்களிலும் தள்ளு கதவுகள். நான்காவது புறம் ஒரு சுவர்.தனது புங்கோ மூட்டையைக் கீழே வைத்து விட்டு சுவரை நோக்கி தியான நிலையில் (ஜஜென்) அமர்ந்தார் சோகோ.

மூன்று பக்கங்களிலிருந்தும் கதவுகளுக்கு அப்பாலிலிருந்து யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் ஒரு விநாடி கூட சோகோவால் இயல்பான நிலையில் இருக்க முடியவில்லை. மூன்று வேளையும் எளிய உணவு வழங்கப்பட்டது. தூங்க அனுமதி தரப்பட்டதோடு பாய் ஒன்றும் தூங்குவதற்காகத் தரப்பட்டது. இப்படியே ஐந்து நாட்கள் கழிந்தன. ஆக காத்திருந்ததையும் சேர்த்து மொத்தம் எட்டு நாட்கள் கழிந்தன. எதற்காக நாம் இங்கே வந்தோம், என்ன செய்வதற்காக வந்தோம் என்று எண்ணியவாறே சோகோ நேரத்தைக் கழித்தார். ஆனால் தன் மாஸ்டரிடம் அளித்த உறுதி மொழியையும் தான் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தையும் சோகோ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.

இறுதியாக சோகோ துறவிப் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டார்!
பதினைந்து வருடங்கள் உருண்டோடின. சோகோவுக்கு அவர் குருவிடமிருந்து இங்கா கிடைத்தது. (சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர்)

இத்தனை வருடங்களிலும் அனுபவம் ஒன்று மட்டுமே தான் பயிற்சி. வெறும் பேச்சோ அல்லது தத்துவச் சொற்பொழிவுகளோ எதுவுமில்லை. டைடோகுஜி மடாலயத்தில் நம்பிக்கை என்றால் என்ன என்பதை சோகோ கற்றுக் கொண்டார். எந்த கஷ்டம் வந்த போதிலும் அதை அசைக்க யாராலும் முடியவில்லை.

ஜென் மாஸ்டரான ஹகுயின் ஜென் பயிற்சியில் மூன்று முக்கியமான விஷயங்களைக் கூறியுள்ளார்.இது ஜென் பயிற்சிக்கு மட்டுமல்ல எங்கும் உதவக் கூடியவை! ஆழமான நம்பிக்கை, அதிக சந்தேகம், குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி.

ஆழமான நம்பிக்கை என்றால் குருவிடம் அசாத்திய பக்தியும் அவர் கடைப்பிடிக்கும் பாரம்பரிய வழிகளில் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருப்பதாகும்.அத்தோடு ஒருவரிடம் அடங்கியுள்ள எல்லையற்ற ஆற்றலையும் அது குறிக்கும். அதிகமான சந்தேகம் என்பது ஆழமான நம்பிக்கைக்கு நேர் எதிரடியாக இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அது தன்னிடம் உள்ளுணர்வு இல்லாமை பற்றி சந்தேகப்படுவதாகும். தன்னைப் பற்றிக் கவலைப்பட்டு “நான்” என்பதில் அவநம்பிக்கை கொள்வது தான் ‘அதிகமான சந்தேகம்’ என்பதாகும். குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி என்பது என்னதான் தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி எடுத்த பயிற்சியைத் தொடர்வதும், வெற்றிகரமாக அதை முடிப்பதும் தான்!

இந்த மூன்றும் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

buddha sandal

உபதேசங்களைக் கேட்டோ, புத்தகங்களைப் படித்தோ ஹகுயின் மாஸ்டர் கூறிய உண்மைகளை சோகோ உணரவில்லை,மாறாக நேரடி அனுபவத்தின் மூலமாகவே அவர் உணர்ந்தார். டைடோகுஜி மடாலயத்தின் வாயிலில் காத்துக் கிடந்து கற்ற பாடங்களே சோகோவுக்கு உதவின. இளமையான இருபதுகளிலிருந்த ஒரு இளைஞனுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவன் உண்மையான ஜென் மாஸ்டராக பின்னால் ஆகி இருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்! சமுதாயம் எப்படித் தான் எவ்வளவு தான் மாறட்டுமே, ஹகுயின் மாஸ்டர் கூறிய மூன்று உண்மைகள் இன்றும் என்றும் எந்தக் காலத்துக்கும் பொருந்துபவை. அவை காலத்தை வென்றவை.

இன்றோ நவீன யுகத்தில் மாணவர்களுக்கு கல்வி மீது நம்பிக்கையே போய் விட்டது. அன்றாட வாழ்க்கையின் மீதும் ஒரு பிடிப்பில்லை. தங்கள் தோல்விகளுக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்வதும் உதட்டைப் பிதுக்கி தனது பொறுப்பை உதறித் தள்ளுவதும் இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறை ஆகி விட்டது.பெரியவர்களுக்கோ இளைஞர்களை விமரிசிப்பதே வேலையாகி விட்டது. பெற்றோர்கள் ஒரு வழியில் போக ஆசிரியர்கள் இன்னொரு வழியில் போக எங்குமே ஒரே குழப்பம் தான்.ஒரு தோழமை உணர்வுடன் இருக்க வேண்டிய மனிதர்கள் ‘தான்’ என்ற குறுகிய வட்டத்திற்குள் அடங்கி விட்டனர்.அதனால் குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கு உலகில் அடி எடுத்து வைக்கும் போதே ஒரே குழப்பமாக இருக்கிறது. அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குத் தைரியத்தையும் தரவில்லை. தன்னை நம்பி வாழவும் சொல்லித் தரவில்லை.

சரி, இந்த ஸ்வர்ண லோகத்தை நீங்கள் ஏன் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சும்மா, ஒரு ஆர்வம் உந்த, அதனால் தான் என்றால் நீங்கள் சோகோ என்பவர் வாழும் இன்னொரு வாழ்க்கை முறையைப் பற்றிச் சிறிது அறிந்தவர்கள் மட்டுமே ஆவீர்கள். மாறாக ஆழ்ந்து இதன் உண்மையை ஆராயப் போனால் இதில் அர்த்தமுள்ள ஒரு புது வாழ்க்கை முறை அமைவதற்கான வாய்ப்பு இருப்பதை நீங்களும் உணரலாம். அன்றாட வாழ்க்கை மேம்படுவதற்கான வாய்ப்பு அது – திருப்தியுள்ள அர்த்தமுள்ள வாழ்வுக்கான வாய்ப்பு.

மரணமே எதிரில் வந்தாலும் கவலைப்படாத வாழ்க்கை! இது தான் முதலாவதும் ஒன்றே ஒன்று என்று சொல்லக் கூடியதுமான ஜென் தரும் இலட்சியம்.

சோகோ (1925-1995) புகழ் பெற்ற பெரிய ஜென் மாஸ்டர் ஆனதோடு ஏராளமான மேலை நாட்டினருக்கு ஜென் பயிற்சியை அளித்தார்.அவரது சுய சரிதம் 2002ஆம் ஆண்டில் Novice to Master:An Ongoing Lesson to the extent of My Own Stupidity என்ற தலைப்பில் வெளியானது.

ஜென் குருமார்களில் ஒரே ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிது பார்த்தோம். ஆனால் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோரை உருவாக்க வேண்டுமெனில் புத்த மதத்தின் அடிப்படை எவ்வளவு ஆழமாக இருக்க வேண்டும்!

sandalwood-buddha-

சின்ன உண்மை
போதிதர்மர் சீனா சென்றவுடன் சக்கரவர்த்தி வூ டி-யைச் சந்தித்தார். சக்கரவர்த்தி, “மிக உயரிய உண்மை எது?” என்று போதிதர்மரைக் கேட்டார். ”இருப்பது பெரும் சூன்யம் தான், உயரிய உண்மை என்று ஒன்றும் இல்லை” என்றார் போதி தர்மர்.

This part 11 of Swarnalokam (story of Zen Master) written by S Nagarajan -தொடரும்