பூமி தினம் : 50வது ஆண்டு விழா! (Post 7864)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7864

Date uploaded in London – – 22 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஏப்ரல் 22 – பூமி தினம் : கோகுலம் கதிர் ஏப்ரல் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதியதோர் சபதம் செய்வோம்; பூமியைக் காப்போம்!

பூமி தினம் : 50வது ஆண்டு விழா!

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் உலக மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்காவில் முதல் பூமி தினம் கொண்டாடப்பட்டது;  ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியர் இரண்டு கோடிப் பேர் இதில் பங்கு கொண்டனர். இன்றோ 2020இல் 50வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் 192 நாடுகளில் பல கோடி மக்கள் பங்கு கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியாக இது மாறி விட்டது.

அமெரிக்காவில் விஸ்கான்ஸின் செனேட்டரான கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson) அரும்பாடுபட்டு ‘எர்த் டே’-ஐ – பூமி தினத்தை 1970இல் உருவாக்கினார்.

1990 ஆம் ஆண்டு வாக்கில் இது உலகளாவிய இயக்கமாக மாறியது. 2009ஆம் ஆண்டு ஐ.நா.சபை இதை அதிகாரபூர்வமான பூமி காக்கும் தினமாக அறிவித்ததோடு பெயரை அகில உலக அன்னை பூமி தினம் – (International Mother Earth Day) என்று மாற்றியது.

   பூமி தினத்திற்கெனத் தனியாக ஒரு கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான ‘E’ மற்றும் ‘O’ ஆகியவை Environment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதின்மூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

பூமி தினத்திற்காகத் தனிப் பாடல் ஒன்றும் உண்டு.

2009ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ, ‘எர்த்’ என்ற ஒரு விளக்கப்படத்தை அருமையாகத் தயாரித்து அதில் நான்கு விலங்கினக் குடும்பங்கள் குடிபெயர்ந்து செல்லும் பாதையை விளக்கியது.

2011ஆம் ஆண்டு பூமி தினத்தன்று 280 லட்சம் மரங்கள் ஆப்கானிஸ்தானில் நடப்பட்டு அரிய சாதனை படைக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர்.

பூமி தினத்தன்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதக் கொண்டாட்டம் உண்டு. குழந்தைகள் குப்பைகளை அகற்றுகின்றனர். மாணவ, மாணவியர் மரங்களை நடுகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் பவளப்பாறைகளச் சுத்தம் செய்கின்றனர்; மக்கள் ஆங்காங்கே இது பற்றிய திரைப்படங்களைக் காண்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். சாமான்யனிலிருந்து நாட்டுத் தலைவர்கள் வரை  பூமி நமது சந்ததியினருக்கு எதிர்காலத்தில் சரியானபடி ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்த கொள்கையையும் அதற்கான வழிமுறைகளையும் யோசித்துப் பல திட்டங்களை அமுல் படுத்துகின்றனர்.

பிரபஞ்சத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏதுவாக, மிகவும் அரிதாக, தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை உலக மக்கள் அனைவரும் நேசித்துக் கொண்டாடும் தினம் இது!

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்கு யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் ( Woppo  Johannes Ochkels) விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக சிந்தனைகள் தோன்றின. 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி புற்று நோயினால் மரணமடைந்த அவர் மருத்துவ மனையில் படுத்தபடியே தான் இறப்பதற்கு முதல் நாளன்று பூமி வாழ் மக்களுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி தந்தார்.

அதில் உருக்கமாக உணர்ச்சி ததும்ப, ‘தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக்கூடாது; இதை எப்படியேனும் எல்லோரும் இணைந்து காக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

“இந்த பூமி மிக்க மதிப்பு வாய்ந்தது. இது  ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. இதை எப்படியேனும் காக்க வேண்டும்” என்றார் அவர்.

இப்போது பூமிக்கு இருக்கும் ஆபத்துக்கள் பல!

இன்று வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுவான கார்பன் மானாக்ஸைடு பூமியின் வெப்பம் கூடி பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.

இந்த வாயுவே தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம் மார்பு வலி, கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை கூடுதலாக விளைவிக்கும் இதைக் கட்டுப்படுத்தினால் பூமியும் பிழைக்கும்; பூமி வாழ் மக்களும் பிழைப்பர்.

அடுத்து இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பான பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடு அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் இன்று அழிந்து பட்டு வருகிறது. பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்த்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கியச்  செய்தி!

பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே

பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது.

மனம் போன போக்கில் மரங்களை வெட்டி வீழ்த்திச் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டை பலரும் செய்து வரும் இந்தக் காலத்தில் பூமி தினத்தில் பூமியைக் காக்க சூளுரை கொண்ட பலர் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்.

எடுத்துக்காட்டாக தனிநபர் ஒருவர் தனியாகவே பெரும்காட்டை உருவாக்கியதைச் சுட்டிக் காட்டலாம்.

கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav Payerig) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார். 550 ஹெக்டேர்  நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்துள்ள காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரம் ஏதும் இல்லாததால் மடிந்தன. இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்று அமைப்பது என்று உறுதி பூண்டான். இடைவிடாத உழைப்பினால் காட்டையும் உருவாக்கி பாம்புகள், பறவையினங்கள், யானைகள் ஏன் புலிகள் கூட விரும்பி வசிக்கும் காட்டை உருவாக்கினான். ஜாதவின் செல்லப்பெயர் மொலாய். அற்புதமான காட்டை மொலாய் உருவாக்கிக் காட்டிய அதிசயத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த மக்கள் இந்தக் காட்டிற்கு மொலாய்க் காடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பூமியைக் காக்கும் ஒரு அங்கமாகவும் மனித குல முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் அடையாளமாகவும் பொலிவியா நாட்டின் அன்னை பூமிச் சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்கு அரசியல் சட்டங்கள் தரும் உரிமை போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை பூமிச் சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை, மனிதன் ஏற்படுத்தும் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை, சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை, இயற்கையின் சமச்சீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுப்பதற்கான உரிமை, மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு!

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்” என்பது தான்!

பூமியின் இத்தனை அருமை பெருமைகளையும், உண்மைகளையும் உணர்ந்து பூமியைக் காக்க எப்பாடும் படுவேன் என்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டு சூளுரை எடுக்க வேண்டிய ஒரு தினம் பூமி தினம்! ஏப்ரல் 22ஐ மறவாதீர்!

பூமி தினம், 50வது ஆண்டு விழா, earth day

****