மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63 (Post No.10,215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,215

Date uploaded in London – 16 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 63

பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள் : T.N. இராமச்சந்திரன்

      சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளையின் சார்பில் 7-3-2002 அன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகச் சார்பில் ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்திய அன்றே இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

48 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பாரதி ஆய்வுகள் – இதுவரை, பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று அத்தியாயங்களில் சிந்தனையைத் தூண்டி விடும் விஷயங்கள் அடுக்கடுக்காகத்த் தரப் படுகின்றன.

முதல் அத்தியாயம் மிக விரிவாக பாரதியார் பற்றிய ஏராளமான நூல்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.

‘பாரதியார் ஒரு விராட் புருஷர்; அவரை உங்கள் சிறு விரலால் அளந்து காட்டத் துணியாதீர்கள்’ என்ற இந்த நூலாசிரியரின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது.

பாரதியாரைப் பற்றிய பல விவரங்கள் பிழைபடப் பல நூல்களிலும் தரப்பட்டுள்ளன. (சில விவரங்களை தமிழ் உலகம் அறியவே இல்லை.)

இவற்றைக் களைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த ஆதங்கம்.

பாரதியின் நூல்களுக்குப் பர்மா அரசாங்கம் தடை விதித்தது. அதையொட்டித் தமிழ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தடை விதித்தவர் பின்னாளில் காங்கிரல் அமைச்சராக விளங்கிய பி. சுப்பராயன் அவர்கள். இதைக் க்ண்டு

கொதித்தெழுந்தார் சத்தியமூர்த்தி. அவரது கிடுகிடுக்க வைக்கும் ஆங்கிலப் பேச்சுக்கள் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்கன.

பாரதியார் நண்பர்கள் பற்றி வந்துள்ள விவரங்களில் கபாலி சாஸ்திரியார் இடம் பெறாததை சுட்டிக் காட்டும் நூலாசிரியர் அது பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பாரதியாரைப் பற்றி வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் திரு இராமச்சந்திரன்.

இதுவரை வந்த ஆய்வுகளை முதல் அத்தியாயத்தில் சித்தரிக்கும் அவர், இரண்டாவது அத்தியாயமான ‘பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் முயற்சிகளை விவரிக்கிறார்.

திரு சீனி விசுவநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள கால வரிசைப்படியான பாரதியார் எழுத்துக்கள் என்ற நூலில் 263 தலைப்புகளில்  24-1-1897 தொடங்கி 29-12-1906 வரையிலான எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.

பாரதியாரின் வடமொழி அறிவு பற்றித் தனி ஒரு நூல் வேண்டும் என்ற நூலாசிரியரின் கூற்றை அனைவரும் ஆமோதிப்பர். 

சூரத் காங்கிரஸ் கூட்டத்தை வருணித்து மகாகவி மூன்று மொழிகளைக் கலந்து  காங்கிரஸ் கீதை என்று ஒரு பனுவல் படைத்தார்.

யாரும் அறியாத செய்தி இது. இதில் உள்ள ஒரு சுலோகத்தை – தேவி வஸந்தானந்தா தந்ததை – இந்த நூலில் காண முடிகிறது:

“தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேத யுயுத்ஸவஹ

மாமகாகஹ எக்ஸ்ட்ரீமிஸ்ட் மாடரேட்ஸ் சைவ கிமகுர்வத ஸஞ்சயா”

பாரதியின் பல கவிதைகளில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருள் கண்டு அதை விவரிப்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.

காணி (நிலம் வேண்டும் என்ற பாடல்) அம்பு (அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் என்ற பாடல்) ஆகிய சொற்களுக்கு உண்மையான அர்த்தத்தை விவரிக்கிறார்.

சீனி.விசுவநாதன் வெளியிட்டுள்ள பாரதி நூற்பெயர்க்கோவை என்ற தொகுப்பு நூலில் சுமார் 370 நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இதில் 275 நூல்கள் விவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர் பற்றி 1982  முடிய 1,50,000 நூல்கள் வெளியாகி இருப்பதையும் வருடத்திற்கு சுமார் 3000 நூல்கள் ஷேக்ஸ்பியர் பற்றி வெளியாகி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார் திரு இராமச்சந்திரன். ஷேக்ஸ்பியர் பற்றிய வினா விடை நூல்கள் நிறைய உள்ளன. அது போல பாரதியார் பற்றியும் வினா- விடை நூல்கள் வேண்டும். 1000 கேள்விகள் கொண்ட நூறு நூல்களை வெளியிட வேண்டும் என்பது இவரது ஆசை. அவ்வளவுக்கு விஷயங்கள் உள்ளன.

மூன்றாம் அத்தியாயமான, ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும், பாரதியார் போற்றிய நம் நாட்டு, வெளி நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்பு வரையப்பட வேண்டும். உலக அளவில் பாரதியார் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற முத்து முத்தான யோசனைகளை எதிர்கால ஆய்வாளருக்குத் தருகிறார் நூலாசிரியர்.

பல பிழையான தகவல்களை அடியோடு களைந்து அதிகாரபூர்வமான பாரதியார் வாழ்க்கை பற்றிய நூல் ஒன்று வேண்டும் என்பதைச் சொல்வதோடு இனி பிழையான கருத்துக்களைச் சொல்லவும் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

நூலின் இணைப்பாக மாதிரிப் புதிர் வினா- விடை ஒன்றும் தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால ஆய்வுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் நல்லவொரு அரிய சேவையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.

பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

***

சேக்கிழார் அடிப்பொடி திரு T.N. இராமச்சந்திரன் பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தையும் கரைத்துக் குடித்தவர். வழக்கறிஞராக இருந்தவர் தமிழ் இலக்கியத்தின் பால் தீராக் காதல் கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார்; சுமார் 50000 நூல்களை தனி ஒருவராகத் தனக்காகச் சேகரித்து வைத்த பெரும் மேதை. 18-8-1934இல் பிறந்த அவர் சமீபத்தில் 6-4-2021 அன்று மறைந்தார்.

tags- பாரதி , எதிர்கால ஆய்வுகள் , T.N. இராமச்சந்திரன்,