
Picture of Meenakshi sundaram pillai from wikipedia
Date: 31 DECEMBER 2017
Time uploaded in London- 6-38 am
Written by S NAGARAJAN
Post No. 4567
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்
பிள்ளைமார் வாழ்க!
ச.நாகராஜன்
1
இந்தக் கட்டுரையின் தலைப்பில் ஒரு குறை இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் கடைசி வரியில் நிவர்த்தி செய்து விடுகிறேன்.
ஜாதிப் பேரைச் சொல்லலாமா என்று சிலர் ஆதங்கப்படலாம்.
அட, தமிழுக்கும், ஹிந்து மதத்திற்குகும் தேசத்திற்கும் தொண்டு இழைத்தவர்களைப் பாராட்ட ஜாதிப் பெயரைச் சொல்வதில் என்ன ஐயா, தவறு?
பிள்ளைமார் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அது ஆற்றிய பெரும் சேவையை பெருங் களஞ்சியமாக அல்லவா தொகுக்க வேண்டியிருக்கும்!
இருந்தாலும் ஒரு சில பெயர்களையாவது நினைத்துப் பார்க்கலாமே!
தமிழன் எப்போதும் நன்றி மறக்கமாட்டான், இல்லையா?
2
உலகில் சமீப கால வரலாற்றில் முறைப்படுத்தப்பட்ட ஆவணம் நிருபிக்கும் உத்தம அவதார புருஷர் வடலூர் வள்ளலார் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் வடலூர் இராமலிங்கம் பிள்ளை! (தோற்றம் 18-12-1822 ஒளி உருவமாக மறைந்த தேதி 5-12-1879) அவர்களின் அருட்பா பற்றி அறிமுகமே வேண்டாம். கொல்லாமையையும் அனைவருக்கும் அன்ன தானத்தையும் வலியுறுத்திய மகான் ஒளி உருவமாக மறைந்தார்.
அவரது பெருமையை முழுதுமாகச் சொல்ல முடியுமா, என்ன?
3
தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான சேவை செய்த ஏராளமானோரில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.
சமீப காலத்தில் வாழ்ந்த மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை மறந்தோம் என்றால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே லாயக்கில்லை என்பது உண்மை.
இவரது பெருமையை இவரது அற்புதமான சீடர் மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாதையர் விரிவாக எழுதியிருக்கிறார். (இரண்டு தொகுதிகள் உள்ள நூல்)
ஐயர், பிள்ளை என்ற ஜாதி பேதம் அங்கு இல்லை. தமிழால் பிணைக்கப்பட்டனர் இருவரும். தனது குருவின் பெருமையை இறுதி வரை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர் அவர்கள்.
பின்னாளில் வந்த பிசாசுகளே ஜாதி வேற்றுமையை எங்கும் கிளப்பி அது இன்று பெரிய பூதமாக மாறி நம்மை அழித்து வருகிறது.
மகா வித்துவான் (தோற்றம் 6-4-1815 மறைவு 1-2-1876) சுமார் ஒரு லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.
ஒரு லட்சம் பாடல்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தமிழ் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் சுட்டிக் காட்டி இறை புகழ் வெளிப்படுத்தும் ஒரு லட்சம் என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கை கொண்ட பாடல்களை அவர் யாத்துள்ளார்.
95க்கும் மேற்பட்ட புராணங்கள், இதர இலக்கியங்கள்!!
தமிழுக்குப் பெருமை! தமிழருக்குப் பெருமை!! பொதுவான இலக்கிய உலகிற்கே உலகளாவிய அளவில் பெருமை.
பிள்ளைமார்களுக்கும் பெருமை (ஆனால் சரியான விதத்தில் அவரைக் கொண்டாடாமல் விட்டு விட்டார்களோ!)
கவிச் சக்கரவர்த்தி கம்பன் பத்தாயிரம் பாடல்களைப் புனைந்து கவி சிகரத்தில் ஏறினான்.
ஆனால் மகா வித்துவானோ ஒரு லட்சம் பாடல்களைப் புனைந்துள்ளதால் அவரை “பத்துக் கம்பன்” என்று அழைக்கிறார்கள்.
இவரை என்ன சொல்லிப் புகழ? என்ன பட்டம் தந்தாலும் அது சற்று சிறிதாகத் தானே இருக்கும்!
4

அடுத்து இசையும் தெய்வமும் தமிழருக்கு ஒன்றே!
இசை உலகில் மிக பிரம்மாண்டமான அரிய சாதனை புரிந்த ஒரு சக்கரவர்த்தி இருக்கிறார்.
அவர் தான் நாதசுர சக்கரவர்த்தி!
திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை!
டி. என். ராஜரத்தினம் பிள்ளை ( தோற்றம் 27-8-1898 மறைவு 12-12-1956) அவர்களின் பெருமையை முற்றிலும் எழுத்தில் வடிக்க முடியுமா?
என் தந்தையார் (தினமணி வெ.சந்தானம் அவர்கள்) அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் ஒரு இடத்தில் வாசிக்க வரப் போகிறார் என்றால் முன் கூட்டியே (தஞ்சை ஜில்லாவில்) அனைத்து கிராம மக்களுக்கும் தெரிந்து விடும். நடந்தும், வண்டி கட்டிக் கொண்டும் அலை அலையாக மக்கள் வருவர். பல மைல்களுக்கு அப்பால் வரும் போதே நாதசுரத்தின் சுநாதம் அனைவரையும் மயக்கும். மயங்கி நிற்போம்” என்று கூறினார்.
(இந்த சந்தர்ப்பத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களும் அவரது மாப்பிள்ளை மௌனகுருசாமி அவர்களும் என் தந்தையார் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும். பற்றையும், பாசத்தையும் இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன்)

பெரிய புத்தகமாக எழுத வேண்டிய நாதசுர சக்ரவர்த்தியின் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விழைகிறேன்.
இதை எழுதியவர் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.
கலைமகள் 1994ஆம் ஆண்டு தீபாவளி மலரில், “சுத்த மத்யமம் உத்தம மத்யமம் ஆனது எப்படி?” என்ற கட்டுரையில் வரும் ஒரு பகுதியே இது:
இன்றைய நிலையில் இந்த நாகசுர வாத்தியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவர் என்று சொல்லலாம்!
முன்பெல்லாம் – அதாவது திருவாவடுதுறையார் ஒழுங்கு பண்ணுவதற்கு முன்பாக, நாகசுரத்தில் சுத்த மத்யமம் பேசாது. வாசிப்பில் அது சுத்த மத்யமாகவும் இல்லாமல், பிரதி மத்யமாகவும் இல்லாமல், இரண்டிலும் சேராத – இரண்டுக்கும் இடைப்பட்டதாக – இரண்டும் கெட்டானாக, ஒன்று ஒலிக்கும்.
அதை எப்படி அழைப்பது? வித்வான் அதைச் செல்லமாக, செல்ல மத்யமம் என்று அழைத்தார்கள்!
ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்கள் நாகசுரத்தில் சுத்த மத்யம் சுகமாகப் பேசும். அது எப்படி? அது தான் பிள்ளையவர்கள் வாசிப்பில் மட்டுமல்லாது – வாத்தியத்திலும் செய்த புதுமை!
பிள்ளையவர்கள் என்ன செய்தார் தெரியுமா? நாகசுரம் தயார் செய்யும் ஆச்சாரியார் ஒருவரைத் தம்முடன் வைத்துக் கொண்டார். தம் கையில் ஒரு நாகசுரத்தை எடுத்துக் கொண்டார்.
துளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிப் போட்டுக் கொண்டே வந்தார். அவ்வப்போது அதில் வாசித்துப் பார்த்தார். ஒரு சின்னக் குழாய் மாதிரி செய்து நாகசுரத்தோடு பிட் அப் செய்து கொண்டார். வாசித்தார்; பல மாதங்கள், பல நாகசுரங்களை இப்படித் துளையிட்டு வாசித்து அசுர சாதனை செய்தார். முயற்சி வீண் போகவில்லை.
ஒரு நாள் சோதனையில் சுத்த மத்யமம். உண்மையிலேயே சுத்தமயமாக, உத்தமமாக வாசித்தது. பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. அந்த நாகசுரத்தையே வாசிப்புக்கு ஏற்ற நாகசுரமாக்கினார். வாசித்தார். வாழ்நாள் முழுதும் – இசையை உபாசித்தார்; நாதோபாசனை புரிந்தார்.
இன்று நாகசுர வித்வான்களுக்கு எல்லாம் அருமையான நாகசுரம் கிடைத்திருக்கிறது, அற்புதமாக வாசிக்கிறார்கள் என்றால், அது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கருணைக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.
*
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படிப்பட்ட இசை மேதையின் கடின உழைப்பையும் நாத உபாசனையையும் சுட்டிக் காட்டி விட்டார்!
5
கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தில் மிகச் சிறிய அளவே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே, கட்டுரையின் அடுத்த பகுதியையும் எழுத வேண்டியது தான்!
அது சரி, கட்டுரை தலைப்பில் உள்ள தவறை நிவர்த்தி செய்கிறேன் என்றீர்களே, அதை செய்வீர்களா என்று கேட்கிறீர்களா.
‘இந்தக் கட்டுரையின் கடைசி வரி’ என்று எழுதி விட்டேன், அல்லவா, அதைச் செய்து தான் ஆகவேண்டும்.
காலக்ஸி போன்ற பிள்ளைமார்கள் நிரம்பி இருக்க அவர் தம் பெருமையை ஒரு கட்டுரையில் அடக்க முடியவில்லை.
தலைப்பில் பிள்ளைமார் வாழ்க என்று எழுதியதில் ஒரு வாழ்க
தான் இருக்கிறது. ஒரு வாழ்க எங்காவது போதுமா?
வாழ்க, வாழ்க, வாழ்க…. என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்! இப்போது நிவர்த்தி செய்து விட்டேன், தவறை! பிள்ளைமார் வாழ்க, வாழ்க, வாழ்க…!!!
*** (அடுத்த கட்டுரை தொடரும்)