‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ (Post No.3794)

Written by London swaminathan

 

Date: 6 APRIL 2017

 

Time uploaded in London:- 20-27

 

Post No. 3794

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும், செம்புலப்பெயநீராரும்

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று குறுந்தொகை. அருமையான காதல் பாடல்கள் உள்ள நூல். அதில் ஒரு அருமையான பாடல். காதலர் மனம் ஒன்றுபடுவதற்கு செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் உவமையாக கூறப்பட்டுள்ளது. செம்மண் நிலத்தில் மழை நீர் புரண்டு ஓடுவதை நேரில் கண்டவர்களுக்கு இந்த உவமையின் பொருள் நூறு மடங்கு கூடுதலாகவே விளங்கும்.

 

இதை எழுதிய புலவர் பெயர் தெரியாததாலோ அல்லது உவமை மிகவும் பிரசித்தமடைந்ததாலோ அவருக்கு செம்புலப் பெயனீரார்  என்றே நூலில் பதிவு செய்துவிட்டனர். இது போல சுமார் 20 புலவர்களின் பெயர்கள் இப்படி அவர்களுடைய சொற்றொடர்களைக் கொண்டே சூட்டப்பட்டுள்ளது. ரிக்வேதத்தைத் தொகுத்தவர்கள் கையாண்ட முறை இது. அதிலும் இவ்வாறு பல புலவர்களின் பெயர்கள் சொற்றொடரின் மூலம் அறியப்படுகின்றது.

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

–குறுந்தொகை 40, செம்புலப்பெயனீரார்

 

பொருள்:

காதலன் கூறுகிறான்: “என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல நமது உள்ளங்கள் (தாமாகவே) ஒன்றுபட்டன.

 

 

காதலர்களின் மனம் ஒன்று பட்டதற்கு இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்தியது போல, சங்க காலத்துக்கு முன் வாழ்ந்த காளிதாசரும் மழை நீர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

 

ஒரே சுவையுடைய மழை நீர் எங்கெங்கு விழுகின்றதொ அந்தந்த நிலத்தின் சுவையைப் பெறுவதுபோல சத்வம் என்ற ஒரே குணமுடைய இறைவன், கைக்கொள்ளும் குணங்களுக்கு ஏற்ப தொழில்களையும் பெயர்களையும் ஏற்கின்றீர் (சத்வ குணம் காரணமாக விஷ்ணுவாகவும், ரஜோ குணம் காரணமாக பிரம்மனாகவும், தமோ குணம் காரணமாக ருத்திரத் தனமையையும் அடைகின்றீர். எப்படி நீர் என்பது ஒன்றுதானோ அதே போல இறைவன் ஒருவனே.

ரசாந்தராண்யேகரசம் யதா திவ்யம் பயோஸ்ச்னுதே

தேசே தேசேகுணேஷு  ஏவம் யதாத்வம்அவிக்ரியஹ

— ரகு வம்சம் 10-17

 

செம்புலப் பெயனீரார் மன ஒற்றுமை பற்றி சொன்னார்; காளிதாசன் மும்மூர்த்திகளும் ஒருவரே என்ற பேருண்மையைச் சொன்னார்; இருவரும் பயன்படுத்திய உவமை– மழை நீர்.

 

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை நீர், முத்துச் சிப்பிகளின் வாயில் விழுந்தால் அது எப்படி முத்தாகி றதோ அது போல ,ஆசிரியர் சொல்லும் சொல், நல்ல மாணவன் காதில் விழுந்தால் முத்தாகும் என்று மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தில் காளிதாசன் சொல்லும் உவமை தமிழில் உள்ளதையும், காடக விதைகள் எப்படி கலங்கிய நீரை தெளிவாக்குமோ அதுபோல முட்டாள்களும்   அறிவாளிகளுடன் இருக்கையில் மனத் தெளிவு பெறுவர் என்ற  உவமை தமிழில் உள்ளதையும் முன்னர் இரண்டு கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

 

பெண்களின் கொப்பூளை (நாபியை) நீர்ச் சுழலுக்கு ஒப்பிடுவதைக் காளிதாசன் காவியங்களிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் காணலாம்.

 

காளிதாசன் கையாண்ட 1300 + உவமைகளில் சுமார் 250 உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படுவதால் சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று முந்தைய பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன்.

 

காளிதாசன் சொல்லும் இன்னொரு அருமையான உவமை ரகுவம்சத்தில் வருகிறது (5-54). பிரியம்வதன் என்பது என்பெயர் . என்னை, யானையாகப் போகும்படி மதங்க முனிவர் சபித்தார். நான் அவரை வணங்கிய பின்னர் அவரது கோபம் தணிந்தது. சாந்தமாகிவிட்டார். நீர் என்பது வெந்நீர் ஆவது தீயின் சேர்க்கையாலோ அல்லது சூரிய ஒளியின் சேர்க்கையாலன்றோ! தண்ணீரின் இயற்கையான குணம் குளுமைதானே! (முனிவர்களின் இயற்கைக் குணம் சாந்தம்தானே).

–Subham–

Leave a comment

2 Comments

  1. அருமையான பதிவு ..தொடரட்டும் தங்களது சேவை ..வாழ்த்துக்கள் .

Leave a comment