புராணத்துளிகள்: 49 அக்னிகள்! 28 நரகங்களின் பெயர்கள் (Post No.9546)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9546

Date uploaded in London – –  –29 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 6 கட்டுரை எண் 9478 வெளியான தேதி 11-4-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 7

ச.நாகராஜன்

21. 49 அக்னிகள்!

ஸ்ரீ   மைத்ரேயர் விதுரனுக்குக் கூறியது:-

தக்ஷருடைய பதினான்காம் புதல்வியைப் பற்றி உனக்குச் சொல்கிறேன். அவள் அக்னியின் மனைவி. அவள் அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தாள். ஆகையால் அக்னி தேவன் அவளிடத்தில் மிகுந்த பிரியத்துடன் இருந்தான். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களின் பெயர்கள் முறையே பாவகன்,பவமானன், ஸுசி. அம்மூவரும் தேவதைகளை உத்தேசித்துக் கொடுக்கப்படும் சருபுருடோசம் முதலிய ஹவிர்ப்பாகங்களைப் புஜிக்கும் தன்மை உடையவர்கள். அந்த மூவரே த்ரேதாக்னிகளுக்கு பிரியமுள்ள தேவதைகள் ஆனார்கள். அவர்களிடத்து 45 அக்னிகள் உண்டானார்கள். அவர்களோடு பித்ருக்கள் மூவரும் பிதாமஹன் ஒருவனும் சேர்ந்து 49 அக்னிகள் என்று கூறப்படுகிறார்கள். வைதிகர்கள் யாகங்களிலும் வேதோக்தமான மற்ற கர்மங்களிலும் எந்த அக்னிகளின் பெயரைச் சொல்லி ஆக்னேயமென்ற யாகங்களை நடத்துகிறார்களோ, அவர்களே இந்த 49 அக்னிகளாம்.

         ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயம்

Xxxx

22.பிரகலாதன் தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது

பிரகலாதன் தன்னுடன் விளையாட வரும் பிள்ளைகளைப் பார்த்துக் கூறலானான்: “ அறிவுள்ள ஒரு மனிதன் இந்த  மனிதப் பிறவியிலேயே இளமை முதற் கொண்டு பகவானை அடைவதற்குரிய தர்மங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஜன்மாந்தரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருக்க கூடாது. மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிய ஒன்று. இனியும் மனிதப் பிறவியையே பெறுவோம் என்கின்ற நிச்சயம் இல்லை. ஆகையால் இப்போது நேரிட்டிருக்கின்ற இந்த மனிதப் பிறவியிலேயே பகவத் தர்மங்களைக் கடைப்பிடிப்பீர்களாக! சப்தாதி விஷயங்களை அனுபவித்த பின்னர் கடைசியில்  தர்மங்களைக் கடைப்பிடிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அதுவரையில் இந்த சரீரம் நிலைத்திருக்கும் என்கின்ற நிச்சயம் இல்லை. ஆகையால் இளமை முதற்கொண்டே பகவானை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நிலையற்றதாக இருந்தாலும் கூட இந்த மனிதப் பிறவியே புருஷார்த்தத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். பகவத் தர்மங்களைச் சிறிது செய்தாலும் கூட அவன் மோக்ஷத்தை அடைவான். பகவத் தர்மத்தைச் செய்ய ஆரம்பித்து நடுவில் சரீரம் அழிந்து போனாலும் கூட கெடுதி உண்டாகாது. இந்த மனிதப் பிறவியில் பகவானின் பாதங்களைப் பணிவதே உரியதாம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

Xxxx

23. 28 நரகங்களின் பெயர்கள்!

நாரதர் நாராயணரை நோக்கி நரக வேதனை பற்றியும் அதற்கு உயிர்கள் செய்வனவற்றைப் பற்றியும் கேட்க நாராயணர் நாரதருக்குக் கூறுவது:-

(நரகங்களைப் பற்றி நாராயணர் கூறுவதில் முதலில் நரகங்களின் பெயர்கள் மட்டும் இங்கு தனியே தரப்படுகிறது)

1.தாமிஸ்ரம் 2. அந்த தாமிஸ்ரம் 3. ரௌரவம் 4. மகா ரௌரவம்        5. கும்பீபாகம் 6. காலசூத்திரம் 7.அசிபத்திரம் 8. பன்றி முகம்          9. அந்தகூபம் 10. கிரிமி போஜனம் 11. அக்னிகுண்டம் 12. வஜ்ரகண்டகம் 13. சான்மலி 14. வைதரணி 15. பூயோதம் 16. பிராணரோதம்          17. விசஸனம் 18. லாலாபக்ஷம் 19.சாரமேயாதனம் 20. அவீசி         21. பரிபாதனம் 22. க்ஷாரகர்த்தமம் 23. ரக்ஷோகணம். 24.சூலப்ரோதம் 25. தந்தசூகம் 26. வடாரோதம் 27. பர்யாவர்த்தனகம் 28. சூசீமுகம்

இப்போது என்னால் சொல்லப்பட்டனவும் சொல்லப்படாதனமுவான அநேக விதமான பாப பேதங்களுக்குத் தக்கபடி நரக பேதங்களும் அவைகளில் அனுபவிக்கப்படும் துன்ப பேதங்களும் உள்ளன.

(குறிப்பு :- எந்த பாவங்களுக்கு எந்த நரகம் என்பது தனியே தரப்படும்)

  • ஸ்ரீ தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் 22,23ஆம் அத்தியாயங்கள்

***

tags-  புராணத்துளிகள், 49 அக்னிகள், 28 நரகங்கள்,