
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9321
Date uploaded in London – –28 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!
THIS TALK WAS BROADCAST VIA FACEBOOK, YOU TUBE AND ZOOM ON 28-2-2021. IF U WANT TO HEAR IT, PLEASE GO TO FACEBOOK.COM / GNANAMAYAM
“நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை தன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின் இருஞ் சுளைகளும்
கீறி நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே”
திருஞானசம்பந்தர் திருநாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத் ஆகும். 11755 அடி உயரத்தில் இமயமலைத் தொடரில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் ரிஷிகேசத்திலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
காலத்தை வென்று, தொன்று தொட்டு நிலைத்திருக்கும், இந்த சிவ ஸ்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
கே என்றால் தலை; தாரம் என்றால் தரிப்பது. ஆக கேதாரம் என்றால் சிவபிரான் கங்கையைத் தலையில் தரித்து அருள் புரிந்த தலம் கேதாரமாகும்.
இன்னொரு பொருள் : கே என்றால் இந்திரியம்; தாரம் என்றால் அவைகளை அடக்கி வெல்வது. பொறி புலன்களை வெல்லும் தலம் கேதாரம். இன்னொரு பொருள்: கே என்றால் பிரமரந்திரம் தாரம் என்றால் அதிலிருந்து வடியும் அமிர்த தாரை. இப்படி கேதாரம் பற்றிய விளக்கத்தை திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தருகிறார். கேதார்நாதர் கோவில்.
தெற்குப் பார்த்த கோவில். எதிரில் பெரிய நந்தி. இரு புறமும் துவாரபாலகர்கள். இறைவன் திரு நாமம் :கேதார நாதர் இறைவி : கேதார கௌரி. கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் குந்தி தேவி, தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, கிருஷ்ணர் ஆகியோருடைய சிலாவுருவங்கள் உள்ளன.

பாண்டவர்கள் கடைசியில் மகாபிரஸ்தானம் என்ற விரதத்தை மேற்கொண்டு இங்கு வந்தார்கள். கேதார்நாதரை வழிபட்டு வடகீழ் திசையில் உள்ள ஒரு மலையின் வழியாக சொர்க்கம் புகுந்தார்கள். அந்த மலையை இங்கிருந்தே தரிசிக்கலாம்.
பாண்டவர்களைப் பற்றிய இன்னொரு வரலாற்றை ஸ்கந்த புராணம் விவரிக்கிறது. உற்றார், உறவினரைக் கொன்றதால் ‘கோத்ர ஹத்யா’ என்ற பாவத்திற்குள்ளாகி, மனம் வருந்திய பாண்டவர்கள், சிவபிரானை தரிசித்துத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வர, சிவபிரானோ அவர்களுக்கு அருள் புரிய மனம் இன்றி ஒரு காளையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு ஓடலானார். அவரைத் துரத்திச் சென்ற பீமன் அவர் வாலைப் பிடிக்க வால் இருந்த இடம் கேதாரமானது. மனம் கனிந்த சிவபிரான் அங்கு தோன்றி பாண்டவர்களுக்கு அருள் பாலித்தார். அவரது உடல் இன்னும் நான்கு இடங்களில் தோன்றின. இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படுகிறது.
இன்னொரு வரலாற்றின் படி கேதார்நாத்தை அடுத்துள்ள பத்ரிநாத்தில் நரனுடன் தவம் புரிய விரும்பிய விஷ்ணு தன் விருப்பத்தை சிவபிரானிடம் தெரிவிக்கவே, அவர் அதற்கு இசைந்து கேதார்நாத் சென்றார். இதனால் மனம் மிக மகிழ்ந்த விஷ்ணு யாரெல்லாம் தன்னை பத்ரிநாத்தில் தரிசிக்க விரும்புகிறார்களோ அவர்கள் முதலில் கேதார்நாத் சென்று கேதாரநாதரைத் தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்க வரவேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார்.
இங்கு க்ஷீ ர கங்கை, மது கங்கை, மந்தாகினி, சொர்க்கதுவார கங்கை, சரஸ்வதி என பஞ்ச கங்கை எனப்படும் ஐந்து நதிகள் ஐந்து புறங்களில் மகாமலைகளில் இருந்து கீழே வந்து ஒன்று படுகின்றன.
பஞ்ச கங்கை போல இங்கு பஞ்ச குண்டங்கள் உண்டு. அமிர்த குண்டம், அம்ச குண்டம், ரேதச குண்டம், ஈசான குண்டம், உதக குண்டம் என்பவையே அந்த ஐந்து குண்டங்கள். ஐந்தாவது குண்டமான உதக குண்டம் மிகவும் புனிதமானது. அது சிறு கோவிலுக்குள் இருக்கிறது. உதகம் என்றால் நீர் என்று பொருள்.
‘கேதாரம் உதகம் பீத்வா, புனர் ஜன்ம ந வித்யதே’ என்ற மொழியால், இங்கு இந்த தீர்த்தத்தைப் பருகியவர்களுக்கு மறு பிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.
‘ஸ்ரீ சைலம் தர்சனாத் முக்தி, வாரணாஸ்யாம் ம்ருதஸ்யச
கேதாரம் உதகம் பீத்வா, ஸுஷூம்னாடீச தர்சனாத்’ என்ற ஸ்லோகத்தால் ஸ்ரீ சைலத்தில் தரிசித்தால் முக்தி, காசியில் மரித்தால் முக்தி, கேதாரத்தில் இந்த உதக குண்டத்தில் உள்ள நீரைப் பருகினால் முக்தி, நடுநாடியாகிய ஸுஷூம்னாவை தரிசித்தால் முக்தி என்பது பெறப்படுகிறது.
கேதார்நாதரின் கோவில் தீபாவளியன்று மூடப்படும். பின்னர் வைகாசி பூர்வபட்சம் திருதியை அன்று திறக்கப்படும். குளிர்காலம் என்பதால் பனிக்கட்டியால் கோவில் மூடி இருக்கும். அதை ஆறு மாதம் கழித்து பனிக்கட்டிகளை அகற்றி, திறக்கும் போது, பெருமானுக்குச் சாத்திய மலர் வாடாமலும், ஏற்றி வைத்த தீபம் அணையாமலும் இருக்கும்.
இங்கு தான் ஆதிசங்கரர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது சமாதி, கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ளது.
ஒரு புறம் பொங்கிப் பிரவாகித்துத் துள்ளிக் குதித்து ஓடும் மந்தாகினி நதி, மறுபுறம் நெடிதுயர்ந்த மலைகள் இவற்றின் நடுவே செல்வது புனித யாத்திரை மேற்கொண்டோரை பரவசப்படுத்துகிறது. கௌரிகுண்டம் என்னும் இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரம், சிறிய பாதை வழியே நடந்தே சென்று கேதாரநாதர் கோவிலை அடைய வேண்டும். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள், நூற்றுக் கணக்கான அருவிகள், பாய்ந்து ஓடும் மந்தாகினி நதி ஆகியவை, இயற்கை வளத்தின் சிகரமாகத் திகழும் இமயமலைப் பகுதி, இறைவனின் உறைவிடமே தான் என்பதைக் கணம் தோறும் சொல்லிக் கொண்டே இருக்கும்.
இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் கேதாரநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.

சுந்தரர் அருள் வாக்கு:-
“பண்ணின் தமிழ் இசைபாடலின் பழ வேய் முழவு அதிரக்
கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறியக்
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீ ரே”
நன்றி வணக்கம்!

TAGS- கேதார்நாத்