Written by London swaminathan
Date: 24 FEBRUARY 2017
Time uploaded in London:- 21-38
Post No. 3667
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்திய வரலாறு மிக குழப்பமானது;புராணங்களில் உள்ள அரசர் வம்சாவளிகளைவிட முன்னுக்குப்பின் முரணானது. ஆயினும் அதை ஒட்டுப்போட்டு ஓரளவுக்குச் சரிக்கட்டிவிட்டனர். உலகிலேயே முதலில் வரலாறு எழுதியது இந்தியர்கள்தான். சுகர் என்பவர்தான் புராணங்களில் இந்திய வரலாற்றை முதல் முதலில் எழுதினார். புராணம் என்பதற்கான ஐந்து லட்சணங்களில் ஒன்று வம்சாவளி. உலகில் இப்படி எந்த நாட்டிலும் கிடையாது. அதுமட்டுமல்ல இப்படி வரலாறு சொல்லுவதை நைமிசாரண்யம் முதலிய காடுகளில் முனிவர்கள் உட்கார்ந்து 12 வருடங்களுக்குக் கேட்டுள்ளனர். இப்பொழுதுதான் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர். நமது இதிஹாச புராணங்கள் சொல்லுவதை நம்புவோமானால் எகிப்திய வரலாற்றுக்கு முந்தைய வரலாறு நம்முடையது. ஆனால் மிகப்பெரிய வித்தியாசம்—- மெசபொடோமியாவும் (இராக்), சுமேரியாவும் (தெற்கு இராக்), எகிப்தும் பாலைவனப் பகுதிகள் ஆனதாலும் அவர்கள் கற்களையும் களிமண் பலகைகளையும் பயன்படுத்தியதாலும் அவர்களுக்குப் பழைய ஆதாரங்கள் உள்ளன. நமக்கு நதிப் பிரதேசம் என்பதாலும், பருவமழை காரணமாகவும் நாம் ஓலைச் சுவடி/ மரப்பட்டைகளில் எழுதியதாலும் பழைய ஆதாரங்கள் இல்லை. இது நமது துரதிருஷடமே.
எகிப்தில் கார்பன் – 14 (Carbon Dating) விஞ்ஞான முறை ஆய்வுகளில் பெரும் வித்தியாசம் வந்தபோதும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பூசி மெழுகி ஓரளவுக்குத் தட்டிக்கொட்டி ஒரு வரலாற்று தேதிகளைக் கொடுத்துள்ளனர்!
பாலர்மோ ஸ்டோன் (Palermo Stone) (கல்வெட்டு), அபிதோஸ் (Abydos) நகர பட்டியல், டூரின் (Turin) நகர பட்டியல் சக்கரா (Saqqara) நகர பட்டியல் என்று பல்வேறு ஆதாரங்களை ஒட்டுப்போட்டு ஒரு புதிய பட்டியலை உருவாக்கினர். இதற்கெல்லாம் அடிபடையாக அமைந்தது மனிதோ (Manetho) என்பவரின் பட்டியல். எப்படி சுகர் வம்சாவளி பட்டியலை புராணங்களில் கொடுத்தாரோ அதைப் போல மனிதோ ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்.
யார் இந்த மனீதோ?
இரண்டாம் டாலமி பிலடெல்பியாஸ் Ptolemy II Philadelphias (கி.மு.285-246) காலத்தில் ஹீலியோபோலிஸின் (சூரியபுரிHeliopolis) தலைமை குருமார் மானீதோ. (இந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருவதால் இது சம்ஸ்கிருதப் பெயர் என்றும் சொல்லலாம்) இவர் சொல்லும் விஷயம் விநோதமானது:
முதலில் எகிப்தை (Time of the Gods) தெய்வங்கள் ஆண்டன.
அதன் பின்னர் இறந்தோரின் ஆவிகளும் (The spirits of the dead, the demi gods) தேவர்களும் ஆண்டனர்.
அதன்பின்னர் இறந்து போகக்கூடிய மனிதர்கள் (mortal kings) ஆண்டார்கள்.
நமக்குக் கிடைக்காத பல விஷயங்கள் அவருக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்க வேண்டும்! அவர்தான் எகிப்தின் மன்னர் வம்சங்களை 30 வம்சாவளிகளாகப் (Dynasties) பிரித்தார். ஏன் இப்படிப் பிரித்தார்? ஒரு குடும்பத்தினரின் ஆட்சி — ராஜா, அவரது மகன், அவரது பேரன், அவரது கொள்ளுப்பேரன் என்று ஆண்டு வேறு ஒருவர் கைப்பற்றும்வரை —ஒரு வம்சாவளி என்று பிரித்தார். இதைத்தான் இன்றுவரை எல்லோரும் பின்பற்றி வருகின்றனர். இது மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் ஒரு குடைக்கீழ் (Unification) வந்த பின்னர் துவங்கிய வம்சாவளிகளாகும். ஆனால் அதற்கு முன், பழங்காலம் (Archaic Period), வம்சாவளிக்கு முந்தைய அரசர் காலம் (Pre Dynastic Period), என்றெல்லாம் இருந்துள்ளன. அதற்கும் முன்னர் படாரியன் (Badarian) காலம் நகாதா (Naquada) காலம் என்றெல்லாம் சேர்ந்து சுமார் 10,000 ஆண்டு வரலாற்றைக் கொண்டது எகிப்திய வரலாறு. மனீதோ சொன்ன பல அரசர்களுக்கு வரலாற்றுச் சான்றுகளோ, தொல் பொருட் துறை ஆதாரங்களோ கிடையாது!
மேலும் தனித்தனி அரசர் காலமும், வம்சாவளியின் மொத்த ஆட்சிக்காலமும் அவரது பட்டியலில் உள்ளன. ஆனால் இரண்டு கணக்குகளும் ஒத்துப் போவதில்லை. நமது புராணங்களில் உள்ளதைப் போலத்தான்! பெரிய கணக்குப் புலிகளையும் திணற வைக்கிறார் மனீதோ!
முன்னரே எகிப்திய மன்னர் வம்சாவளிகளை பழைய ராஜ்யம் (Old Kingdom) புதிய ராஜ்யம் (New Kingdom), கிரேக்க- ரோமானியர் ஆட்சிக் காலம் என்ற மூன்று பிரிவுகளாகக் கொடுத்துள்ளேன். இடையிடையே குழப்பமான காலம் இருந்ததை இடைப்பட்ட காலம் (First, Second Intermediate Periods) ஒன்று, இரண்டு என்றெல்லாம் பிரித்துள்ளனர்.
கிறிஸ்தவ ஆட்சியாளர் , எகிப்திய நாகரீகத்தின் மிச்ச மீதிகளைச் சிதைத்தனர். வெளிநாட்டுப் படைகள் பீரங்கிப் பயிற்சிக்கு எகிப்திய சின்னங்களைப் பயன்படுத்தினர். கல்லறைத் திருடர்கள், அவைகளைத் தோண்டி, விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர். நமது நாட்டில் கோட்டைச் சுவர்களை உடைத்து வீடுகட்ட கற்களைக் கொண்டு சென்றது போல பலர் செய்தனர். மிச்சம் மீதி, பூமிக்கு அடியில் இருந்ததால் பிழைத்தன.
தேள் (Scorpion) , இரிஹோ (Iryhor)ர், கா (Ka) (கா என்றால் சம்ஸ்கிருதத்தில் பிரம்மா), ஆஹா (Aha), மெனெஸ் Menes (மனு), நர்மேர் (Narmer நரமேரு) முதலிய மன்னர்களுக்குப் பின்னர், எகிப்திய வரலாறு துவங்குகிறது. முதல் இரண்டு வம்சாவளிகளை பழங்காலம் என்னும் பிரிவில் வைக்கின்றனர்
இனி ஒவ்வொரு வம்சாவளியின் சுவையான அம்சங்களைக் காண்போம்:
முதல் வம்சாவளி
முதல் வம்சாவளி மன்னர்கள் சுமார் 300 ஆண்டுக் காலம் ஆண்டனர். எகிப்தின் பிற்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தெற்கே நைல் நதி உற்பத்தியாகும் இடம் முதல் வடக்கில் கடலில் சங்கமிக்கும் வரை ஒரே நாடாக இன்ணைக்கப்பட்டது. மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்பட்டபோதும், அவர்களுடைய கல்லறைகள் எல்லாம் சேதமாக்கப்பட்டன. மன்னருக்கு அடுத்தபடியாக முத்திரைதாங்கிகள் (SEAL BEARERS) எனப்படும் பிரபுக்கள் இருந்தனர். விரிவான, சிக்கலான அதிகார வர்கம் தோன்றியது. இவர்கள் காலத்தில் பிரமிடுகள் தோன்றவில்லை. வெறும் செங்கல் கல்லறைகளில் மன்னர்கள், அதிகாரிகள் புதைக்கப்பட்டனர். இவை எல்லாம் கி.மு.3150 ஐ ஒட்டிய காலத்தில் — இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் — நடந்தன.
அடுத்த கட்டுரைகளில் ஏனைய 29 வம்சங்களைக் காண்போம்.
–SUBHAM–